கும்பகோணம் கொழுந்து வெற்றிலை

'கங்கை நதி புறத்து கோதுமை பண்டம் காவிரி வெற்றிலைக்கு மாறு கொள்வோம்' என 1900 ஆம் ஆண்டுகளில் பாடினார் மகாகவி பாரதி.
கும்பகோணம் கொழுந்து வெற்றிலை
Published on
Updated on
2 min read

வி.என்.ராகவன்

'கங்கை நதி புறத்து கோதுமை பண்டம் காவிரி வெற்றிலைக்கு மாறு கொள்வோம்' என 1900 ஆம் ஆண்டுகளில் பாடினார் மகாகவி பாரதி. இப்பாடல் வரி மூலம் காவிரி ஆற்றுப் படுகையில் விளைந்த வெற்றிலை வட மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது என்பது தெரிய வருகிறது.

பூம்புகாருக்கு அருகிலுள்ள ராதாநல்லூர் சிவன் கோயில் கல்வெட்டுகள், உறையூர், திருக்காம்புலியூரில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வில் கிடைத்த கி.பி. 10 முதல் 14 ஆம் நூற்றாண்டைச் சார்ந்த பாக்கு வெட்டிகள் ஆகியவை காவிரிப் படுகையில் பல நூறு ஆண்டுகளாக கும்பகோணம் வெற்றிலை சாகுபடி செய்யப்படுவதும், சுப நிகழ்ச்சிகளில் கும்பகோணம் வெற்றிலை முக்கிய அங்கம் வகிப்பதையும் அறிய முடிகிறது.

இந்த வெற்றிலையின் பெருமைகள் குறித்து 1883-ஆம் ஆண்டு தஞ்சாவூர் மாவட்ட கையேட்டில் திவான்பகதூர் வேங்கடசாமி ராவும், தஞ்சாவூர் அரசிதழில் ஆங்கிலேய அதிகாரியான எப்.ஆர். ஹெமிங்வேயும் குறிப்பிட்டுள்ளனர் என்கிறார் அறிவுசார் சொத்துரிமை வழக்குரைஞர் சங்கத் தலைவர் ப. சஞ்சய் காந்தி. இது குறித்து அவர் மேலும் நம்மிடம் பகிர்ந்தது...:

கும்பகோணம் வெற்றிலையில் கொழுந்து வெற்றிலை புகழ்பெற்றது மட்டுமல்ல; தனிச் சிறப்புடையது. டெல்டா மாவட்டங்களான திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் வெற்றிலை சாகுபடி பரவலாக மேற்கொள்ளப்படுகிறது. குறிப்பாக, திருவையாறு, பாபநாசம், கும்பகோணம், திருவிடைமருதூர், வலங்கைமான் ஆகிய வட்டாரங்களிலும், ராஜகிரி, ஆவூர், கோவிந்தகுடி மற்றும் சுற்றுப்புற கிராமங்களிலும் வெற்றிலை சாகுபடி அதிகம்.

காவிரி ஆற்றுப் படுகையில் கிடைக்கும் நீர், வண்டல் மண், ஈரப்பதம் ஆகியவற்றால் கும்பகோணம் வெற்றிலை தனிச்சிறப்பு பெறுகிறது. வேறு எங்கும் இல்லாத சிறப்புடைய இந்தக் கொழுந்து வெற்றிலை இதமான காரமும், தனிச்சுவையும் உடையது.

தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் வெற்றிலை சாகுபடி செய்யப்பட்டாலும், காவிரிப் படுகையில் விளையக்கூடிய கொழுந்து வெற்றிலைக்கு தனிச்சிறப்பு இருக்கிறது. காவிரிப் படுகையில் அந்தந்த பகுதி மண் வளத்துக்கு ஏற்ப இளம்பச்சை, மஞ்சள் கலந்த பச்சை, நடுத்தர பச்சை, கரும்பச்சை ஆகிய நிறங்களில் இருக்கும்.

