ஏற்றம் தந்த குதிரையேற்றம்!

மும்பையில் சென்ற வாரம் நடைபெற்ற தேசிய இளையோர் குதிரையேற்ற சாம்பியன்ஷிப் 2021 (இக்வெஸ்ட்ரியன்) போட்டியில் கோவை மாணவர்கள் 1 தங்கப் பதக்கமும், 4 வெள்ளிப் பதக்கமும் வென்று சாதனை படைத்துள்ளனர்.
ஏற்றம் தந்த குதிரையேற்றம்!
Updated on
2 min read


மும்பையில் சென்ற வாரம் நடைபெற்ற தேசிய இளையோர் குதிரையேற்ற சாம்பியன்ஷிப் 2021 (இக்வெஸ்ட்ரியன்) போட்டியில் கோவை மாணவர்கள் 1 தங்கப் பதக்கமும், 4 வெள்ளிப் பதக்கமும் வென்று சாதனை படைத்துள்ளனர்.

இந்தப் போட்டியில் பல்வேறு மாநிலங்களில் இருந்து 700 சிறார் குதிரை வீரர்கள் பங்கேற்றனர். குழந்தைகள் தனி பிரிவில் ஆதவ் கந்தசாமி தங்க பதக்கமும், குழந்தைகள் அணிகள் சார்பாக ஆதவ் கந்தசாமி, ஹன்சிகா ஸ்ரீனிவாசன், ஹர்ஷித் வெள்ளி பதக்கமும் பெற்றுள்ளனர்.

12 வயதாகும் ஆதவ் கந்தசாமி, இதுவரை தேசிய அளவில் மூன்று பதக்கங்களைப் பெற்றுள்ளார். முந்தைய ஆண்டுகளில் வெள்ளி, வெண்கலப் பதக்கங்களைப் பெற்ற ஆதவ், இந்த ஆண்டு நடந்த போட்டியில் தங்கப் பதக்கம் பெற்றுள்ளார்.

ஆதவிடம் பேசினோம்:

""சிறு வயதிலேயே குதிரை ரொம்ப பிடிக்கும். போகப் போக குதிரையில் ஏறி சவாரி செய்யணும்கிற ஆசையும் வந்து சேர... அப்பாவை பலமுறை கேட்டு...கடைசியில் நான்கு வயதிலேயே குதிரை ஏற்ற பயிற்சியில் சேர்ந்தேன். வேறு கிளப்களில் சிறார்களுக்கு குதிரை ஏற்ற பயிற்சி தர குதிரைக்குட்டி வைத்திருப்பார்கள். கோவை கிளப்பில் நல்ல வளர்ந்த குதிரையில் தான் பயிற்சி தந்தார்கள். முதலில் குதிரை மீது அமர பயிற்சி தருவார்கள். குதிரை மேல் அமரச் செய்து குதிரையை நடத்துவார்கள். பிறகு மெதுவாக குதிரையை ஓடச் செய்வார்கள். அப்புறம் மிதமான வேகத்தில் ஓடச் செய்வார்கள். ஆனால் சிறு வயது சிறார்களை அமரச் செய்து குதிரையை தாவச் சொல்லமாட்டார்கள். ஏனென்றால் குதிரையிலிருந்து சிறார்கள் கீழே விழுந்துவிடுவார்கள் என்ற பயம்தான் காரணம். சிறார்களுக்கு குதிரை மேல் ஏற முடியாது. பிரத்யேக ஏணியைப் பயன்படுத்தி ஏறி குதிரை மீது அமர வேண்டும்.

பயிற்சியின் போது கிளப்பில் இருக்கும் குதிரையில் பயிற்சி செய்யலாம். போட்டிகளில் கலந்து கொள்ள வேண்டும் என்றால் சொந்தமாக குதிரை வாங்கி தொடர்ந்து அதில் அமர்ந்து பயிற்சி செய்ய வேண்டும். எனக்கு ஏழு வயதான போது அப்பா குதிரை வாங்கிக் கொடுத்தார். 9 வயதில் வாங்கிய குதிரை இறந்துவிட்டது. இப்போது என்னிடம் இருப்பது மூன்றாவது குதிரை. சொந்தமாக குதிரை வைத்து அதில் பயிற்சி செய்தால் மட்டுமே குதிரைக்கும் அதன் மேல் அமர்ந்து ஓட்டுபவருக்கும் புரிதல் ஏற்படும். போட்டிகளின் போது வெற்றி பெற இந்தப் புரிதல் தான் கை கொடுக்கும்.

