திரும்பிப் பார்க்க வைக்கும்  "உத்திரமேரூர்'

புதிய பார்லிமெண்ட் அடிக்கல் நாட்டு விழாவில் உத்திரமேரூர் குடவோலை தேர்தல் முறையினை குறிப்பிட்டும் கல்வெட்டுகளைப் பற்றி பிரதமர் நரேந்திரமோடி சமீபத்தில் ஆற்றிய உரை அனைவர் கவனத்தையும்
திரும்பிப் பார்க்க வைக்கும்  "உத்திரமேரூர்'
Published on
Updated on
3 min read

புதிய பார்லிமெண்ட் அடிக்கல் நாட்டு விழாவில் உத்திரமேரூர் குடவோலை தேர்தல் முறையினை குறிப்பிட்டும் கல்வெட்டுகளைப் பற்றி பிரதமர் நரேந்திரமோடி சமீபத்தில் ஆற்றிய உரை அனைவர் கவனத்தையும் ஈர்த்தது. உத்திரமேரூர் என்னும் தொன்மைமிக்க ஊர்.போளூர் - சேத்துப்பட்டு - வந்தவாசி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. உத்திரமேரூருக்கு வடக்கே காஞ்சிபுரம் 28 கி.மீ தொலைவில் உள்ளது. தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டத்தின், உத்திரமேரூர் வட்டம் மற்றும் உத்திரமேரூர் ஊராட்சி ஒன்றியத்தின் தலைமையிடமும், பேரூராட்சியும் ஆகும். பண்டைக்காலத்தில் உத்திரமேரூர் சதுர்வேதி மங்கலம், ராஜேந்திர சோழச் சதுர்வேதி மங்கலம், விஜயகண்ட கோபால சதுர்வேதி மங்கலம், பாண்டவவனம், பஞ்சவரத ஷேத்ரம், உத்திரமேரூர் உத்திரமேரு, உத்திரமேலூர் எனப் பல பெயர் பெற்றிருந்த இவ்வூர் வரலாற்றுப் புகழ்மிக்க ஊராக இன்றும் திகழ்கின்றது.

கிபி 750 -ஆம் ஆண்டில் பல்லவ அரசன் நந்திவர்மன் என்பவரால் முதன் முதலில் ஒரு பெரிய கிராமமாக உத்திரமேரூர் சதுர்வேதி மங்கலம் என்னும் பெயரில் 1200 வைணவ வேதம் வல்ல அந்தணர்களுக்குத் தானமாக அளிக்கப்பட்டது. உத்திரமேரூர் என்பது நந்திவர்மனின் பட்டப்பெயர்களுள் ஒன்று. அவரதுபெயரான உத்திரமேரூர் என்னும் பெயரில் இவ்வூர் அமைக்கப்பட்டது. பண்டைக்காலங்களில் ஆகம வாஸ்து சாஸ்திரங்களின்படி ஊர்கள்அமைக்கப்பட்டன என்பதற்கு இவ்வூர் சான்றாக விளங்குகின்றது.

மறையோர்கள் வாழும் மாபெரும் ஊராக அமைக்கப்பட்டநாள் முதல் அறுநூறு ஆண்டுகளுக்கும் மேலாக இதுஅந்தணர் ஊராகவே கி.பி 1300 ஆண்டுவரை திகழ்ந்தது என்றும், அதன் பின்னர் பலமாறுதலுக்கு உட்பட்டதையும் அறியமுடிகிறது. கி. பி 17- ஆம் நூற்றாண்டில் நாயக்கர் காலத்திலும் வெள்ளையர்கள் காலத்திலும் பெரும்போர்கள் நடந்தகளமாகவும் இருந்திருக்கின்றது. அதன் பின் வேளாண் மக்களின் தொடர் முயற்சியாலும் உழைப்பாலும் நெல் விளையும் பூமியாக மாறியுள்ளது என்பதும் வரலாறு.

இவ்வூரில் ராஜமேடு , மாளிகைமேடு , பங்களாமேடு, பட்டிமேடு, ஜம்புமேடு எனப் பல பகுதிகள்அழைக்கப்படுகின்றன. இவை 17-18 ஆம் நூற்றாண்டுகளில் இப்பகுதிகள் திகழ்ந்த நிலையைக்காட்டும்பெயர்களாகும். நாயக்கர் ஆட்சிகாலத்தில் அரசகுலத்தினர் வாழ்ந்த பகுதி ராஜமேடு என்றும், கோட்டைமேடு இருந்த பகுதி கோட்டை  என்றும் அழைக்கப்பட்டுள்ளன. வேடர்பாளையம் என்னும் பகுதி வேடர்கள் வாழ்ந்த பகுதியைக் குறிக்கும்.

