சரித்திரம் பேசும் வெல்ஸ்..!
'சயின்ஸ் ஃபிக்ஷன்' கதைகளால் சரித்திரத்தில் நிலைத்து நிற்பவர் ஹெச்.ஜி.வெல்ஸ்.


'சயின்ஸ் ஃபிக்ஷன்' கதைகளால் சரித்திரத்தில் நிலைத்து நிற்பவர் ஹெச்.ஜி.வெல்ஸ்.
இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் ஏற்பட்ட விஞ்ஞான முன்னேற்றங்களும், அதன் எதிர்விளைவுகளும் புதினங்களாகப் பிரதிபலித்தன. விண்வெளிப் பயணம், ரோபோ, யந்திர மூளை, கணினி, உலகத்தின் அழிவு ஆகிய விஞ்ஞானத் தொழில்நுட்பச் சாதனைகள் ஆகியன கற்பனை இலக்கியங்களுக்குப் பிடித்தமான கருக்களாக அமைந்தன.
பிரபல எழுத்தாளர்கள் லூசியன், ஸ்விப்ட், மேரி ஷெல்லி, புல்வர், லிட்டன் உள்ளிட்டோர் இதில் முன்னோடிகளாக விளங்கினாலும், 19-ஆம் நூற்றாண்டின் இறுதியில்தான் 'சயின்ஸ் ஃபிக்ஷன்' முழு உருவைப் பெற்றது. இதில், 'ஜூலஸ் வெர்னாவின்' படைப்புகள் பிரபலமானவை. ஆனாலும், இத்துறையில் வெற்றிக் கொடி நாட்டியவர் 'ஹெச்.ஜி.வெல்ஸ்' என்னும் ஆங்கில எழுத்தாளர்தான்.
இவரது நூல்களில் 'தி வார் ஆஃப் தி வேர்ல்ட்ஸ்' , 'தி ஃபுட் ஆஃப் தி காட்ஸ்', 'தி டைம் மெஷின்', 'தி வார் இன் தி ஏர்' என்பவை முக்கியமானவை. நூறு நூல்களுக்கு மேலாக எழுதியுள்ள ஹெச்.ஜி.வெல்ஸின் முழு பெயர் 'ஹெர்பர்ட் ஜார்ஜ் வெல்ஸ்' என்பதாகும்.
இங்கிலாந்தில் உள்ள பிராம்லேயில் 1866-ஆம் ஆண்டு செப். 21-இல் பிறந்தவர் இவர். வறுமையில் வாடிய குடும்பம். வெல்ஸ் தன் பதிமூன்றாம் வயதில் 'புக் கீப்பிங்' பாடத்தில் சான்றிதழ் பெற்று, வேலை தேட கிளம்பினார். ஆனால், ஒவ்வொரு வேலையிலும் அவருக்குத் தோல்வியே ஏற்பட்டது.
1883-இல் ஒரு கிராமர் பள்ளியில் மாணவர்- ஆசிரியராகும் வரை அவர் வேறு எந்த வேலையிலும் ஆர்வம் கொள்ளவில்லை. அங்கு அவர் பொதுச்சான்றிதழ் தேர்வில் நல்ல மதிப்பெண்
களைப் பெற்று தேறவே, லண்டனிலுள்ள 'ரார்மல் ஸ்கூல் ஆஃப் சயின்ஸ்' பள்ளியில் சேர வாய்ப்பும் கிடைத்தது. அங்கு பிரபலமான டி.ஹெச்.ஹக்ஸிலியின் அன்புக்கும் பாத்திரமானார்.
'ஃபாபியின் சொஸைட்டி'யில் சேர்ந்த வெல்ஸ் சோஷலிஸத்தில் ஆர்வம் கொண்டார். விஞ்ஞானப் படிப்பில் சிரத்தையின்றி இலக்கியம், வரலாறு, தத்துவம், கலை, மதம் ஆகியவற்றை ஆவலுடன் கற்கலானார்.
'சயின்ஸ் ஸ்கூல் ஜர்னல்' என்ற பத்திரிகையின் முதல் ஆசிரியரானார் வெல்ஸ். பாடம் போதிக்கும் ஆசிரியராகவும் மாறினார். ஆனால், எந்த வேலையையும் ஏற்க முடியாதபடி, அவர் உடல் நலம் கெட்டது. முடிவில் லண்டன் டியூடோரியல் காலேஜில் பயிற்சியாளரானார். அவர் தன் டீச்சிங் டிப்ளமாவையும், 'பேச்சுலர் ஆஃப் சயினஸ்' டிகிரியையும், 1890-இல் லண்டன் சர்வகலா சாலையில் பெற்றார். பிறகு, 'எஜிகேஷனஸ் டைம்ஸ்' என்ற பிரபல பத்திரிகையில் கட்டுரைகளை எழுதத் தொடங்கினார்.
வெல்ஸ் தன் உறவுக்காரப் பெண் இஸபெல் என்பவரை 1891-இல் மணம் செய்துகொண்டார். பின்னர், அவர்கள் 1895-இல் விவகாரத்தும் பெற்றனர். பிறகு வெல்ஸ், அன்னி காத்தரைன் ராபின்ஸ் என்பவரை மணந்துகொண்டார்.
