ஃபேஷன் உலகில் பவானி ஜமக்காளம்!

இந்தியா, அமெரிக்கா,  துபை உள்பட பல நாடுகளில் ஃபேஷன் உலகில் பிரபலமானவர் ரெஹானே என்ற ரெஹானேயா வர்தலா.
ஃபேஷன் உலகில் பவானி ஜமக்காளம்!
Published on
Updated on
2 min read


இந்தியா, அமெரிக்கா,  துபை உள்பட பல நாடுகளில் ஃபேஷன் உலகில் பிரபலமானவர் ரெஹானே என்ற ரெஹானேயா வர்தலா.  தான் வடிவமைத்து உருவாக்கும் ஃபேஷன் ஆடைகளை இவர், "ரெஹானே' என்ற பெயரிலேயே விற்பனை செய்து வருகிறார்.

சென்னையில் வசிக்கிறார். வீடுகளின் கூடங்களிலும், திருமண மண்டபங்களிலும் தரையில் விரிக்கப் பயன்படுத்தப்படும் (ஈரோடு) பவானி ஜமுக்காள வகைகளைப் பயன்படுத்தி உருவாக்கிய ஃபேஷன் ஆடைகளால்,  எண்ணற்றோரின் கவனத்தையும்  ஈர்த்துவருகிறார்.

அவருடன் ஒரு சந்திப்பு:

உங்களைப் பற்றி..?

என்னுடைய முன்னோர் ஈரான் நாட்டில் வாழ்ந்த ஷியா பிரிவைச் சேர்ந்தவர்கள்.  பலநூறாண்டுகளுக்கு முன்பாக,  அவர்கள் இந்தியாவுக்கு வந்தார்கள்.  எங்கள் கொள்ளுத் தாத்தா  ஆயிரம் விளக்கு மசூதியைக் கட்டியவர்.  எனது தாத்தா மைசூரு அரண்மனையில் திவானாக இருந்தார்.  அப்பா  இத்தாலியில் இந்தியத் தூதராகப் பணியாற்றினார்.  இப்போது நான் எனது குடும்பத்துடன் சென்னையில் வசிக்கிறேன்.

ஃபேஷன் துறையில் நுழைந்தது எப்படி?

சிறு வயதில் நன்றாகப் பாடுவேன்; நடனமாடுவேன்;  ஓவியங்களை வரைவேன்;  எப்போதுமே வண்ணங்கள் என்றால், எனக்கு ரொம்பப் பிடிக்கும்.  சிவப்பு,  பச்சை,  நீலம்,  மஞ்சள் போன்ற பளிச்சென்ற வண்ணங்களை எனக்கு ரொம்பப் பிடிக்கும்.   

கோயில் கோபுரங்களில் எத்தனை உருவங்கள்;  எத்தனை விதமான வண்ணங்கள்!  மேற்கத்திய ஃபேஷன் உலகில் வெளிர் நிறங்களை அதிகம் பயன்படுத்துகின்றனர். வண்ணங்கள் மீது ஏற்பட்ட அதீதமான ஈர்ப்பின் காரணமாகத்தான் ஃபேஷன் துறையைத் தேர்ந்தெடுத்தேன்.  இத்தாலி நாட்டுக்குச் சென்று ரோம் நகரத்தில் ஃபேஷன் டிசைனிங் படித்தேன். 

ஃபேஷன் வெற்றிக்கு அடித்தளமிட்டது இத்தாலியா?

இத்தாலியே ஒரு வாழ்க்கைக்கான கல்லூரியாகும்.   அங்கே நான் கற்ற வாழ்க்கைப் பாடங்கள் ஏராளம். வாழ்க்கையில் நான் எதிர்கொண்ட சவால்களை எல்லாம் எதிர்கொள்ளும் மனோதைரியத்தையும்,  மனப் பக்குவத்தையும் அங்குதான் கற்றேன்.  ஃபேஷன் டிசைனிங் படித்தபோது,  பல்கலைக்கழகத்தில் முதல் மாணவியாகத் தேறினேன்.

ஜமக்காளத்தில்  ஃபேஷன் ஆடைகளை வடிவமைப்பு எப்படி?