1200 ஆண்டுகளுக்கு முன்னர் இவ்வூரில் குருசேத்திரத்துப் பெருமாள் கோயில் இருந்தது. அதே போல் கண்ணனுக்குப் பல கோயில்கள் இங்கு இருந்ததாக அறியப்படுகின்றது. மகாபாரதத்துக்கும் இவ்வூருக்கும் இருந்த தொடர்பு குறித்த தொன்மையினை இன்றளவும் உணரும் வகையில் இவ்வூரில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை மகாபாரதக் கதையினைக் குறிப்பாக 18 நாள்கள் நடந்த போர் குறித்து இசை நாடகம் நடைப்பெற்று வருகின்றது. ஆழ்வாரின்பாடல்களை இசைத்து இலக்கிய விழாவாகவே கொண்டாடிவருகின்றனர்.

உத்திரமேரூர்  எட்டாம் நூற்றாண்டில் வடிவமைக்கப்பட்டதாகக் கல்வெட்டுகள் வாயிலாக அறியமுடிகின்றது.  

எந்தெந்த இடங்களில் கோயில்கள் அமைக்கப்படவேண்டும். தெருக்கள் எவ்வாறு அமைக்கப்பட வேண்டும், கடைத்தெருக்கள், ஊர்ச்சபை, ஊர் ஏரி எனஎல்லாவற்றையும் ஆகம நூல்கள் கூறிய முறைப்படி அமைக்கப்பட்டிருக்கின்றது.  ஊர் அமைப்பதற்கு முன்பு நிலங்களைப் பல சதுரங்களாகப் பிரிக்கப்பட்டு, அச்சதுரங்களில் குறிப்பிட்ட கட்டடங்கள் எழுப்பப்படவேண்டும். இதனைப் பண்டையத்தமிழ்நூல்கள்" நுண்கயிறிடல்'என்றும், கோயில்களுக்கு இடம் தேர்ந்தெடுப்பதையும் அவற்றில் தெய்வங்களை ஆவஹித்தலையும் தமிழ்இலக்கியங்கள்"தேயம்காணல்' என்றும் "தெய்வம்நோக்கல்' என்றும்அழைக்கும். இதனைஆகமநூல்கள் "வாஸ்துபதவிந்யாஸம்' என்று கூறும்.

தேரோடும்வீதிக்கு "மங்கலவீதி' என்றும், சந்துகளுக்கு "நாராசம்' என்றும், மக்கள் இயங்கும் வழிகளுக்கு "வதி' என்றும் அழைக்கப்பட்டன. வழிகள் எல்லாம் அரசனின் பட்டப்பெயர்களான பரமேசுரவதி, உத்தரமேருவதி, பல்லவநாரணன் வதி, அவனிநாரணன் வதி, திருநாரணன் வதி, விடேல்விடுகுவதி, மாற்பிடுகு வதி, வைரமேக வதி என்ற பெயர்கள் கொண்டு அழைக்கப்பட்டன. 

ஊர்ச்சபை:

ஊரின் மையத்திற்கு "பிரும்மஸ்தானம்' என்று பெயர். அங்குதான் ஊர்ச்சபை இருக்கவேண்டும். அவ்வாறு ஆகம விதிப்படி அமைக்கப்பட்ட ஊர்ச்சபைமண்டபத்தின் அடிப்பகுதி இன்றும் உள்ளது குறிப்பிடத்தக்கது. இவ்வூர்ச்சபை மேற்கொண்ட  பணிகள் எல்லாம் அக்காலம் தொடங்கிச் சுமார் ஐந்நூறு ஆண்டுகளுக்குத் தொடர்ந்து நடைப்பெற்றவை. அவை கல்வெட்டுப்பதிவுகளாக இன்றும் இருக்கின்றன. அதில் ஒரு கல்வெட்டுதான் குடவோலை முறையினை எடுத்துரைக்கின்றது. மற்றொரு கல்வெட்டு இம்மண்டபத்தை "இவ்வூர் சபாமண்டபம்' எனக்கூறுகிறது.

திருகோயில்கள்:

ஊர்ச்சபையை மையமாகக் கொண்டுதான் இவ்வூர்த் திருக்கோயில்கள் எல்லாம் உரியதிக்குகளில் அமைக்கப்பட்டிருக்கின்றன. இம்மண்டபத்தின் மேற்கே பெருமாள் கோயில் கட்டப்பட்டுள்ளது. அதுவே சுந்தர வரதர்கோயில் என்று இன்று அழைக்கப்படும் கோயிலாகும். 

