ஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

உலகப் போட்டியிலும் வெல்வேன்

'அடுத்த ஆண்டு உலக அளவில் நடைபெறும் குத்துச்சண்டைப் போட்டியிலும் பங்கேற்று அதிலும் தங்கம் வெல்ல வேண்டும் என்பதே எனது லட்சியம்'' என்கிறார் நீனா.

News image
Updated On :9 நவம்பர் 2024, 6:30 pm

'அடுத்த ஆண்டு உலக அளவில் நடைபெறும் குத்துச்சண்டைப் போட்டியிலும் பங்கேற்று அதிலும் தங்கம் வெல்ல வேண்டும் என்பதே எனது லட்சியம்'' என்கிறார் நீனா.

இவர் தேசிய அளவிலான கிக் பாக்சிங் போட்டிகளில் 8 தங்கமும், ஆசிய நாடுகள் அளவிலான போட்டிகளில் 2 தங்கப் பதக்கமும் என மொத்தம் 10 தங்கப் பதக்கங்களைப் பெற்று நாட்டுக்குப் பெருமை சேர்த்துள்ளார்.

காஞ்சிபுரம் பொத்தேரி பெரிய மேட்டுத் தெருவில் வசிக்கும் நெசவாளர் தம்பதியரான நீலகண்டன்- மலர்க்கொடி மகளான நீனா, பச்சையப்பன் மகளிர் கல்லூரியில் தமிழில் பட்ட மேற்படிப்பில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். தொடக்கத்தில் கராத்தே கற்ற இவர், தற்காப்புக்காக குத்துச் சண்டையும் கற்று சாதனைகளைப் புரிந்துவருகிறார்.

அவரிடம் பேசியபோது:

'எனது வீட்டுக்கு அருகேயிருந்த 'ஒன்மேன் மார்ஷியல் அகாதெமி' என்ற கராத்தே பயிற்சி மையத்தில், பயிற்சி பெற்றேன். பிளாக் பெல்ட் வாங்கியதோடு, முதல் போட்டியிலேயே மாவட்ட அளவில் முதலிடத்துக்கு வந்தேன்.

அந்த நேரத்தில் எனது பயிற்சியாளர் பெண்களுக்காக தற்காப்புக்காக 'உதை குத்துச்சண்டை' எனப்படும் 'கிக் பாக்சிங்' கற்றுத் தர ஆரம்பித்ததால், பத்தாம் வகுப்பு படிக்கும்போதே கிக்பாக்சிங் கற்றேன். இந்த விளையாட்டுக்கான உடையும், போட்டியும் வித்தியாசமானதாவும்,கடினமானதாகவும் இருந்தது.

2017-இல் கிக்பாக்சிங் போட்டியிலும் மாவட்ட அளவில் முதலிடத்தையும்,

2018-இல் சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான போட்டியிலும் முதலிடம் பெற்றேன். அந்த நேரத்தில் எனது பெற்றோரும், பயிற்சியாளர்களும் கொடுத்த ஊக்கம் மேலும் ஆர்வத்தை தூண்டியது.

2019-இல் தெலங்கானாவில் நடைபெற்ற தேசிய குத்துச்சண்டைப் போட்டியில் இரண்டாவது இடத்தைப் பெற்று, வெள்ளிப் பதக்கம் வாங்கினேன்.

விளையாட்டில் ஆர்வம் வந்து ஈடுபாடு அதிகரிக்க, படிப்பில் கவனம் குறைந்தது. கல்வியில் தேர்ச்சி பெற்றபோதும், விளையாட்டில் அதிகமான கவனத்தை செலுத்தினால் சாதிக்க முடியுமுன்னு நம்பிக்கை வந்தது. அதனால் பல தங்கம்,வெள்ளிப் பதக்கங்களை பெற முடிந்தது.

2021, 2023-ஆம் ஆண்டுகளில் தேசிய அளவில் நடைபெற்ற போட்டியில் தலா ஒரு தங்கப் பதக்கமும், 2023, 2024- இல் ஆசிய அளவிலான போட்டிகளில் தலா ஒரு தங்கப் பதக்கமும் பெற்றுள்ளேன்.