பவானி ஜமக்காளங்களை முதன்முறையாகப் பார்த்தபோதே எனக்கு ரொம்பப் பிடித்தது.  அவற்றைப் பயன்படுத்தி புதிய பரிமாணம் கொடுக்க முடியும் என்ற எண்ணம் எனக்கு ஏற்பட்டது.  பரீட்சார்த்த ரீதியில் செயல்வடிவம் கொடுத்தேன்.  அவற்றுக்கு அபாரமான வரவேற்பு.

மத்திய, தென் அமெரிக்க நாடுகளில் ஜமக்காளம் போன்ற தடித்த துணிகளான உடைகளையே அதிகம் பயன்படுத்துகிறார்கள்.  பழங்குடி இனத்து மக்களின் உடைகளும் ஆழமான வண்ணங்களில்,  தடித்த துணிகளில் இருப்பதைப் பார்த்திருக்கிறேன்.   முதலில் ஜமக்காளத்தைப் பயன்படுத்தி, பெண்களுக்கான உடைகளை மட்டுமே வடிவமைத்தேன். ஆண்களுக்கான உடைகளையும் வடிவமைக்க ஆர்வமாக இருக்கிறேன். 

ஜமக்காளங்களை எங்கிருந்து வாங்குகிறீர்கள்? 

ஈரோடு மாவட்டத்தில் இருக்கும் பவானியில் உள்ள நெசவாளர்களால் நெய்யப்படும் பாரம்பரிய வண்ணமிகு ஜமக்காளங்களைத்தான் பயன்படுத்துகிறேன்.

கோ-ஆப்டெக்ஸில் இருந்து மொத்தமாக வாங்கி,  எனது உற்பத்தி மையத்தில் உடைகளைத் தயாரிக்கிறேன். 

தமிழ்நாட்டின் பாரம்பரிய பரதநாட்டியக் கலைக்குரிய ஆடைகளின் வண்ணங்களை அடிப்படையாகக் கொண்டு,  நவீன உடைகளை வடிவமைத்து அவற்றுக்கு "விண்வெளியுக சுந்தரி' என்று பெயரிட்டேன். அவற்றுக்கும் உலக நாடுகளில் பெரும் வரவேற்பு கிடைத்தது. 

ஃபேஷன் துறைக்கு ஏன் வந்தோம் என்ற சலிப்பு உங்களுக்கு ஏற்பட்டிருக்கிறதா?

மும்பையில் ஒரு ஃபேஷன் ஷோ நடத்துவதற்காக நான் மட்டும் தனியாகச் சென்றிருந்தேன்.  ஃபேஷன் ஷோ நன்றாகவே நடந்து முடிந்தது. ஆனால், எனது முதல் முயற்சியை யாரும் பாராட்டவில்லை.  பெரிதும் ஏமாற்றம் அடைந்த நான், மேக்-அப் அறையில் குலுங்கிக் குலுங்கி அழுதேன்.  ஆனாலும்,  எனக்கு  ஃபேஷன் உடைவடிவமைப்பு மீது ஆழமான காதல். அந்தக் காதல்தான் என்னை இன்னமும் இயக்கிக் கொண்டிருக்கிறது.

கரோனா தாக்குதல்,  பொதுமுடக்கம் போன்றவற்றால் ஏற்பட்ட பாதிப்பு மிகவும் கடுமையாக இருந்தது.  வியாபாரமே இல்லாத சமயத்திலும் வாடகைக் குறைப்பு போன்ற எந்தச் சலுகையும் கிடைக்காத சூழ்நிலையில் கடையை மூடும்படி நேரிட்டது. 

"இதுவும் கடந்துபோகும்' என்பதைக் கடைபிடிக்கிறேன். மகிழ்ச்சியான தருணங்களில்,  "இது நிரந்தரமில்லை!  எப்போது வேண்டுமானாலும் நிலைமை மாறக் கூடும்! என எனக்கு நானே எச்சரித்துக்கொள்வேன். 

சென்னையில் ஃபேஷன் உடைகளின் விற்பனையகத்தை விரைவில்துவக்கத் திட்டமிட்டுள்ளேன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com