

கான்கிரீட் வீடு கட்டுவதற்குப் பதிலாக கலை நயம் மிளிரும்படி மூங்கில்களால் ஒரு பங்களாவையே கட்டி முடித்துள்ளார், கேரள மாநிலம் வயநாட்டைச் சேர்ந்த பாபுராஜ். சுற்றுப்புறச் சூழலுக்குப் பொருந்தும் விதத்தில் கட்டப்பட்டிருக்கும் இந்த மூங்கில் பங்களா அனைத்து கேரளத்தவரையும் கவர்ந்துள்ளது. இந்த பங்களா ஒரு குளத்தின் மேல் மூன்று தள மூங்கில் பங்களா கட்டப்பட்டிருப்பது இன்னொரு சிறப்பு... திகைப்பு.
பாபுராஜ் மனம் திறக்கிறார்:
"நான் அடிப்படையில் ஒரு ஆசிரியர். சுற்றுப்புறத்தை, இயற்கையை ஆராதிப்பவன். நான் கான்கிரீட்டால் கட்டப்பட்ட வீட்டில் வாடகைக்கு பத்தாண்டு காலமாக வசித்தது வந்தேன். எனக்கு கான்கிரீட் வீடு பிடிக்கவில்லை. சொந்தமாக வீடு ஒன்று கட்டலாம் என்று முடிவு செய்த காலகட்டத்தில் மூங்கிலால் வீடு கட்ட உதவும் "உறவு' என்ற அமைப்புடன் தொடர்பு ஏற்பட்டது. 2007 வாக்கில் மூங்கில் வீடுகள் கட்டுவதில் அனுபவமுள்ள அனீஷ் என்பவரின் உதவியுடன் மூங்கில் வீட்டினைக் கட்டத் தொடங்கினேன்.
கேரளத்தில், வடகிழக்கு மாநிலங்களில் மூங்கிலால் வீடுகள் கட்டப்படுகின்றன. நான் வசிக்கும் பகுதியில் 18 சென்ட் நிலம் வாங்கினேன். அந்த நிலத்தை வாங்கிய பிறகுதான் அந்த நிலம் வயல் சார்ந்த இடம் என்று தெரியவந்தது. கேரளத்தில் வயல், வயல் சார்ந்த இடத்தை கான்கிரீட் வீடு கட்டப் பயன்படுத்திக் கொள்ள முடியாது. அதனால் அந்த நிலத்தில் ஒரு குளம் வெட்டினேன். பிறகு அந்தக் குளத்தின் மேல் மூங்கில் வீட்டைக் கட்டினேன்.
மூங்கில் வீடு கட்ட பயன்படும் யுக்தியில் சிறந்ததைத் தேர்ந்தெடுத்தேன். வீட்டை பிரமிட் வடிவத்தில் கட்ட வேண்டும் என்று தீர்மானித்தேன். பிரமிட் வடிவத்தில் வீட்டைக் கட்டினால் செலவு குறையும். பார்க்கவும் வித்தியாசமாக இருக்கும் என்பது எனது முடிவு. அந்த முடிவை தொடக்கத்தில் பலர் விமர்சித்தாலும், மூங்கில் வில்லா வேலைகள் முடிந்த பிறகு என்னை அனைவரும் பாராட்டினார்கள். ஆனால் மூங்கில் வீடு கட்ட அனுபவமுள்ள தொழிலாளர்கள் கிடைக்கவில்லை. எனக்கும் மனைவிக்கும் பெருத்த ஏமாற்றம்.. மன சங்கடம்... எங்களது நிலைமையை அறிந்த "உறவு' அமைப்பு எனது உதவிக்கு வந்தது. அவர்கள் சில தொழிலாளர்களுக்குப் பயிற்சி கொடுத்தார்கள். எனது கனவு மூங்கில் பங்களா நனவாகும் என்ற நம்பிக்கை அப்போதுதான் பிறந்தது.
பல வகை மூங்கில்களுடன், களிமண் ஓடுகள்,, செங்கல்கள், கற்களை வீடு கட்டப் பயன்படுத்தினோம். வீட்டு பயன்பாட்டிற்கான மேஜை, நாற்காலி, கட்டில், சோஃபா அனைத்தையும் மூங்கில்களில் செய்தோம். நான் வாங்கிய இடத்தில் வளர்ந்த மூங்கில்களை நான் பயன்படுத்தினேன். குளம் வெட்டவும், வீடு கட்டவும் சுமார் 30 லட்சம் செலவானது. 3000 ச. அடி விஸ்தீரணமுள்ள மூங்கில் வில்லாவை கான்கிரீட்டால் கட்ட குறைந்தது 60 லட்சம் ஆகும். மூன்றாவது தளத்தில் கட்டப்பட்டிருக்கும் இரண்டு அறைகளைச் சுற்றுலாப் பயணிகள் தங்க உணவு வசதியுடன் வாடகைக்கு கொடுக்கிறேன். இயற்கை சூழலை விரும்புபவர்கள் எனது வில்லாவிற்கு வருகை தருகிறார்கள்.
எனது குளத்தில் பல வகை மீன்களை வளர்கின்றன. வீட்டினுள் எந்த திசையில் நின்று பார்த்தாலும் குளத்தில் நீந்தும் மீன்களை பார்க்கலாம். அந்த வசதியுடன் கதவு, ஜன்னல்களை அமைத்துள்ளேன். சுறுசுறுப்பாய் இருக்கும் மீன்களைக் கண்டால் நாமும் சுறுசுறுப்பாகிவிடுவோம். குளத்தின் மேல் மூங்கில் வில்லா கட்டப்பட்டிருப்பதால், வெப்பக் காலத்திலும் வீடு குளுமையாக இருக்கும். கூரையிலிருந்து இறங்கும் மழை நீர் குளத்தில் சேரும். அதனால் கோடை காலத்தில்கூட தண்ணீர் பஞ்சம் கிடையாது. இயற்கையோடு இணைந்த வீடுகளைக் கட்டுபவர்களுக்கு அரசு வீட்டு வரியில் சலுகை தர வேண்டும்'' என்ற கோரிக்கையையும் வைக்கிறார் பாபுராஜ்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.