16 ஆண்டு... 5 கண்டம்... 26 நாடு..!

கேரளத்தில் கொச்சியில் சிற்றுண்டி விடுதி   நடத்தும்  விஜயன் -  மோகனா தம்பதி  14  ஆண்டுகளில்  26  வெளிநாடுகளுக்குச் சுற்றுலா சென்று  வந்து  இந்தியாவின் நடுத்தர  மக்களுக்கு ஒரு அதிசயமாக மாறியிருந்தார்.  
16  ஆண்டு...  5 கண்டம்...  26 நாடு..!
Updated on
2 min read


கேரளத்தில் கொச்சியில் சிற்றுண்டி விடுதி   நடத்தும்  விஜயன் -  மோகனா தம்பதி  14  ஆண்டுகளில்  26  வெளிநாடுகளுக்குச் சுற்றுலா சென்று வந்து இந்தியாவின் நடுத்தர  மக்களுக்கு ஒரு அதிசயமாக மாறியிருந்தார்.   பிரதமர் மோடி,  அமிதாப் பச்சன், மஹிந்திரா  நிறுவனத்தின் தலைவரான  ஆனந்த் மஹிந்திரா, நடிகர் மோகன்லால், சசி தரூர் போன்ற பிரபலங்கள்   இந்தத் தம்பதிகளை  வெகுவாகப் பாராட்டியிருந்தனர்.

விஜயன் -  மோகனா  குறித்து  தயாரிக்கப்பட்ட செய்திப் படத்திற்கு  "பிலிம் பேர்' விருதும்  கிடைத்துள்ளது, இந்தத் தம்பதியரின் முக்கியத்துவத்திற்கு ஒரு சாம்பிள். இதுவரை  சுற்றுலாவுக்காக  40   லட்சம் ரூபாய்  செலவு  செய்திருக்கும் விஜயன்-  மோகனா தம்பதிகள் பணக்காரர்களும் அல்ல.

இந்த  உலகம் சுற்றும் ஜோடியில் விஜயன் இப்போது இல்லை. சென்ற  2021  அக்டோபரில் தான் ஜோடியாக  ரஷ்யா சென்று வந்தார்கள். நவம்பரில் மாரடைப்பில் 71  வயது  விஜயன் காலமானார். 2022-இல் ஜப்பான்  சுற்றுலா செல்ல வேண்டும் என்று தீர்மானித்திருந்தார்கள்.

கணவரை  இழந்த சோகத்திலிருந்து  மீண்டிருந்த  மோகனா விஜயனை சந்தித்தோம்.

"கொச்சியில்  காந்தி நகர் பகுதியில்   நானும் கணவரும்   "ஸ்ரீ பாலாஜி   காபி ஹவுஸ்'  என்னும்  ஹோட்டலை  நடத்தி வருகிறோம்.  காலை ஆறிலிருந்து பதினொன்று  மணி வரையும்,  மாலையில் நான்கு முதல்   எட்டு மணி வரை மட்டும். ஹோட்டல்  திறந்திருக்கும்.   உணவுப் பண்டங்கள்  சுவையாகவும், ஹோட்டல்  சுத்தமாகவும் இருப்பதால் வாடிக்கையாளர்கள் அதிகம்.  கணவர் "தேநீர்'   தயாரித்து   வாடிக்கையாளர்களுக்கு  சப்ளை  செய்வார். நான்  வடை, போண்டா,  தோசை  என்று சுடுவேன், பூரியும் போடுவேன்.

கணவர்  படிக்கும்  போது   வெளியூர்களுக்குச் சென்று வந்தார். பிறகு ஹரித்துவார் போய் வந்தார்.  வானத்தில் பறக்கும்  விமானத்தைக் காணும் போதெல்லாம்  நான்  விமானத்தில் அமர்ந்து எப்போது பறப்பேன் என்று ஏக்கத்துடன் பார்ப்பேன். எங்களுக்கு    இரண்டு  மகள்கள்   அவர்களின் திருமணம் முடிந்ததும் ... அப்போதாவது  வெளிநாடு சுற்றுப்பயணம் செல்ல முடியாதா  என்று நான் கணவரிடம்  கேட்டேன்.

யதேச்சையாக செய்தித்தாளில் வெளிநாடு  சுற்றுலா  போவதற்கான   விளம்பரம் வெளியாகி  இருந்தது. சுற்றுலா  அழைத்துக் கொண்டு போகிறவர்கள் கேட்ட தொகையைப்  புரட்டிக்கொடுத்தோம்.  பாஸ்போர்ட்  எடுத்தோம். வேட்டியில் இருந்த அவர் பேண்ட்  தைத்துக் கொண்டார். சேலை காட்டும் நான்  சுடிதாருக்கு மாறினேன்.