உடல் கோளாறு, நோய் காரணமாக, ஆசிரியர் பணியைத் தொடர முடியவில்லை. ஆகவே, வீட்டில் இருந்தே கதைகள் எழுதுவதிலேயே செலவிட்டார். இவர் எழுதிய 'காலயந்திரம்' (டைம் மிஷின்) மிகவும் புகழ் பெற்றது. இந்த நூல் விஞ்ஞான உண்மைகளை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது. மற்றொன்று கடவுளர்களின் உணவு (தி ஃபுட் ஆஃப் தி காட்ஸ்). இதுவும் மகத்தான வெற்றி பெற்ற நவீனம்.
யந்திரமும், விஞ்ஞானமும் 20-ஆம் நூற்றாண்டில், மனித வாழ்க்கையிலும், எண்ணங்கள் ஏற்படுத்தும் முன்னேற்றங்களையும் எதிர்பார்ப்புகளையும் வெல்ஸ் தன்னுடைய நூலில் குறிப்பிட்டுள்ளார்.
வெல்ஸ்லின் கடைசி முயற்சி உலகளாவிய மனித உரிமைகளை வலியுறுத்தும் கோட்பாட்டுக்காக, ஐக்கிய நாடுகள் சபை அமைப்புக்காகக் கடுமையாகப் பாடுபட்டார். தொடர்ந்து, உடல்
நலம் குன்றிய நிலையில், வெல்ஸ் 1946 ஆகஸ்ட் 13-இல் மறைந்தார்.
ஹெச்.ஜி.வெல்ஸின் புகழ்பெற்ற இரு நாவல்கள் விஞ்ஞான அடிப்படையில் உருவாக்கப்பட்டவை. இரு நூல்களின் கதை சுருக்கத்தைக் காண்போம்:
'தி டைம் மிஷின்' எனப்பட்ட காலயந்திரம்:
இந்த நூல் விஞ்ஞான அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட விந்தையான காதல்களைக் கூறும் நவீனம். 1895-இல் வெளிவந்தது. 702-ஆம் ஆண்டு ஜனவரி 8-இல் சமுதாயம் எப்படி இரு வகையாகப் பிரிந்து வாழ்ந்தது என்பதின் கற்பனை இது.
பூமியின் அடியில் வாழும் தொழிலான வர்க்கமான 'மார்லாக்குகள்' , பூமியின் மேலே வாழும் அழிவை நோக்கிச் செல்லும் 'எலாய்கள்' ஆகிய இரு இன மக்களை இதில் வர்ணிக்கிறார். மனித இனத்தில் அசைக்க முடியாத நம்பிக்கையைக் கொண்டிருந்தவர் வெல்ஸ். காலயந்திரத்தின் மூலம் தான் கண்ட மனிதனைவிட தான் அறிந்த மனிதனுக்கே அவர் சாதகமாக இருந்தார். காலத்தைப் பற்றிய சில சுவையான வினாக்களை இந்த நூலில் வெல்ஸ் எழுப்பியுள்ளார். இவை வாசகர்களைத் தொடர்ந்து சிந்திக்க வைக்கும்.
'தி ஃபுட் ஆஃப் காட்ஸ்' (கடவுளர்களின் உணவு) :
விஞ்ஞானிகள் தயாரித்த 'ஹெர்க்னோஃயோபியா' என்னும் புதிய கண்டுபிடிப்பான ஓர் உணவானது மனித இனத்தை எப்படி பாதிக்கிறது என்பதையே இந்த நாவல் கூறுகிறது. இந்த உணவைக் கண்டுபிடித்தவர்கள் பேராசிரியர் ரெட்வுட், பென்சிங்டன் என்ற இரு விஞ்ஞானிகள்.
உயிர்வாழ் இனத்தின் உயிர்நுண்மங்களில் வியப்பூட்டும் மாற்றத்தை இந்தப் புதிய உணவு ஏற்படுத்துகிறது. வழக்கமான வளர்ச்சி முறையில் இருந்து மாறுபட்டுச் செல்கிறது.
முதலில் கோழிக் குஞ்சுகளுக்கு உணவை அளித்து பரீட்சிக்கப்படும்போது, அவை குதிரை அளவுக்கு வளர்கின்றன. அதேசமயம் எதிர்பாராதபடி குளவிகளும், எலிகளும் இந்த உணவை உண்டு பிரம்மாண்டமான வளர்ச்சியைப் பெற்று, அச்சம் தரும் தோற்றத்தில் மக்களிடையே பீதியை உண்டாக்குகின்றன.
விஞ்ஞானிகளின் நண்பரான காஸார் என்ற பொறியாளர் தன் ஆள்களுடன் இந்த ராட்சச ஜீவன்களை வேட்டையாடிக் கொல்கிறார். பொதுமக்களின் பீதி குறைந்தாலும், சில அரசியல்வாதிகள் 'பீம்ஃபுட்' எனும் இந்த உணவைத் தடை செய்ய வேண்டும் என்று ஆர்ப்பரிக்கின்றனர்.
ஆனாலும், காஸார், பென்சிங்டன், இவர்களின் மகன்கள், திருமதி ஸ்கின்னரின் பேரனும் ஜெர்மனியின் இளவரசியும் இந்த உணவை உண்டு, ராட்சக உருவில் வளர்ச்சி அடைந்திருக்கின்றனர்.
புதிய தலைமுறையினரான இந்த ராட்சசர்களைச் சமுதாயம் ஏற்கவோ, அவர்களுக்கு இடம் அளிக்காமல் அழிக்கத் திட்டமிடுகிறது ஆனால், ராட்சச வடிவவில் பெரும் உருவமுடைய இந்தப் புதிய இனம் துணிவுடன் வாழ்வதற்குத் தங்களுக்கு உரிமையுண்டு என்று வாதாடுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...