இதற்குச்சற்று வடக்கில் முருகப்பெருமானின் கோயில் உள்ளது. ஊரின் வடக்கே துர்க்கையம்மன் கோயில்உண்டு. இதைக் கல்வெட்டு வடவாயிற்செல்வி என்று கூறுகிறது. 

கோயில் தானங்கள்:

பார்த்திபேந்திரவர்மன் காலத்தில் உத்திரமேரூரில் உள்ள அனைத்துக்கோயில்களுக்கும் வழிபாட்டுக்காகவும், நைவேத்யத்துக்கும் விளக்கெரிக்கவும் நிலங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. (முதலாம் ராஜராஜசோழனின் அண்ணன் ஆதித்யகரிகாலன் பார்த்திபேந்திரவர்மன் என்று வரலாற்று ஆசிரியர்கள்கருதுவர்) இவனது தேவியரானவில்லவன் மாதேவி, திருபுவன மாதேவி இருவரும் இவ்வூருக்குச் சிறப்புச்செய்துள்ளனர். இம்மன்னனின் மூன்றாவது ஆட்சியாண்டில் எல்லாக் கோயில்களும் தானங்கள் பெற்ற விவரங்களை அறிய முடிகின்றது. 

முதலாம் ராஜராஜன் காலத்தில் பெரும்பாலான கொடைகள் சுந்தர வரதராஜப்பெருமாள் கோயிலுக்கே அளிக்கப்பட்டன. ராஜராஜனின் இறுதியாண்டில் இக்கோயிலில் திருப்பதியம் பாட சிலர்அமர்த்தப்பட்டனர். இவர்கள் மூன்று சந்நிதிகளிலும் பாட வேண்டும் என்றும் , நைவேத்தியம் செய்யப்பட்ட உணவு இவர்களுக்குப் பிரசாதமாக அளிக்கப்பட வேண்டும் என்றும் விதிக்கப்பட்டிருந்தது. ராஜராஜன் காலத்திலிருந்தே உத்திரமேரூர் சுந்தரவரதர் கோயிலில் திவ்யபிரபந்தங்கள் ஓதப்பட்டு வந்துள்ளது.  ராஜராஜனுக்குப் பிறகு முதலாம் ராஜேந்திரசோழன்ஆட்சியாண்டில் 1016 - ஆம் வருடம் இவ்வூருக்கு வந்திருக்கின்றான். இவ்வூரை மீண்டும் திருத்தி அமைத்துத்தானமாக அளித்திருக்கின்றான். அதனால் ஊரின் பெயரை ராஜேந்திர சோழச் சதுர்வேதி மங்கலம் என்றும் மாற்றிஅமைத்தான் .பெருமாள்கோயிலுக்குத் திருப்பணி செய்து ராஜேந்திரசோழ விண்ணகர் என்று மாற்றிஅழைக்கப்பட்டது.இவரது காலத்தில் நம்மாழ்வாரின் திருவாய்மொழிபாட மூவர் அமர்த்தப்பட்டனர்.

கல்வெட்டுகளின் முக்கிய வரலாற்றுச்சான்றுகள்:

இவ்வூர்க் கல்வெட்டுகள் வாயிலாக பல வரலாற்றுச் சிறப்புமிக்கச் செய்திகளைத் தெரிந்து கொள்ள முடிகின்றது. ஊர்ச்சபைக்கு தேர்தல் முறைகள், ஏரிகளை பராமரித்தல், ஊர்வழிகளை சீர் செய்தல், தண்டம் அளித்தவரிடம் வசூலித்தல், கைப்பிழையால் நேர்ந்த கொலை, தங்கம் தூய்மைமாத்து பரிசோசித்தல், பேராசிரியர்களை நியமித்தல், வேதப்பள்ளிகள், திருப்பதியம்-திருவாய்மொழி ஓதுதல், இலக்கணப்பள்ளிகள், பாம்புக்கடிக்குமருந்து, உரம்விற்றல், கோயில்கள்கட்டுதல், வாஸ்துபிடாரிஎனல், மண்டபங்கள்கட்டுதல், தானமாகபொருள் கொடுத்தால் வரி விலக்களித்தல், ஆராதனை, திருஅமுது, ஸ்ரீபலி, நொந்தாவிளக்கெரித்தல் ஆகியன குறிப்பிடத்தக்கவையாகும்.

நமது பாரம்பரியத்தையும் மரபுகளையும் பாதுகாப்பது நமது தலையாயக் கடமையாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com