வேடந்தாங்கலுக்கு வரும் பறவைகள் போல..!

பள்ளிகள், கல்லூரிகளில் முன்னாள் மாணவர்கள் சந்திப்புக் கூட்டங்கள் இப்போது அதிகரித்துவிட்டன.
வேடந்தாங்கலுக்கு வரும் பறவைகள் போல..!
Updated on
3 min read

பள்ளிகள், கல்லூரிகளில் முன்னாள் மாணவர்கள் சந்திப்புக் கூட்டங்கள் இப்போது அதிகரித்துவிட்டன. இந்தக் கூட்டங்களில் ஆண்கள்தான் பெருமளவு வருகின்றனரே தவிர, பெண்கள் (தற்போதைய இல்லத்தரசிகளோ, பணிபுரியும் பெண்களோ, எதுவாகினும்...?) விரல்விட்டு எண்ணக் கூடிய அளவுக்கே பங்கேற்கின்றனர்.

அவ்வப்போது வாரவிடுமுறை நாள்களில், கல்வி நிறுவனங்களில் முன்னாள் மாணவர்கள் சந்திப்புக் கூட்டங்கள் நடக்கின்றன. ஆண்கள் தங்களது குடும்பத்தோடு பங்கேற்கின்றனர். ஆனால், பெண்கள் வரவிருப்பம் இருந்தும் வர இயலாதச் சூழல்தான்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில், திருவாரூர் மாவட்டத்தில் அமைந்துள்ள முத்துப்பேட்டை ரஹமத் பெண்கள் மெட்ரிக் பள்ளியானது தொடங்கப்பட்ட 1996 -ஆம் ஆண்டு முதல் தற்போது வரை படித்த மாணவிகளின் சந்திப்புக் கூட்ட நிகழ்ச்சிக்கு அண்மையில் ஏற்பாடு செய்யப்பட்டது.

கல்லூரியில் படித்த பழைய மாணவர்கள் சந்திப்பது சாத்தியம். ஆனால், பள்ளிகளில் படித்து வெளியேறி வெவ்வேறு இடங்களில் திருமணமாகிச் சென்றுவிட்ட மாணவிகள், தங்கள் குழந்தைகளுடன் மீண்டும் பள்ளியில் சந்திப்பது என்பது கேள்விப்படாத நிகழ்வு.

பள்ளி 28 -ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள நிலையில், ரஹமத் கல்வி அறக்கட்டளை நிறுவனர் எம்.ஏ.முஸ்தபா ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்க வசதியாக ஏற்பாடுகளைச் செய்துவிட்டார்.

அன்று காலை எட்டு மணிக்கு பள்ளி வளாகத்தில் சில பேர்தான் திரண்டிருந்த நிலையில், அடுத்த ஓரிரு மணி நேரத்தில் வழக்கமான வழித்தடங்களில் பள்ளி சார்பில் இயக்கப்பட்ட இலவச பேருந்துகளில் தங்களது கணவர்கள், மகன்கள், மகள்களோடு பெண்கள் குவிந்துவிட்டனர்.

பள்ளி நாள்களில் மாணவிகள் திரண்டிருப்பதைப் போன்று, முன்னாள் மாணவிகள் சந்திப்போ அசத்திவிட்டது. அதிலும், பெரும்பாலானோர் முஸ்லிம் பெண்கள். இவர்களும் வந்து சேர்ந்தது பலரையும் வியப்பில் ஆழ்த்திவிட்டது.

நிகழ்ச்சியை சாதித்தது எப்படி என்பது குறித்து ரஹமத் கல்வி அறக்கட்டளை நிறுவனர் எம்.ஏ. முஸ்தபாவிடம் பேசியபோது:

'சமுதாயம் உயர பெண் கல்வி அவசியம் என்பதை கருத்தில் கொண்டு இந்தப் பள்ளி தொடங்கப்பட்டது. முத்துப்பேட்டையில் பெருமளவில் வசித்து வரும் இஸ்லாமியர்களும், ஹிந்து மதத்தைச் சேர்ந்த பெரும்பான்மையான உள்ள சில பிரிவினரும் பெண்களின் பாதுகாப்பு கருதியே பள்ளிகளுக்கு பெண்களை அனுப்பவில்லை.

இதனால், பெண் கல்வியில் மிகவும் பின்தங்கிய நிலையில் இருந்த காலகட்டத்தில் 1996-இல் முற்றிலும் பெண்களுக்காகவே ரஹமத் பெண்கள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி துவக்கப்பட்டது. இந்தக் கல்வி நிறுவனம் துவங்கப்பட்டதிலிருந்து ஆயிரக்கணக்கான மாணவிகள் பல்வேறு ஆளுமைகளாக உருவெடுத்துள்ளனர்.

மருத்துவர்களாகவும் பல் மருத்துவர்களாகவும் கட்டடக்கலை வல்லுநர்களாகவும் பொறியாளர்களாகவும் தனித்து பள்ளியை நடத்தும் தாளாளர்களாகவும், பல்வேறு துறைகளிலும் சிறந்து விளங்கி வருவது பாராட்டுதலுக்கும் போற்றுதலுக்கும் உரியது. பள்ளி துவங்கப்பட்டதிலிருந்து எஸ்.எஸ்.எல்.சி., மேல்நிலைத் தேர்வுகளில் தொடர்ந்து 100 சதவீதம் தேர்ச்சி பெற்று வந்துள்ளதற்கு ஆசிரியர்களே காரணம்.

