பிரியம் தேடுகிறவனின் நிராகரிப்பு!
"ஒவ்வொரு மனிதனும் ஒரு கதைக்குள் இருக்கிறான். கனவு, துக்கம், வறுமை, குடும்பம், வேலை என எல்லாவற்றையும் பொத்தி வைத்திருக்கிற அனுபவமும், அழகுமே சொல்லி


"ஒவ்வொரு மனிதனும் ஒரு கதைக்குள் இருக்கிறான். கனவு, துக்கம், வறுமை, குடும்பம், வேலை என எல்லாவற்றையும் பொத்தி வைத்திருக்கிற அனுபவமும், அழகுமே சொல்லி மாளாது. சினிமாவாக எடுத்தும் தீராது. நிறைய பார்த்து விட்டோம் என்பதோ, நிறைய சினிமா எடுத்து விட்டோம் என்பதோ விஷயமே இல்லை. எழுதுவதோ, படிப்பதோ, படம் எடுப்பதோ நமக்குள் ஒரு சிறு மாற்றத்தையாவது ஏற்படுத்த வேண்டும். அந்த உள்மாற்றம்தான் மன விசாலம். என் படங்களில் கமர்ஷியல் இருக்கும் அளவுக்கு சில விஷயங்களும் இருக்கும். இதுவும் அப்படித்தான். பேச தொடங்குகிறார் இயக்குநர் ஏ.எல்.வெங்கடேஷ். கமர்ஷியல் கதைக்காக தனி இடம் பிடித்திருப்பவர். இப்போது இயக்கி வரும் படத்துக்கு "ரஜினி' என பெயரிடப்பட்டிருப்பதால் எதிர்பார்ப்புகள் ஏறிக் கொண்டே இருக்கின்றன.
எல்லோரையும் எளிதில் வசீகரிக்கிற பெயர்... படத்துக்கு எப்படி...
கமர்ஷியலோ, ஆக்ஷனோ, ஆவணப்படமோ எதுவாக இருந்தாலும் சினிமா என்பது உணர்வுகளின் தொகுப்பு.
பெயருக்கேற்ற மாதிரி ஒரு சந்தோஷம், மன உணர்வு, வசீகரம் உங்களை கிளரும். வேகமாகி விட்ட வாழ்க்கையில் நமக்கான ஆறுதலுக்கும், புரிதலுக்கும் ஏங்கி நிற்குது நமது இருப்பு. இதிலும் அப்படித்தான். இதில் வருகிற விஜய் சத்யா ஒரு தீவிரமான ரஜினியின் ரசிகர். அவரின் ஒவ்வொரு படங்களும் இவருக்கு பாட சாலை மாதிரி. அவர் பேசுகிற வசனங்கள் எல்லாவற்றையும் தனது வாழ்க்கையின் முன்னேற்ற பாதைக்கு வைத்து பயணமாகிறவர். ரஜினி என்றால் அவருக்கு அவ்வளவு ப்ரியம். உணர முடியாமலேயே அவர் சினிமா சேட்டைகளில் மயங்கின ஆள். அப்படி ஒரு நாள்... எதிர்பாராத விதமாக ஒரு பிரச்னையில் சிக்கி கொள்கிறார். அதனால் என்ன மாதிரியான சிக்கல்கள் வருகிறது. அதிலிருந்து எப்படி மீள்கிறார் என்பது கமர்ஷியல் சட்டகத்துக்கு உட்பட்ட கதை.பிரியம் தேடுகிற ஒருவன், நிராகரிக்கப்பட்டு, புறம் தள்ளப்பட்டால்.... அன்பு என்றால் அன்பு... கோபம் என்றால் கோபம். ஒன்றுக்குள் ஒன்று ஒளிஞ்சு நின்று குரோதம் பார்க்காத மனிதன். அவனை வாழ்க்கை எங்கே வைத்தது... ஏன்... அதற்கான இடங்கள் படத்தில் தொடர்ச்சியாக வருகிறது.
கதைக்கான கரு எப்படி உருவாகி வளர்ந்தது....
