தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

உக்ரைன்:  க.கா.கா

உக்ரைன் போர் எதனால ஏற்பட்டது தெரியுமா? கருங்கடல், காஸ்பியன் கடல், இரண்டுக்கும் நடுவே இருக்கிற காகசஸ் மலைப்பகுதி. இந்த மூன்றும்தான் உக்ரைன் போர்

News image
Updated On :7 மார்ச் 2022, 12:10 pm

தினமணி

உக்ரைன் போர் எதனால ஏற்பட்டது தெரியுமா? கருங்கடல், காஸ்பியன் கடல், இரண்டுக்கும் நடுவே இருக்கிற காகசஸ் மலைப்பகுதி. இந்த மூன்றும்தான் உக்ரைன் போர் மூண்டதற்கான முக்கியமான மூன்று காரணிகள்.

சோவியத் ரஷியா 15 நாடுகளாக சிதறியபோது, இந்த முன்வரிசை களப்பணியாளர்களை எல்லாம் அமெரிக்கா தன் செல்வாக்கால் கைக்கொண்டது. கிழக்கு ஜெர்மனி,  மேற்கு ஜெர்மனியோட இணைந்து அமெரிக்க ஆதரவு ஒரே ஜெர்மனியாக மாறியது. செக்கோஸ்லோவேகியா செக் குடியரசு, ஸ்லோவேகியான்னு இரண்டாக உடைந்தது. யூகோஸ்லாவியா உள்நாட்டுப் போரால் சின்னாபின்னமாகி பல நாடுகளாக சிதறியது.

போலந்து, ஹங்கேரி, ருமேனியா, பல்கேரியா எல்லாம் அமெரிக்காவால் நேட்டோ என்கிற "வட அட்லாண்டிக் ஒப்பந்த நாடுகள்' ராணுவக் கூட்டமைப்பில் சேர்க்கப்பட்டன.  இப்படி ரஷியாவோட முன்வரிசை பாதுகாப்பு அரண்களைத் தகர்த்து தன் வசமாக்கிக் கொண்டது அமெரிக்கா. 

அடுத்ததாக சோவியத் ரஷியாவோட ஒரு காலத்தில் இணைந்திருந்த பால்டிக் நாடுகள் என்று சொல்லப்படுற எஸ்தோனியா, லாத்வியா, லிதுவேனியா நாடுகளை அமெரிக்கா அள்ளி அரவணைத்து கொண்டது. இந்த நாடுகள் எல்லாம் மேற்கத்திய நாடுகளின் நேட்டோ கூட்டணியில் இப்போது அங்கம் வகிக்கின்றன. அதேப் போன்று அடுத்தகட்டமாக சோவியத் ஒன்றியத்திலே ஒருகாலத்திலே அங்கமாக இருந்த ஜார்ஜியா, உக்ரைன் மாதிரியான நாடுகளை நேட்டோ கூட்டணியில் சேர்க்கிற வேலையில் அமெரிக்கா இறங்கியது.

காரணம் முதலில் சொன்ன  கருங்கடல், காஸ்பியன் கடல், காகசஸ் மலைப்பகுதிதான்.

காசகஸ் பகுதி இருப்பிட முதன்மைத்தன்மை வாய்ந்த இடம். அடுத்ததாக கருங்கடல், காஸ்பியன் கடல் இரண்டுமே எண்ணெய் வளம், இயற்கை எரிவாயு வளம் நிறைந்த பகுதிகள்.

"இந்த இடத்தில் ரஷியாவோட செல்வாக்கை எப்படியாவது இல்லாமல் ஆக்கணும். ரஷியாவை இந்த ஏரியாவை விட்டே காலி பண்ணனும்' என்கிறது அமெரிக்காவோட நீண்டகால திட்டம். அதுக்கு ஒரே வழி, ரஷியாவுக்கும் இந்தப் பகுதியில் இருக்கிற முன்னாள் சோவியத் குடியரசுகளுக்கும் இடையே சண்டையை மூட்டி விடுவது தான். இதைத்தான் அமெரிக்கா கவனமாக செய்து வருகிறது.

சோவியத் ரஷியாவிலே இருந்து பிரிந்து போன பல நாடுகளில் எத்தனையோ நாடுகள் ரஷியாவுக்கு எதிராக போனாலும் அதைப்பத்தி ரஷியா கவலைப்படவில்லை. இந்த உக்ரனை, ரஷியாவுக்கு எதிராக திருப்பிவிட அமெரிக்கா எடுத்த முயற்சிதான் உச்சகட்ட எரிச்சலை ரஷியாவுக்கு ஏற்படுத்தியது.

உக்ரைன் நாட்டை உசுப்பிவிட்டு நேட்டோ கூட்டணியில் இணைத்துக் கொண்டால், கருங் கடலுக்கும் ரஷியாவுக்கும் இடையிலான தொடர்பு கட்டாகிவிடும். இதனாலும் கூட உக்ரைனை தன்பக்கம் இழுப்பதில் அமெரிக்கா ரொம்ப ஆர்வமாக இருக்குது.

