சவாலே சமாளி..!
இளம்வயதில் போலியோ பாதிக்க, சென்னையில் மூன்று சக்கர டாக்ஸியை ஓட்டிக் கொண்டு சொந்தக் காலில் நின்று தம்பி, தங்கையைப் படிக்க வைத்து வாழ்க்கையும் அமைத்துக் கொடுத்துள்ளார் பிரகாஷ். அவரது வெற்றிக்கதை உடல் பாதிப்பு இல்லாதவர்களுக்கும் ஊக்கமும், உற்சாகமும் தருவதுடன் வாழ்க்கையில் ஏற்படும் சவால்களை எதிர்கொள்வதற்கும் பாடமாகவும் அமைந்துள்ளது.
அவரிடம் பேசியபோது:
'எனது சொந்த ஊர் செஞ்சி அருகேயுள்ள கிராமம். எனக்கு நான்கு வயதாகும்போது, கிராமத்தில் என்னோடு சேர்ந்து பல குழந்தைகளுக்கு போலியோ பாதிப்பு ஏற்பட்டது.
எங்களது பகுதியில் தொண்டு நிறுவனம் தொடங்கப்பட்டு, போலியோ குழந்தைகளுக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டது. எனது பெற்றோர் அந்த அமைப்பில் என்னை சேர்த்துவிட்டனர். அங்கே எனக்கு அறுவைச் சிகிச்சை செய்து "காலிப்பர்' எனப்படும் தாங்கிகளைப் பொருத்தினர். தளர்ந்த கால்களுக்கும் பிஸியோதெரபி பயிற்சியைக் கொடுத்து நடக்க வைத்தனர். பள்ளியில் படிக்கவும் வைத்தனர். எல்லாம் இலவசம்.
பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற நிலையில், தாய் இறந்தார். சில மாதங்களில் அப்பா இரண்டாம் திருமணம் செய்து கொண்டார். எனது தம்பி, தங்கையை தாய்வழி தாத்தா, பாட்டி ஏற்றுக் கொண்டு பள்ளியில் படிக்கவைத்தனர்.
நான் காஞ்சிபுரம் மாவட்டத்துக்கு உள்பட்ட கீழ்கொட்டியவாக்கத்தில் உள்ள விடுதியில் சேர்ந்து வாலாஜாபாத் பள்ளியொன்றில் பிளஸ் ஒன் சேர்ந்தேன். விடுதியிலிருந்து பள்ளிக்குச் சென்றுவர வேன் வசதி விடுதியில் இருந்தது. பிளஸ் டூ
முடிந்ததும் சென்னையில் அரசு கல்லூரிகளில் சேர முயற்சித்தேன். சீட் கிடைக்கவில்லை.
வெளிநாட்டவர் ஒருவர் உதவியால், எழும்பூர் அருங்காட்சியகம் அருகில் செயல்பட்டு வந்த "ஜீவன ஜோதி' பயிற்சி நிலையத்தில் ஓராண்டு கணினிப் பயிற்சியை முடித்தேன். பின்னர், எஸ்.டி.டி. பூத் ஒன்றில் மாதம் ஐநூறு ரூபாய் சம்பளத்தில் வேலைக்குச் சேர்ந்தேன். சில மாதங்களில் பங்கு வர்த்தக நிறுவனம்
ஒன்றில் மாதம் ஈராயிரத்து ஐநூறு ரூபாய் சம்பளத்தில் வேலை. மதியம் 12 முதல் இரவு 11 மணிவரை வேலை.
எனது மாமா சாஸ்திரி பவன் பாஸ்போர்ட் வளாகத்தில் பொதுமக்களுக்குப் படிவம் பூர்த்தி செய்து கொடுப்பார். அவருக்கு உதவியாக காலை நேரங்களில் வேலை செய்துவிட்டு, பின்னர் தனியாகப் படிவங்களைப் பூர்த்தி செய்து ஒரு நாளைக்கு ஐநூறு ரூபாய் வரை சம்பாதித்தேன். அப்போது கிரீம்ஸ் ரோட்டில் இருந்து விலகி குடிசைமாற்று வாரிய அடுக்குமாடி கட்டடத்தில் ஒரு வீடு ஒதுக்கீடு பெற்றேன். ஒன்றரை லட்சம் ரூபாய் கட்ட வேண்டும். ஒரு லட்சம் ரூபாயை எனது முதலாளிகள் பிரகாஷ் -சங்கர் கடனாகத் தந்தனர். அப்பாவிடம் முப்பதாயிரம் பெற்றேன். எனது சேமிப்பையும் போட்டு ஃபிளாட்டை வாங்கினேன்.