நிகழாண்டில் ஜூலை மாதத்தில் கோவாலில் நடைபெற்ற போட்டியில் 3 தங்கமும், அக்டோபர் மாதத்தில் கம்போடியா நாட்டில் நடைபெற்ற ஆசிய அளவிலான போட்டியில் ஒரு தங்கமும்,2 வெள்ளிப்பதக்கமும் பெற்றேன்.இதுவரை மொத்தம் 10 தங்கப் பதக்கங்களும்,7 வெள்ளிப் பதக்கங்களும், ஒரு வெண்கலப் பதக்கமும் பெற்றதே எனது சாதனை.

அளவுக்கு அதிகமான நம்பிக்கையே எனது வெற்றிக்கு காரணம்.

கம்போடியாவில் நடைபெற்ற ஆசிய அளவிலான குத்துச்சண்டைப் போட்டியில் மொத்தம் 22 நாடுகளைச் சேர்ந்த இருநூற்றுக்கும் மேற்பட்ட வீராங்கனைகள் பங்கேற்றிருந்தனர். சிறிதும் மனம் தளராமல், ஈரான் நாட்டு வீராங்கனையை வென்று தான் தங்கம் பெற்றேன். கிக்பாக்சிங் போட்டியில் ஆசிய அளவில் தங்கம் வென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த பெண் நான் ஒருவர்தான்.

கம்போடியாவில் நடைபெற்ற குத்துச்சண்டைப் போட்டியில், 'பாயிண்ட் பைட்', 'லைட் காண்டாக்ட்' என்ற இரு பிரிவுகளில் தங்கமும், 'மியூசிக்கல் பார்ம்ஸ்' என்ற பிரிவில் ஒரு வெள்ளியும் பெற்று இந்தியாவுக்குப் பெருமை சேர்த்தேன். வெற்றி பெற்று நாடு திரும்பி வந்தபோது, சென்னை விமான நிலையத்தில் பொதுமக்கள் கொடுத்த உற்சாக வரவேற்பு என் வாழ்வில் மறக்க முடியாதது. காஞ்சிபுரத்திலும் பல்வேறு முக்கியப் பிரமுகர்களும், வணிக அமைப்பினரும் வரவேற்பு அளித்தனர்.

நிகழாண்டு அக்டோபரில் கம்போடியா செல்வதற்கு செலவுக்காக ரூ.2.50 லட்சத்தை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினிடம் பெற்றபோது, 'எப்படியாவது வெற்றி பெற்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்தே ஆக வேண்டும்' என்று ஒரு விதமான உணர்வு ஏற்பட்டது.

எனது பெற்றோர் இரவு பகலாக நெசவு நெய்து அதில் சம்பாதித்த பணத்தை என்னிடம் கொடுத்து, வெளிநாடுகளில் நடைபெறும் போட்டிகளுக்கு அனுப்பி வைத்தனர்.

பலமுறை அம்மாவின் நகைகளை அடகு வைத்தும், விளையாட்டு வீரர்கள் சிலரிடம் கடன் வாங்கியும்தான் கலந்துகொண்டேன்.

இது ஒருபுறமிருக்க, மறுபுறம் எங்களது உறவினர்கள் சிலரும் எனது பெற்றோரிடம், 'பெண் பிள்ளைக்கு இந்த குத்துச்சண்டை விளையாட்டு தேவையா?' என்று சண்டை போடுவார்கள். அதையெல்லாம் எனது பெற்றோர் பொருள்படுத்தவே இல்லை.

தட்டிக் கொடுத்து என்னை உற்சாகப்படுத்திய பெற்றோருக்கு நன்றி சொல்ல வார்த்தைகளே இல்லை. மாநிலத் தலைமை பயிற்சியாளர் சுரேஷ்பாபு, பயிற்சியாளர்கள் ஹரிஸ், கணேஷ்குமார் உள்ளிட்டோரின் பயிற்சியும் எனது வெற்றிக்கு பேருதவியாக இருந்தது'' என்கிறார் நீ.நீனா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.