2007-இல் வளைகுடா நாடுகள் இஸ்ரேல், பாலஸ்தீன், எகிப்து  சுற்றுலா. எங்களுக்கு முதல் சுற்றுலா. ,,,முதலாவதாக  விமானத்தில்  பறந்த  போது பயந்து   இருக்கையோடு இருக்கையாக  ஒட்டி  ஒடுங்கி  உட்கார்ந்து  இருந்தோம். இந்த சுற்றுலா சென்று வந்ததும் , வெளிநாடு சுற்றுலா செல்ல  ஆசை எங்களைப்    பிடித்து ஆட்டத் தொடங்கியது.   அதனால் ஹோட்டலில் கடினமாக வேலை செய்தோம்.  அதுதான் உண்மை.  தினமும்  200 , 300   ரூபாய்  என்று சேமித்தோம். சுற்றுலா  போக  சேமிப்பு போதாது வந்தால்   நகைகளை  விற்போம். கடன் வாங்குவோம்.   சுற்றுலா முடிந்து கொச்சி திரும்பியதும்  பூட்டி  போட்ட   ஹோட்டலைத்   திறந்து  கஷ்டப்பட்டு  உழைப்போம்.

இப்படி   16  ஆண்டுகளில்  ஐந்து கண்டங்களில்  தேர்ந்தெடுக்கப்பட்ட  26  நாடுகளை தரிசித்தோம்.

சுற்றுலாபோகும் போது இருபது முப்பது   டாலர்களுக்கு மேல் செலவு செய்யமாட்டோம்.  ரொம்ப சிக்கனமாக இருப்போம்...  எங்களது  சுற்றுலா ஆர்வத்தைக் கண்ட பலரும்  நாங்கள்  சுற்றுலா செல்ல  பணத்தைக் கணிசமாக  அன்பளிப்பு செய்தனர்.   நாங்கள் சுற்றுலா போக  முன்பின் தெரியாதவர்கள் தானாக முன் வந்து  பணத்தை அன்பளிப்பு செய்வது  பெரிய விஷயம் அல்லவா..?
""பொதுவாக வெளி நாட்டுச் சுற்றுலா  8  முதல்  18  நாள்கள் வரை  நீளும் திரைப் படங்களில் பார்த்து ரசித்த இடங்களை  நேரில் பார்க்கும் போது  ஏற்படும் மகிழ்ச்சி இருக்கிறதே  அதை வார்த்தையில் சொல்ல முடியாது.  வெனிஸ் நகரம்  எங்கள் ஆலப்புழை  போன்று  இருக்கிறது .. சுற்றுலா பயணத்தில்   உடன் வரும் பயணிகள்,  " கொச்சியில்  என்ன  செய்கிறீர்கள்...'' என்று  விசாரிப்பார்கள். " சின்ன  டீ  ஸ்டால்   நடத்துகிறோம் ..'  என்றால்  நம்பமாட்டார்கள். ""சும்மா  சொல்றீங்க .. பெரிய  ஹோட்டலா  இருக்கும் இல்லைன்னா  இவ்வளவு செலவு  செய்து  ஃபாரின்  டூர் வரமுடியுமா'' என்று  எதிர் கேள்வி போடுவார்கள்.  "என்ன சொன்னாலும்  எங்கள்  பேச்சு  எடுபடாது என்பதால் நாங்கள்  மெளனமாக  இருந்து விடுவோம்.'

நான்  சிறுமியாக  இருந்த  போது  பயணம்  செய்ய  ஆசையோ  ஆசை.  வீட்டில்  வசதி  இல்லாததால்  அப்பா  எங்கும்  கூட்டிப்  போகமாட்டார்.  வருத்தமாக இருக்கும்.   அந்தச்  சமயங்களில்  என்  பாட்டி , " மோகனா  கவலைப்படாதடி   உன்னைக் கட்டிக்கிறவன்   நீ  போதும்    போதும் என்று  சொல்கிற வரை  உன்னை   எல்லா இடங்களுக்கும் கொண்டு போவான்'  என்பார்.

கடவுள்  புண்ணியத்தில்  பாட்டி  சொன்னது பலித்தது. ஆனால்  அவர்  என்னைவிட்டுப்  போய்விட்டார்.  நான் தனிமரம் என்று  சொல்லும்  மோகனாவிற்கு 69 வயதாகிறது.

26 நாடுகள் சுற்றிவந்த பிறகு ஜப்பான் போகணும் என்று  முடிவு செய்திருந்தோம்.  கணவர் காலமானதால் உடனே ஜப்பான் செல்ல முடியாது. ஆனால் கணவரின்  கனவை நிறைவேற்ற  நான் நிச்சயம் ஜப்பான் செல்வேன்.  அப்போதுதான்  கணவரின் ஆன்மா சாந்தி அடையும்.  அப்படி நான் ஜப்பான் பயணிக்கும் போது, கணவரின் ஆன்மாவும்    என்னுடன்   பயணிக்கும் எனவும்  நம்புகிறேன்...' என்கிறார் மோகனா விஜயன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com