சக்கர நாற்காலி கிரிக்கெட்
"கிரிக்கெட் ஆர்வம் மக்களிடம் நிறைய உள்ளது. அதை சக்கர நாற்காலி கிரிக்கெட்டின் மீதும் சற்று திருப்ப வேண்டும்'' என்கிறார் தமிழ்நாடு சக்கர நாற்காலி கிரிக்கெட் அணியின் கேப்டன் சங்கரவேல்.


"கிரிக்கெட் ஆர்வம் மக்களிடம் நிறைய உள்ளது. அதை சக்கர நாற்காலி கிரிக்கெட்டின் மீதும் சற்று திருப்ப வேண்டும்'' என்கிறார் தமிழ்நாடு சக்கர நாற்காலி கிரிக்கெட் அணியின் கேப்டன் சங்கரவேல். தூத்துக்குடியைச் சேர்ந்த 34 வயதான இவர், பொறியியல் படிப்பை முடித்துவிட்டு சென்னையில் கணினி மென்பொருள் நிறுவனம் ஒன்றில் பணிபுரிகிறார்.
ஆறு வயதில் போலியோவால் பாதிக்கப்பட்ட இவர் மனம் தளராமல் விளையாட்டுத் துறையிலும் சாதித்துவருகிறார்.
அவருடன் ஓர் சந்திப்பு:
வழக்கமான கிரிக்கெட்டுக்கும், சக்கர நாற்காலி கிரிக்கெட்டுக்கும் என்ன வித்தியாசம்?
போலியோவால் பாதிக்கப்பட்டவர்கள், முதுகுத்தண்டு பாதிப்புக்குள்ளானவர்கள், விபத்துகளால் கால்களை இழந்தவர்கள் என பலதரப்பட்ட மாற்றுத்திறனாளிகளே சக்கர நாற்காலியில் அமர்ந்துதான் விளையாடுவார்கள். பந்து வீசுபவர் சக்கர நாற்காலியில்அமர்ந்தபடியே வீச, விளையாடுபவரும் சக்கர நாற்காலியில்அமர்ந்தே எதிர்கொள்வார். மற்ற ஆட்டக்காரர்களும் மைதானத்தில் தங்களுக்குரிய இடத்தில் சக்கர நாற்காலியில் அமர்ந்துதான் விளையாடுவார்கள்.
தனி விதிமுறைகள் உண்டா?
இதற்கென்று 56 விதிமுறைகள் இருக்கின்றன. வழக்கமாக, கிரிக்கெட் பிட்ச் 22 கெஜ தூரம்இருக்கும். எங்களுக்கு 18 கெஜம்தான். பந்தை அடித்ததும், அது 30 கெஜ வட்டத்துக்கு வெளியில் சென்றுவிட்டால் நான்கு ரன்கள். 45 கெஜம் தாண்டினால் ஆறு ரன்கள்.
பந்தை அடித்தவுடன் ரன் எடுப்பதற்காக, ஓட வேண்டிய அவசியமில்லை. ஒவ்வொரு ரன்களுக்கும் தூரநிர்ணயம் உண்டு. பேட்ஸ் மேன் அடிக்கும் பந்தைச் சக்கர நாற்காலியில் இருந்து பீல்டர் தாவி, தடுத்து நிறுத்தினாலும், தரையில் இருந்தபடியே பந்தை எறியக் கூடாது; மீண்டும் சக்கர நாற்காலியில் அமர்ந்தவுடனே பந்தை எறியலாம்.
இந்த வகை கிரிக்கெட்எப்படிஆரம்பமானது?
ஜாதி, மதம், இனம், பொருளாதாரம், இடம், பாலின ஏற்றத் தாழ்வுகளுக்கு அப்பால் மிகவும் பிரபலமான விளையாட்டாக இருக்கிறது. சர்வதேச அளவில் மாற்றுத்திறனாளிகளுக்கான ஒலிம்பிக்ஸ் போட்டிகள்கூட நடத்தப்படுகின்றன. இப்படி ஆரம்பமானதுதான் சக்கர நாற்காலி கிரிக்கெட். இந்திய சக்கர நாற்காலி கிரிக்கெட் சங்கத்தின் தலைமை அலுவலகம் உத்திரப் பிரதேசத்தில் உள்ள லக்னெளவில் உள்ளது.
தமிழ்நாட்டில் சக்கரநாற்காலி கிரிக்கெட் அறிமுக மானதுஎப்படி?
தரையில் அமர்ந்தபடியே மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் ஆடுவது வழக்கத்தில் இருந்தது. சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்பு தூத்துக்குடியைச் சேர்ந்த அந்தோனி ராஜ் என்பவர்தான் சக்கர நாற்காலி கிரிக்கெட்டுக்கு அடித்தளம் போட்டவர். 2018-ஆம் ஆண்டு அந்தோனி ராஜ், துரைபாண்டி ஆகிய இருவரது முயற்சியில் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலும் கிரிக்கெட் குழுக்கள் உருவாக்கப்பட்டன. பின்னர், அவர்களுக்கு இடையில் போட்டிகள் நடத்தி, 15 பேர் கொண்ட தமிழ்நாடு அணி உருவாக்கப்பட்டது.
தற்போதைய அணியில் போலியோவால் பாதிக்கப்பட்ட ஆட்டக்காரர்கள்தான் அதிகம் உள்ளனர். நீண்ட நேரம் அமர்வதே சிரமம். அதிலும் சக்கர நாற்காலியில் அமர்ந்து கிரிக்கெட் ஆடுவது மிகவும் சவாலானதுதான்.
வேலூர், கோவை, சிவகங்கை, காரைக்குடி, தூத்துக்குடி, திருவள்ளூர் உள்ளிட்ட பகுதிகளில் அணிகள் சுறுசுறுப்பாகச் செயல்பட்டு வருகின்றன.
மற்ற மாநில அணிகளோடு விளையாடியதுண்டா?
கர்நாடகம், ஆந்திரம், தில்லி, பஞ்சாப், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட 20 மாநிலங்களில் பிரபலமாக உள்ளது. தேசிய அளவில் தற்போது 12 அணிகள் போட்டிகளில் பங்கேற்று வருகின்றன. கர்நாடக அணிக்கு பெரிதும் உதவிகள் கிடைக்கின்றன. ராஜஸ்தானில் அண்மையில் நடைபெற்ற போட்டிக்கு மற்ற மாநிலஅணியினர் ரயிலில் பயணித்து வர, கர்நாடக அணியினர் விமானத்தில் வந்தனர். இவர்களுக்கு அந்த மாநில அரசும் ஆதரவளிக்கிறது.
சர்வதேச அளவில் நிலைமை எப்படி?
பிரிட்டன், வங்கதேசம், இலங்கை பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் சக்கர நாற்காலி கிரிக்கெட் விளையாடப்படுகிறது.
சக்கர நாற்காலி கிரிக்கெட்டை பிரபலப்படுத்த என்ன செய்யலாம்?
கிரிக்கெட் ஆர்வம் மக்களிடம் நிறையஉள்ளது. அதை சக்கர நாற்காலி கிரிக்கெட்டின் மீதும் சற்று திருப்ப வேண்டும். அரசுகளும், தனியார் நிறுவனங்களும் உதவிகளைச் செய்திட முன்வர வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...