இது தெரிந்துதான் கருங்கடலில் உள்ள உக்ரைனுக்குச் சொந்தமான கிரிமியா பகுதியை ரஷியா அவசர அவசரமாகக் கைப்பற்றி தனதாக்கிக் கொண்டது. (கிரிமியா தீபகற்பத்தில் செவஸ்டபோல் கடற்படைத்தளத்துக்குப் போட்டியாக ருமேனியாவின் மேற்கே கருங்கடல் கரையில் அமெரிக்கா ஒரு கடற்படைத்தளம் வைத்திருப்பது இன்னொரு தனிக்கதை) இப்படி, ரஷியாவை எந்த அளவுக்கு முடியுமோ அந்த அளவுக்கு அமெரிக்கா வெறுப்பேற்றி வந்த நிலையில்தான் பொறுத்தது போதும் என்று உக்ரைனுக்கு எதிராக  பொங்கியெழுந்து போர் தொடுத்திருக்கிறார் ரஷிய அதிபர் புதின்.

1962-ஆம் ஆண்டு, அமெரிக்காவுக்குப் பக்கத்திலே இருக்கிற கியூபாவில் சோவியத் ரஷியா ஏவுகணைகளை நிலைநாட்டியபோது அமெரிக்கா "என் பாதுகாப்பே போச்சு'ன்னு அமெரிக்கா கதறவில்லையா? அதைப்போலத்தான் உக்ரைன் நேட்டோவில் சேரப் போகிறது என்றதும் ரஷியா அதை எதிர்க்கிறது. 

ஒருவகையில் பார்த்தால், உக்ரைன் போர் விஷயத்தில் உண்மையான வில்லன் அமெரிக்காதான். 

உக்ரைனின் கிழக்குப் பகுதியில் ரஷியர்கள் அதிகம் வாழும் லுகான்ஸ்க், டொனெட்ஸ்க் பகுதிகள் உக்ரைன் அரசுக்கு எதிராக கிளர்ந்த போது அமெரிக்கா ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டிருந்தது. காரணம் இந்த கிளர்ச்சியை சாக்காக வைத்து உக்ரைனை நேட்டோவில் இணைத்து உக்ரைனுக்குள் புகுந்து விடலாம் என்ற எண்ணம்தான் அது.

சரி. உக்ரைன் போர் உக்கிரமாகிவிட்டநிலையில் அடுத்த கட்டம் என்ன?

இந்தப் போரை எவ்வளவு விரைவில் முடிக்க முடியுமோ அவ்வளவு விரைவில் முடித்து உக்ரைனில் தனக்கு ஆதரவான ஒரு ஆட்சியை ரஷியா நிறுவுவதுதான் ரஷியாவுக்கு நல்லது.

மாறாக உக்ரைன் போர் நீண்டால்,,உக்ரைனுக்கு நவீன ஆயுதங்களை, கூலிப்படைகளை அனுப்பி ரஷியாவை தோல்வியடைய வைக்க அமெரிக்கா முயற்சிக்கும். ஏற்கெனவே ரஷியாவுக்கு எதிராக ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா இதே தந்திரத்தைக் கடைபிடித்திருக்கிறது. எனவே உக்ரைன் போர் நீள்வதைத்தான் அமெரிக்கா விரும்புகிறது. அதை டக்கென்று முடித்துக் கொள்ள ரஷியா விரும்புகிறது.

உக்ரைனில் சண்டையிடும் இரண்டு தரப்புமே ஸ்லாவ் இன மக்களின் தரப்புதான். இந்த இரண்டு தரப்பும் சண்டையிட்டால் அமெரிக்காவுக்கு அது கொண்டாட்டமாகவே இருக்கும். ஆகவே ரஷியா, உக்ரைன் போர், அமெரிக்காவைப் பொறுத்தவரை ரசிக்கத்தக்க போர்.

இதுவே உக்ரைன் நாடு, நார்டிக் இன மக்கள் வாழ்கிற நாடு என்றால் அமெரிக்கா இந்நேரம் கொதிநிலைக்குப் போய் உக்ரைன் போரில் குதித்திருக்கும். அமெரிக்காவின் நாடி நரம்பெல்லாம் துடித்திருக்கும்.

மற்றபடி இப்போது நடப்பது இரண்டு ஸ்லாவிய இன மக்கள் வாழுகிற நாடுகளுக்குள் நடக்கிற போர் என்பதால், சண்டையிடுகிற இரண்டு தரப்பில் யார் செத்தால் என்ன என்று அமெரிக்கா அதை வேடிக்கை மட்டுமே பார்க்கும்.

உக்ரைனில் இப்போது நடக்கும் போர்ப் பாதிப்புக்கு காரணம் ரஷியா அல்ல. உக்ரைன் இந்த அளவுக்கு அடி வாங்க அமெரிக்காதான் உண்மையான காரணம்.

- மோகன ரூபன்
(முகநூல் பதிவு)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.