எந்த ஒரு மனிதரும் வாழ்வில் எவ்வளவு உயரத்துக்குச் சென்றாலும் தங்களுடைய பள்ளிப் பருவ நினைவுகளையும் பள்ளி பருவத்தில் பழகிய நண்பர்களையும் மறக்கவே முடியாது. மேலும் அந்த நாள்கள் திரும்ப கிடைக்குமா?' என்ற எதிர்பார்ப்பும் ஏக்கமும் வளர்ந்த பிறகும் மனதிலும் நீங்காமல் நிறைந்திருக்கும். அந்த வகையில் இந்தப் பள்ளியில் படித்த முன்னாள் மாணவிகள் அனைவரையும் ஒருங்கிணைத்து "முன்னாள் மாணவிகள் சங்கமம்' என்ற விழாவின் மூலம் மாணவர்களின் மலரும் நினைவுகளை மீட்டெடுத்தோம்.

இருபத்து எட்டு ஆண்டுகளில் பள்ளியில் படித்த முன்னாள் மாணவிகள் ஒன்று சேர்ந்து தங்களுடைய பழைய நினைவுகளை பகிர்ந்து மன மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அனைவரும் மகிழும் வகையில் கண்கவர் கலை நிகழ்ச்சிகளும் அரங்கேற்றம் செய்யப்பட்டது.

வருகை தந்த மாணவிகளின் வசதிக்காக பல்வேறு பகுதிகளுக்கு இலவசமாக பேருந்துகளும் இயக்கப்பட்டன. இதன் மூலம் ஆயிரக்கணக்கானோர் வந்திருந்தனர். அனைவருக்கும் பள்ளி நிர்வாகம் சார்பில் தடபுடலாக அசைவ விருந்தளித்து மகிழ்ச்சியாக வழி அனுப்பினோம்'' என்றார் முஸ்தபா.

'இப்படி பழைய மாணவிகள் சங்கமத்தை நடத்த வேண்டும் என்று முன்மொழிந்து, அதற்கான ஏற்பாடுகளைச் செய்து நடத்தியது இப்போது ரஹ்மத் பெண்கள் மெட்ரிக் பெண்கள் பள்ளியை நிர்வகித்துவரும் எனது மகன் யாசின்தான்'' என்றும் தெரிவித்தார் முஸ்தபா.

விழாவில் பங்கேற்ற முன்னாள் மாணவிகளும், இன்று சமுதாயத்தில் முக்கிய பதவிகளில் சாதிக்கும் பெண்கள் சிலர் பேசினர்.

வி.சாமுண்டீஸ்வரி (2009 மாணவி- சிட்டி யூனியன் வங்கி):

குழந்தைப் பருவத்திலேயே வளர்த்த இது எனது பள்ளி மட்டுமல்ல; எனது இரண்டாவது குடும்பமும்தான். திறமையான ஆசிரியர்கள், அருமையானநண்பர்கள் என்னை இன்னமும் உற்சாகப்படுத்துகின்றனர்.

எம். அர்ஃபின் இன்சாத் (2016 மாணவி- மருந்தாளுனர்:

இப்பள்ளி, கல்விச்சாலை என்பதற்கும் மேம்பட்டது. கல்விக் கலங்கரை விளக்கமாக நின்று பெண்கள் மேம்பாட்டுக்கு உறுதுணையாக நிற்கிறது. இளம் துளிர்களின் படைப்பாற்றலை மேம்படுத்தி உயர்நிலைக்குஎடுத்துச்செல்கிறது. இனிய சந்தர்ப்பத்துக்கு வாழ்த்துகள்.

எஸ். லோக ரஞ்சனி (2013 மாணவி- அமேசான்:

என் மூச்சுக் காற்றாகவே இந்தப் பள்ளியை உணர்கிறேன். நான் இன்று நல்லநிலையில் இருப்பதற்கு இந்தப் பள்ளியே முழு முதற்காரணம். இருபத்து ஏழு ஆண்டுகளுக்கும் மேலாக, எனக்குப் பின்னால் வருபவர்களுக்கும் ஒரு வாழ்க்கைத் திறவு கோலாக என்றும் நிலைக்கும். கனவில் கூட அடிக்கடி வரும் இடம், மீண்டும் பள்ளிப்பருவம் கிடைக்காத ஏக்கம், மீளமுடிய பாசம் கொடுத்த ஆசிரியர்கள், அன்று சிறைச்சாலையாகத் தெரிந்த இடங்கள், இன்று மலர்படுக்கையாய் தெரிகிறது.

டி. விஜி ராம்குமார் (2004 மாணவி- பள்ளித் தாளாளர்):

சிறப்பை நோக்கி எனும் என் பள்ளியின் மந்திரச் சொல்லே என்றும் என்னை மேலோங்கி நிற்கச் செய்கிறது. எதைச் செய்தாலும் சிறப்பாக செய்ய வேண்டும் என்ற நிலை எனக்கு இங்கே வித்திடப்பட்டது.

முன்னாள் மாணவிகள்:

இயற்கைச் சூழலுக்கு பள்ளியின் கட்டமைப்போடு பள்ளி வளாகத்தைச் சுற்றி மரங்கள் செடிகள் பூக்கள் என ஒரு பூஞ்சோலைக்கு நடுவில் பள்ளி இன்றும் இயங்கிவருகிறது. பள்ளி வளாகத்தில் நுழைந்தவுடனே மலரும் நினைவுகளை அசைப்போட்டோம்.

பின்தங்கிய நிலையில் இருந்த முத்துப்பேட்டை பகுதியில் அனைத்து சமுதாய பெண்களும் கல்வியில் தொடர்ந்து சிறப்பான சாதனையாளர்களாக உருவாக்க காரணமாக இருந்த ரஹமத் பெண்கள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியானது மகளிர் கல்லூரி, பல்கலைக்கழகங்களை எதிர்காலத்தில் தொடங்கி கல்விச்சேவையாற்றவேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com