தம்பியை சென்னை நந்தனம் கல்லூரியில் இளங்கலைப் படிப்பும், பின்னர் அப்பல்லோ மருத்துவமனையில் எக்ஸ்ரே பயிற்சியையும் பெற உதவினேன். அங்கேயே வேலையில் சேர்ந்தார். தங்கையை கடலூர் அரசு கல்லூரியில் படிக்க வைத்து, பி.எட். படிப்பையும் படிக்க வைத்தேன். பின்னர், சென்னை எத்திராஜ் கல்லூரியில் முதுகலையில் சேர்த்துவிட்டேன். தங்கைக்குத் திருமணமும் 2011-இல் செய்து வைத்தேன்.
வீட்டுக் கடனை அடைத்தேன். பங்குச் சந்தை அலுவலகம் மூடப்பட்டதால் பாஸ்போர்ட், இதர ஆவண ஆன்லைன் வேலைகளை முழுநேர வேலையாக்கினேன். எனது மூன்று சக்கர வண்டி தான் தொடக்கத்தில் மேசை நாற்காலியாகப் பயன்பட்டது. தம்பிக்கும் சொந்தத்தில் பெண் பார்த்து திருமணம் செய்து வைத்தேன்.
எனது வீட்டை அலுவலகமாக மாற்றினேன். 2017-இல் தமிழ்நாடு அரசு வழங்கிய மூன்று சக்கர ஊர்தி இலவசமாகக் கிடைத்தது. இப்போது அதைத்தான் ஓட்டி வருகிறேன். தற்போது எனக்கு நாற்பத்து ஆறு வயதாகிறது.
திருமண உதவி மையம் ஒன்றின் வாயிலாக, போலியோவால் ஒரு கால் பாதிக்கப்பட்டிருக்கும் ரேவதியை எனது தங்கையும், தம்பியும் சேர்ந்து எனக்குத் திருமணம் செய்து வைத்தனர். இப்போது ஆதம்பாக்கத்தில் வாடகை வீட்டில் குடியிருக்கிறேன். எனது மகன், மழலையர் பள்ளி செல்கிறான். மகளுக்கு ஒரு வயதாகிறது. அவர்களுக்கு எந்த குறைபாடும் இல்லை.
மனைவிக்கு வீட்டின் முன்பாக சிறு மளிகைக் கடை வைத்துக் கொடுத்துள்ளேன்.
எனக்கும், எனது தம்பிக்கும் போரூர் அருகே தங்கை வாங்கிக் கொடுத்த மனையில் வீடு உள்ளது. ஆதம்பாக்கத்திலிருந்து எனது அலுவலகத்துக்கு வந்து போக பெட்ரோல் செலவு அதிகமாகிறது. அதனால் அலுவலகம் வரும் முன்பும் மாலை முதல் வீடு வரும் வரையிலும் மூன்று சக்கர டாக்ஸியை பகுதி நேர வேலையாக ஒரு மாதமாகச் செய்து வருகிறேன். பெட்ரோல் செலவு போக கொஞ்சம் வருமானமும் கிடைக்கிறது.
சிறு வயது முதல் எனக்குப் பலர் பல வகையில் உதவியுள்ளார்கள். அந்த உதவியால்தான் நான் சொந்தக்காலில் நிற்கும் அளவுக்கு உயரமுடிந்தது. அவர்களை நான் மறக்க மாட்டேன். உடன்பிறந்தோரை சொந்தக்காலில் நிற்க வைத்தேன். இப்போது எனது வாரிசுகளுக்காக உழைக்கிறேன்'' என்கிறார் பிரகாஷ்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.