தயாரிப்பாளர் தரப்பில்தான் இந்தக் கதையின் உருவாக்கம் நிகழ்ந்தது. என் தரப்பும், தயாரிப்பு தரப்பும் எப்போது சந்தித்தாலும் சேர்ந்து படம் செய்ய வேண்டும் என்று பேசிக் கொண்டே இருப்போம். இதனால் இந்தக் கதை என் மனதில் ஓடிக் கொண்டே இருந்தது. இருந்தபோதும் இந்த சந்திப்பு நிகழ்ந்து கொண்டே இருந்தது. விஜய் சத்யா சினிமாவில் சாதிக்க துடிக்கிற நடிகர். எல்லா அர்ப்பணிப்புகளுக்கும் தயாராக இருந்தார். "நெல்லு' உள்ளிட்ட சில படங்களில் நடித்து காத்திருந்தார். அந்த கம்பீர உயரத்திற்குப் பின், அவரின் சிரிப்பில் ஒரு இன்னொசென்ஸ் இருக்கும். பணிவும் இருக்கும். இதை யாரும் பயன்படுத்தவில்லை என்று தோன்றியது. இந்தக் கதையை அவரிடம் சொன்னதும், "எப்போதும் ரெடியா இருக்கேன் சார்...' என்று சிரித்தார். அதோடு நிற்காமல் ஒரு வருடம் நேரம் கேட்டு வாங்கி கொண்டு, சிக்ஸ் பேக் உடம்புக்கு தயாரானார். சொன்னபடியே ஒரு வருடம் கழித்து நான் நினைத்த உடல் வாகோடு வந்து நின்றார்.
விடாத பயிற்சி. அது கூடவே படப்பிடிப்பின் போது கடின உழைப்பு. அவர் எடுத்துக்கொண்ட அக்கறையில் அந்த கேரக்டர் இன்னும் துலங்கியது. வெறும் பாவனையால் இல்லாமல், ஆக்ஷன், சென்டிமெண்ட் என காட்சிகள் நிரம்பியது. அதை அழகாக கொண்டு வந்திருக்கிறோம். படத்தின் தயாரிப்பாளர் பழனிவேலுக்கு ஏற்கெனவே "வாத்தியார்' படம் செய்து தந்தேன். அது ஹிட். இதுவும் ஹிட் என பேச வைக்கும்.
ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பீங்க... இந்த முறை ஷெரீன்...
ஷெரீன் அறிமுகமாகி வளர்ந்த போது, அப்படி ஒரு ஈர்ப்பு இருந்தது. தொடர்ச்சியாக சரியான களம் அமையவில்லை. சின்ன சின்ன சறுக்கல். அதனால்தான் அவரை பார்க்க முடியவில்லை. இந்தப் படத்துக்கு அவர்தான் கதைநாயகி. ஆபீஸூக்கு வரவழைத்து, ஒரு பயிற்சி மாதிரி கொடுத்து, படத்திற்குள்ளே ஷெரீனை கொண்டு வந்தோம். ஆனால், படப்பிடிப்பில் வெகு இயல்பாக அருமையாக பொருந்தி நடித்துக் கொடுத்தார். அந்த வகையில் அவருக்கு நிகர் அவர்தான். அவ்வளவு சிறப்பு. ஏதோ வந்து விட்டு போகிற மாதிரி, வெறும் பாடலுக்கான பெண் மாதிரியான படைப்பல்ல. அவருக்கும் நல்ல இடம் உண்டு. அவரைத் தேடி நல்ல படங்கள் வர வேண்டும். அவ்வளவுதான்.
கமர்ஷியல் இயக்குநராகவே அடையாளம் இருக்கே...
அதை நான் ஏற்றுக் கொண்டதுதான். யாரையும் குறை சொல்ல முடியாது. எனக்கு பிடித்ததை நான் செய்கிறேன். யாரும் என்னை நிர்பந்திக்கவில்லை. இது எனக்கு 23-ஆவது படம். எல்லா படங்களுமே மினிமம் கியாரண்டிதான். யாரையும் நஷ்டத்தில் தள்ளியதில்லை. மற்றவர்கள் ஒரு கதையை உணர்வூப்பூர்வமாக யோசித்தால், அதை நான் கொஞ்சம் பாட்டு, இசை, சண்டை என்று கமர்ஷியல் வைக்கிறேன். அவ்வளவுதான். இதில் எந்த சிக்கலும் இல்லை.
அப்புறம் வனிதா விஜயகுமார் கதையின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஒரு நல்ல படம், பார்க்கிற அனுபவத்தோட முடிந்து விடக்கூடாது. அது பார்க்கிறவர் மனதில் தொடர்ந்து வளர வேண்டும். மற்றவர்களை நோக்கி ஒரு புன்னகை, ஒரு கையசைப்பு, ஒரு கைபற்றுதல் கூட இல்லாமப் போய் விட்டதே என்று ஏக்கம் சேர்ந்தது கூட இந்தப் படம். இமான் அண்ணாச்சி, சம்யுக்தா, ராஜா, பாலா என அருமையான நடிகர்கள் இருக்கிறார்கள். அம்பரீஷ் இசையில் பாடல்களும் உங்களை தொடும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...