முப்பது ஆண்டுகளுக்கு முன்பு வரை நாய்கள் இல்லாத தெருக்களோ, கிராமங்களோ இல்லை எனலாம். தற்போது நாட்டு நாய்கள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. இருந்தாலும், காவலுக்காகவும் ஆசைக்காகவும் வீடுகளில் வளர்ப்பு நாய்களை வளர்க்க குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஆவலாய் இருக்கின்றனர். ஆனால், பலருக்கு நாய்களை எவ்வாறு
பராமரிப்பது என்பது குறித்து அறியாமல் சிக்கல்களில் சிக்கிக் கொள்கின்றனர்.
இதுகுறித்து தமிழ்நாடு கால்நடை மருத்துவப் பல்கலைக்கழக பயிற்சி, ஆராய்ச்சி மையத்தின் (தருமபுரி) தலைவர் முனைவர் மொ.ச. கண்ணதாசனிடம் பேசியபோது:
எந்த வகை நாய்கள் சிறந்தது:
""நாய்கள் வளர்ப்பதென்றால் எல்லோருக்கும் அலாதி பிரியம்தான். நாய்களை வளர்க்க ஆசைப்படுவோர் நாட்டு வகை நாய்களைத் தேர்வு செய்வது நல்லது. அதன் சிறுவயதிலேயே, குட்டியாக இருக்கும்போதே நாய்களைத் தேர்வு செய்து வளர்ப்பது ரொம்பவும் நல்லது.
தெருக்களில் உள்ள நாட்டு வகை நாய்கள் குட்டிப் போடும்போதே, அவற்றையே எடுத்துவளர்த்தால் பிரச்னைகள் எதுவும் இல்லாமல் வளரும். இல்லையெனில், ராஜபாளையம், சிப்பிப்பாறை, கோம்பை போன்ற வகை நாய்களைத் தேர்வு செய்து வளர்த்தால் பராமரித்தலும் எளிது. காவலுக்காக வளர்க்க விரும்புவோர் ராஜபாளையம் வகை நாய்களைத் தேர்வு செய்யலாம்.
ஜெர்மன் ஷெப்பேர்டு போன்ற வெளிநாட்டு வகை நாய்களை வளர்ப்பது மிகவும் அதிகமான செலவினங்களைச் செய்ய நேரிடும்.
நாய்களைப் பராமரித்தலும், தடுப்பூசியும்...:
நாய்களுக்கு கால்நடை மருத்துவரின் ஆலோசனைப்படி, தடுப்பூசிகளை உரிய நேரத்தில் நாய்களுக்கு அளித்தால் நோய்கள் வராமல் தடுக்கலாம். முக்கியமாக, நாய்களுக்கு வெறிநோய் ஏற்படும். இந்த நோய் ஏற்பட்டால், மனிதர்களுக்கும் பரவும் அபாயம் உண்டு. ஆகவே, தடுப்பூசிகளை அவசியம் நாய்களுக்குச் செலுத்துதல் கவனத்தில் கொள்ள வேண்டியதாகும்.
நாய்களிடம் சிறிய சிறிய வார்த்தைகளைப் பேசி அவற்றிடம் வளர்ப்போர் நல்ல முறையில் பழகுதல் அவசியம். இவ்வாறு செய்தால், அவை மூர்க்கத்தனமாய் செயல்படுவதிலிருந்து விடுவிக்க முடியும். செல்லமாய் அதட்டுதல் என்பது நாய்களைக் கட்டுப்படுத்தக் கூடியது.
நாய்களிடம் விளையாடிவிட்டோ, உணவு அளித்துவிட்டோ அவற்றிடம் இருந்துவிட்டு வந்தாலோ கை, கால்களை உடனடியாகக் கழுவுவது நல்லது.
சுறுசுறுப்பாகவும், அழகாகவும் இருக்கும் பெமேரேனியன் வகை நாய்களை வளர்ப்பதைத் தவிர்ப்பது நல்லது. இந்த வகை நாய்களை அருகருகே உள்ள வீடுகளைச் சேர்ந்த நாய்கள் ஏற்காது. பெமேரேனியன் வகை நாய்களைப் பார்த்து குரைத்துகொண்டே இருக்கும். ஆகவே, பிற நாய்களை ஏற்கும் வெளிநாட்டு வகை நாய்களை வீடுகளில் வளர்ப்பது சிறந்தது. எந்தெந்த வகை நாய்கள் ஏற்படையது என்பதை நாய்கள் வளர்க்கும் முன் கால்நடை மருத்துவரிடம் ஆலோசிப்பது நல்லது.