இது மட்டுமல்லாமல், கும்பகோணத்தில் பாக்கு விற்பனை, சீவல் உற்பத்தியும் பாரம்பரியமாக உள்ளது. எனவே, அக்காலத்திலேயே ஒரே இடத்தில் வெற்றிலை, பாக்கு, சீவல் ஆகிய மூன்றும் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வெற்றிலையைச் சுப நிகழ்ச்சிகளில் மட்டுமல்லாமல், குழந்தைகளுக்கு மருந்தாகக் கொடுக்கும் அளவுக்கு மருத்துவக் குணமும் உடையது என்பது தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் ஆய்வுக் கட்டுரைகள் தெரிவிக்கின்றன.

இந்தப் பாரம்பரிய சிறப்புமிக்க கும்பகோணம் வெற்றிலை உற்பத்தியாளர் நலச்சங்கம் மூலம் புவிசார் குறியீடு பெற 2022, ஜனவரி 13 ஆம் தேதி விண்ணப்பிக்கப்பட்டது. பல்வேறு கட்ட விசாராணைகளுக்கு பிறகு விண்ணப்பம் ஏற்கப்பட்டு, மத்திய அரசிதழில் 2024, நவம்பர் 30 ஆம் தேதி வெளியிடப்பட்டது.

அரசிதழில் வெளியிடப்பட்டு 4 மாதங்களுக்கு பிறகு, அப்பொருளுக்கு புவிசார் குறியீடு வழங்கப்படுவது சட்ட விதி. இதன்படி, கும்பகோணம் வெற்றிலைக்கு அரசிதழில் வெளியிடப்பட்டு 4 மாதங்கள் நிறைவடைந்துள்ளதால், இப்பொருளுக்கு புவிசார் குறியீடு கிடைப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம், கும்பகோணம் வெற்றிலைக்கு தஞ்சாவூர் மாவட்டத்தில் மிகப் பெரிய ஏற்றுமதி மையம் அமைவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. விவசாயிகளுக்கும் வருவாய் அதிகரிக்கும். வெற்றிலை பயிரிடும் ஒவ்வொரு விவசாயிக்கும் அங்கீகரிக்கப்பட்ட பயனாளி சான்றிதழ்கள் பெற்றுத் தரப்படும். இதன் மூலம், விவசாயிகள் நேரடியாக ஏற்றுமதியும், விற்பனையும் செய்ய முடியும்'' என்கிறார்.

'என்றாலும் இந்த வெற்றிலை சாகுபடியில் மிகுந்த சவால்களும் நிறைந்துள்ளதால், அரசு உதவி செய்ய வேண்டும்'' என்கிறார் தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகேயுள்ள பண்டாரவாடையைச் சேர்ந்த சுமார் 30 ஆண்டுகளாக வெற்றிலை விவசாயம் செய்து வரும் எல். சுரேஷ். இது குறித்து அவர் மேலும் தெரிவித்தது:

'கொடி நட்டு பயிரிடப்படும் வெற்றிலை 6 மாதங்களுக்கு பிறகுதான் விளைச்சல் தரும். தொடக்கத்தில் குறைவாக தரும் விளைச்சல் படிப்படியாக அதிகரிக்கும். ஒரு முறை செய்யப்படும் சாகுபடி 3 ஆண்டுகளுக்கு வருவாய் தரும். ஏக்கருக்கு ரூ. 2.50 லட்சம் செலவாகும். இதன் மூலம் ரூ. 5 லட்சம் முதல் 6 லட்சம் வருவாய் கிடைக்கும். மொத்தம் 110 வெற்றிலைகள் கொண்ட ஒரு கவுளி தரத்துக்கு ஏற்ப ரூ. 20 முதல் ரூ. 100 வரை விலை போகும்.

மற்ற பயிர்கள் போன்று வெற்றிலைக்கு மானியமோ, இயற்கை பேரிடரால் பாதிக்கப்படும்போது நிவாரணமோ வழங்கப்படுவதில்லை. போதுமான மானியம் வழங்கவும் வெற்றிலைக்கு என தனிச் சந்தையை உருவாக்கவும். அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்''

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை Dinamani APP பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com