இப்போது இருக்கும் குதிரையின் விலை எட்டு லட்சம்.

குதிரையின் பராமரிப்பு செலவு மாதம் 25000 ஆகும். எனது பயிற்சிக்காக மாதம் 25000.. ஆக மொத்தம் 50000 செலவாகிறது. போட்டிகள் நடக்கும் இடத்திற்குக் குதிரையைக் கொண்டுபோக வேண்டும். குதிரையை ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்குப் பாதுகாப்பாகக் கொண்டு போக பிரத்யேக வாகனங்கள் உண்டு. அத்தகைய வாகனம் மூலமாகத்தான் சென்ற வாரம் மும்பையில் நடந்த போட்டிக்கு கோவையிலிருந்து மும்பைக்கு குதிரையை அனுப்பி வைத்தோம். இக்வெஸ்டேரியன் விளையாட்டு கோல்ஃப் போன்ற, பணக்கார விளையாட்டு. செலவு அதிகம்.ஆனால் கோல்ஃப் போல அங்கீகாரம் இல்லை.

ஒலிம்பிக்ஸில் இக்வெஸ்டேரியன் இடம் பெற்றிருந்தாலும், தடகள டென்னிஸ், இறகுப் பந்தாட்டம் போல் பெருமை புகழ் இருந்தாலும்....அந்த விளையாட்டுகளுக்கு இருக்கும் அங்கீகாரம் இங்கு இல்லை. இந்த விளையாட்டில் தங்கப் பதக்கம் பல பெற்றாலும் படிப்பிற்கான இட ஒதுக்கீடு, வேலை வாய்ப்புகளில் முன்னுரிமை கிடைப்பதில்லை. எனக்கு இக்வெஸ்டேரியன் விளையாட்டில் மனம் ஒன்றிப் போனதினால் தொடருகிறேன்.

குதிரை ஏற்றத்தில் குதிரை வேகமாகவும் போகணும். குதிரை ஓட்டம் (ரேஸ்) போல் நேராக மிக வேகமாக குதிரை ஏற்றத்தில் ஓட முடியாது. நடு நடுவே தடை இருக்கும். தடைகளும் ஒரே திசையில் இருக்காது. இடது, வலது திசைகளில் இருக்கும். வலது பக்கம் தடையைத் தாண்டினால் அடுத்த தடை இடது பக்கத்தில் இருக்கும். அதனால் கவனத்துடன் குதிரையை இயக்க வேண்டும். பயிற்சி தினமும் அதிகாலையில் துவங்கும். காலை ஐந்தரைக்கு தொடங்கி ஆறரைக்கு முடியும்.

அம்மாதான் எனக்குத் துணையாக வருவார்கள். குதிரை ஓட்டுபவருக்கு சீருடை உள்ளது. பிரத்யேக தலை அணி, காலனி உண்டு. அதை அணிந்துதான் பயிற்சி செய்ய வேண்டும்... போட்டிகளில் கலந்து கொள்ள வேண்டும்.

சமீபத்தில் தில்லியில் 14 வயதுக்கு கீழ் இக்வெஸ்டேரியன் இந்திய அணிக்கான தேர்வு நடந்தது. நான்கு பேர்கள் தேர்வு செய்யப்பட வேண்டும். நான்கு பேரில் ஒருவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறேன். ஒலிம்பிக்ஸில் இக்வெஸ்டேரியன் போட்டியில் கலந்து கொள்ள இதுவரை மூன்று இந்தியர்கள் தகுதி பெற்றுள்ளார்கள். சமீபத்தில் நடந்த ஒலிம்பிக்ஸ் போட்டியில் பெங்களூரைச் சேர்ந்தவர் கலந்து கொண்டு 25ஆவது இடத்திற்கு வந்தார். நானும் இந்தியாவின் சார்பில் ஒலிம்பிக்ஸில் கலந்து கொள்ள வேண்டும் என்ற லட்சியத்தில் பயணிக்கிறேன்.... பயிற்சியும் செய்து வருகிறேன்'' என்கிறார் ஏழாம் வகுப்பில் படித்துவரும் ஆதவ் கந்தசாமி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com