தெருவில் நாய்கள் அதிக அளவில் சுற்றித் திரிந்தால், உள்ளாட்சி அமைப்புகளுக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும். உள்ளாட்சித் துறையினர் நாய்களுக்கு கருத்தடை சிகிச்சை அளித்து, இனப்பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவர்.
நாட்டு வகை நாய்களுக்கு "சி.டி.' வகை நோய்கள் வருவதைத் தடுக்க, தடுப்பூசிகளை அவசியம் செலுத்த வேண்டும்.
நாய்களுக்கு ஆண்டுக்கு மூன்று முறை குடல் பூச்சி நீக்க மருந்தைச் செலுத்துவதும் முக்கியம். நாய்களுக்கு தோல் சார்ந்த நோய்கள் ஏற்பட்டால், அவை மனிதர்களுக்கும் பரவும்.
உணவு...:
நாய்களுக்கு சிறுவயது முதலே அசைவ உணவு வகைகளை அளிக்காமல், சைவ வகை உணவுகளை அளித்து பழக்கம் செய்தால் அவை மூர்க்கத்தனமாய் இருக்காது. பச்சை காய்கறிகள், பழங்களை அளிப்பதைத் தவிர்க்க வேண்டும். எந்த உணவை வழங்கினாலும், வேக வைத்த உணவுகளை வழங்குவதுதான் சிறந்தது. முட்டையின் வெள்ளைக்கரு, பருப்பு, கீரை போன்ற உணவு வகைகளை அளித்து நாய்களைப் பழக்கப்படுத்துவது நல்லது. ஒரே இடத்தில் நாய்களுக்கு உணவு வைப்பதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். பொது இடங்களில் உணவுகளை நாய்க்கு அளிக்கக் கூடாது.
இயற்கை உபாதைகளுக்காக நாய்களை வெளியே அழைத்துச் செல்லும்போது, இறைச்சிக் கழிவுகள் உண்பதைத் தவிர்க்க வைக்க வேண்டும். இறைச்சிக் கழிவுகளை அளித்தாலும், வேகவைத்து அளிக்க வேண்டும். இதேபோல், கறிக்கடைக்காரர்கள், "மீன்கடைக்காரர்கள் இறைச்சிக் கழிவுகளை நாய்களுக்கு நேரடியாக வந்து அளித்தாலும், அதை பெறாமல் தவிர்க்க வேண்டும்.
குப்பைகளை அகற்றுவதற்காக, அவர்கள் நாய்களுக்கு அளிக்க முயற்சிக்கின்றனர். ஆனால், நாய்கள் இறைச்சிக் கழிவுகளைச் சாப்பிடுவதால் மூர்க்கத்தனமாய் நடக்கும் வாய்ப்புகள் அதிகமாகும். நாளடைவில் மனிதர்களையும் பயமுறுத்தும்.
ஜெர்மன் ஷெப்பேர்டு போன்ற சில வெளிநாட்டு வகை நாய்களுக்கு அளிக்கப்படும் உணவு அதிகபட்சச் செலவையே அளிக்கும்.
"நாய்கள் ஜாக்கிரதை' போர்டு அவசியம்:
பெரும்பாலும் அடுக்குமாடிக் குடியிருப்புகளில் வசிப்போர் பெமேரேனியன் வகை நாய்களையே வளர்ப்பர். தனி வீடாகவோ, பங்களா வகை வீடுகளில் இருப்போர் காவலுக்காக வளர்க்கப்படும் நாய்களை வளர்ப்பார்கள். இவர்கள் தங்களது வீடுகளுக்கு வருவோருக்குத் தெரியப்படுத்தும் வகையில், "நாய்கள் ஜாக்கிரதை' என்ற பலகையை அவசியம் வைக்க வேண்டும்.
ஒருவேளை நாய்கள் குரைத்தால், அவற்றை கைகளாலோ, கம்புகளாலோ விரட்ட முயற்சித்தாலோ, அச்சுறுத்தினாலோ அவை கோபப்பட்டு விரட்டும் அல்லது கடிக்க வரும். ஆகவே, நாய்கள் வளர்ப்பாளர்கள் வரும் வரையில், அமைதியாக நின்றுவிடுவதே நல்லது.
நாய்க்கடி ஏற்பட்டால்...:
நாய்க்கடி ஏற்பட்டால் மனிதர்கள் அச்சப்படக் கூடாது. உடனடியாக ஓடும் நீரில் சோப்பு போட்டு கழுவ வேண்டும். பின்னர் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று, சிகிச்சை அளிப்பது நல்லது. முக்கியமாக, நாய்க் கடிக்கான தடுப்பூசிகள் அரசு தலைமை மருத்துவமனைகளில்தான் சிறந்தது'' என்றார்.
-தி.நந்தகுமார்