
வாயில் முகப்புச் சுவர்களில் நவீன ஓவியங்கள், இருபுறமும் பசுமையான தாவரங்கள், காட்சிக்கு உகந்த மரங்கள். சிவப்பு மண்பானையிலிருந்து சிற்றருவியாய் கொட்டும் தண்ணீர், அதன் கீழ் சிறிய தடாகத்தில் நீந்தி விளையாடும் வாத்துகள், அவற்றை விரட்டத் துடிக்கும் நாட்டுக் கோழிகள், அங்கு தாவத் தயாராகும் முயல்கள், அந்தப் பகுதியில் பறந்தும் நடந்தும் வலம் வரும் புறாக்கள்... என இயற்கை வனத்துக்குள் நுழைந்தாலும் காணக் கிடைக்காத காட்சியை காண்போரின் கண்முன்னே நிறுத்துகிறது அந்த பதினெட்டு ஏக்கர் பரப்பளவுள்ள கல்வி வளாகம்.
திரும்பிய பக்கமெல்லாம் விதவிதமான மரங்களும், காய்கறி தோட்டங்களும் வியக்கவைக்கின்றன. கூவும் குயில்கள், அகவும் மயில்கள், தாவும் அணில்கள், பரவசமூட்டும் பல வண்ண நிற பட்டாம் பூச்சிகள், காற்றில் பறக்கும் பல்வகை தட்டான்பூச்சிகள், யானை வடிவ மரம்... என இயற்கையே அந்த இடமெங்கும் நடனமாடுவதைக் காணலாம். இவ்வளவு இயற்கை காட்சிகளும் இடம் பெற்றிருப்பது புதுச்சேரி இலாசுப்பேட்டையில் உள்ள தாகூர் அரசு கலை, அறிவியல் கல்லூரி வளாகம்தான்.
கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் இந்தக் கல்லூரியின் பெயரைக் கேட்டாலே பெற்றோரும், பள்ளிப் பிள்ளைகளும் முகம் சுழிப்பர். எப்போது பார்த்தாலும் ஆசிரியர்கள், மாணவர்கள் போராட்டம். குப்பைகள் கட்டாந்தரையுமே கல்லூரி வளாகம் என்ற நிலையிருந்த அக்கல்லூரியின் தற்போதைய சூழலோ தலைகீழ் மாற்றம்.
இத்தகைய நல்ல மாற்றத்தை ஏற்படுத்தியவர் கல்லூரியின் முதல்வர் நாற்பத்து ஒன்பது வயதான சசி காந்ததாஸிடம் பேசியபோது:
'ஒடிஸா மாநிலத்துக்கு உள்பட்ட கஜபதி மாவட்டத்தில் உள்ள புதுரா கிராமம்தான் எனது சொந்த ஊர். அப்பா பிரபுல்லாகுமார்தாஸ். அரசு ஊழியர். அம்மா குடும்பத் தலைவி. சகோதரர் உள்ளார்.
அரசு பள்ளியில் கல்வியைத் தொடங்கி, அரசு கல்லூரியில் பட்டம் பெற்றேன்.
அருணாசலப் பிரதேச பல்கலைக்கழகத்தில் 'கடவுள் கணபதி தத்துவமுறை' யை ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றுள்ளேன்.
டேராடூனில் உள்ள இந்திய ராணுவப் பள்ளியில் பயிற்சிக் கல்லூரி விரிவுரையாளர் பணியில் சேர்ந்தேன். பின்னர், அருணாசலப் பிரதேச அரசுப் பணியில் உதவிப் பேராசிரியர். 2006இல் புதுவை காரைக்கால் அண்ணா கல்லூரி முதல்வராகப் பணியிட மாற்றம் செய்யப்பட்டேன். 2010இல் புதுச்சேரி பாரதிதாசன் மகளிர் கல்லூரி முதல்வராகி, 2017இல் முதல் தாகூர் அரசு கல்லூரி முதல்வராகத் தொடர்கிறேன்.
நான் பொறுப்பேற்றதற்கு முன் இந்தக் கல்லூரியில் 1600 ஆக இருந்த மாணவர் எண்ணிக்கை தற்போது 3,400 என கூடியுள்ளது. கடந்த 7 போராட்டம் என்பதே, 7 ஆண்டுகளாக எந்தப் போராட்டமும் நடைபெறவில்லை.
கல்லூரியில் மாணவர் இடை நிற்றல் 10 சதவீதத்திலிருந்து 1.4 சதவீதமாகக் குறைந்துள்ளது. தேர்ச்சி விகிதம் 37 சதவீதத்திலிருந்து 73 சதவீதமாகக் கூடுதலாகியுள்ளது.
கல்லூரி சுற்றுச்சூழலை மேம்படுத்த வேலுநாச்சியார், கட்டபொம்மன் உள்ளிட்டோர் பெயர்களில் 12 பூங்காக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
மைக்ரோடெக் பூங்காவும், குப்பைகளை உரமாக்கும் பிரிவும் செயல்படுகின்றன. இங்குள்ள கரோனா நினைவுப் பூங்காவில் ஆளுநர் உள்ளிட்ட முக்கிய வி.ஐ.பி.க்கள் தங்களுடைய பெயரில் மரம் நட்டுள்ளனர். கல்லூரிக்குத் தேவையான காய்கறி, பூஜைக்கான பூக்கள், முக்கனி வகைகள் என அனைத்தும் கல்லூரி வளாகத்துக்குள்ளேயே கிடைக்கும் வகையில் மாணவர்கள், ஊழியர்கள் உதவியுடன் செயல்படுகிறோம்.
சூரிய மின்சக்தி மூலம் முதல்வர் அலுவலகம் செயல்படுகிறது. மாணவர்களுக்கான கல்வி தடையின்றி கிடைக்க தாற்காலிக ஆசிரியர்களை நியமித்துள்ளோம். முன்னாள் மாணவர்கள் கல்லூரியில் கடந்த கால நிலை குறித்தும், தற்போதைய மாற்றம் குறித்தும் உரையாற்ற வைக்கிறோம்.
புதுச்சேரி நகர் குறித்து அவ்வப்போது மாணவ, மாணவியருக்கு விநாடிவினா போட்டிகளையும் நடத்தி வருகிறோம்.
கல்வியுடன் மாணவர்கள் தொழில் முனைவோராகும் பயிற்சியும், வாய்ப்பும் வழங்கப்பட்டு வருகிறது. இங்குள்ள சிற்றுண்டி விடுதியை மாணவர்களே நடத்திவருகின்றனர். மண்புழு, தேனீ வளர்ப்பு, காளான் வளர்ப்பு.. என பல தொழில் வாய்ப்புக்கான பயிற்சியும் வழங்கப்படுகிறது.
'ஏட்டுக் கல்வியை மட்டுமல்லாது, மாணவர்களின் எதிர்காலத்துக்கான சமூகக் கல்வியையும் வழங்கவேண்டும்' என்ற நோக்கத்தை நிறைவேற்றியுள்ளோம்.
புதுவை மாநிலத்திலேயே முதன்முதலாக தாகூர் அரசு கல்லூரிக்கு தேசிய தர நிர்ணயக்குழு (நாக்) ஏ சான்றை வழங்கியுள்ளது. அத்துடன் புதுவையில் கட்டாயம் பார்க்க வேண்டிய சுற்றுலாத் தலமாகவும் மத்திய சுற்றுலாத்துறை அங்கீகரித்துள்ளது.
பிற கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவியரும் வாரம்தோறும் வந்து தாகூர் கல்லூரி வளாகத்தை சுற்றிப்பார்த்துச் செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். விடுமுறை நாள்களில் சுற்றுலாப் பயணிகள் ஏராளமானோர் கல்லூரி வளாகத்தை சுற்றிப்பார்க்க ஆர்வத்துடன் வருகின்றனர். பொதுமக்களுக்கான உணவு, விவசாயிகளுக்கான இயற்கை உரம் என பல வகை உதவிகளையும் கல்லூரி சார்பில் செய்துள்ளோம்.
நாட்டில் சமூகத்துக்கான கல்வியை அளிக்கும் மாதிரி கல்வி நிலையமாக இந்த தாகூர் அரசு கல்லூரி வளாகத்தை மாற்றுவதே எதிர்காலத் திட்டம்'' என்கிறார் கல்லூரி முதல்வர் சசிகாந்ததாஸ்.
கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் சிலரிடம் பேசியபோது:
'கல்லூரி என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என எண்ணும் வகையில் கலை, பண்பாடு, அறிவியல் என அனைத்திலும் முன்மாதிரியாக தாகூர் கல்லூரி திகழ்கிறது.
சுவாமி விவேகானந்தரின் வழியில் தேசியம், தெய்வீகத்தை கடைப்பிடித்து வரும் கல்லூரி முதல்வர் சசிகாந்ததாஸ், விவேகானந்தர் கோரிய 100 இளைஞர்களில் ஒருவர் என்றால் மிகையில்லை.
கல்லூரி முதல்வரின் அலுவலகத் தரை விரிப்பில் அமர்ந்துதான் தினமும் பணிகளில் ஈடுபடுகிறார். அவரது தனித்துவமான நிர்வாகத் திறனால் கல்லூரியை அகில இந்திய அளவில் மிகச்சிறந்த புதுவை சுற்றுலாத் தலமாக அறிவிக்கும் அசுர சாதனையை நிகழ்த்தியுள்ளார். கல்லூரியை மேம்படுத்தியுள்ள அவரை நாங்கள் பாராட்டக் கடமைப்பட்டுள்ளோம்'' என்றனர்.
படங்கள்கி.ரமேஷ்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.