'ஆந்த்ரே மால்ரா' என்பவர் பிரெஞ்சு குடியரசில் கலாசாரத் துறை அமைச்சராகப் பணியாற்றியவர். தொல்பொருள் ஆராய்ச்சி வல்லுநரான அவர், கலை பற்றிய நூல்கள் பலவற்றை எழுதியுள்ளார். அந்த நூல்களில் ஒன்று 18 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
இவரது படைப்புகளில் ஒன்றான 'தி வாய்ஸ் ஆஃப் சைலன்ஸ்' என்ற கலை ஆராய்ச்சி நூல் மதிப்புமிக்கதாகும். பிரெஞ்சு இலக்கிய மேதையான இவர், தனது 4 நாவல்களால் உலகப் புகழ் பெற்றார். இந்த நாவல்கள் அவருடைய 27-ஆம் வயதிலிருந்து 36-ஆவது வயதுக்குள் இயற்றப்பட்டவை.
இவருடைய 'மனிதனின் விதி' (1933), 'மனிதனின் நம்பிக்கை' (1937) என்ற இரு நூல்கள் அவருக்கு உலகப் புகழைத் தேடி தந்ததோடு, அவைகளும் தற்காலத்து உலக இலக்கிய வரிசையில் இடம்பெற்றுள்ளன. இந்த நூலில் உள்ள கதாபாத்திரங்களும், அவர்களின் வரலாறுகளும் கற்பனை அல்ல என்றும் நூலாசிரியரின் சொந்த அனுபவங்கள் என்றும் கூறுகின்றனர்.
பாரிஸ் நகரில் பிறந்த இவர் முகத்தோற்றத்தில் தன் நிரம்பிய வயதின் சின்னங்களை வெளிப்படுத்தவில்லை. இவரது பரந்த வெற்றி இவருக்கு ஒரு கவிஞனின் பொலிவைத் தந்தது. இவருடைய இரு நீலக் கண்களும் நல்ல ஒளியுடன் காட்சியளித்தபோதிலும், பல ஆண்டுகளாக ஓய்வு என்னும் சொல்லுக்குப் பொருள் காணாதவைகளாகத் தான் தோன்றுமாம்.
எவ்வாறு உருவெடுக்க வேண்டும் என்பதை இளமையிலேயே இவர் வகுத்துகொண்டு அவ்வாறே தன் பிற்காலத்தை அமைத்துகொண்டார்.
இவர் வனப்பகுதியிலும், பாலைவனத்திலும் தங்கியிருக்கிறார். பல புரட்சிகளிலும், போர்களிலும் பங்கெடுத்துள்ளார். இவ்விதமான அனுபவங்கள் இவருக்கு நல்ல நெஞ்சுறுதியையும் தன்னம்பிக்கையையும் அளித்திருக்கின்றன.
மால்ரா தனது 22-ஆவது வயதில் ஐரோப்பாவை விட்டுச் சென்று இந்தோ- சீனாவுக்கு வந்திறங்கி, அங்கு அரசியலிலும், தொல்பொருள் ஆராய்ச்சியிலும் ஈடுபட்டார். அந்த நாட்டில் என்றென்றும் போர் நிலவுவதைக் கண்டு, இந்தப் போரில் பங்கு கொள்பவர்கள் பிற்காலத்து மக்களின் நலனுக்காகத் தங்கள் உயிர்களைத் தியாகம் செய்ய முன்வந்திருக்கின்றனர் என்று உணர்ந்து, உடனே கலைத் தொண்டைப் புறக்கணித்துவிட்டு போரில் குதித்தார்.
ஆக்கல், செய்கை ஆகிய இரு துறைகளிலும் செயலாற்ற எங்கெங்கு வாய்ப்பு இருந்ததோ, அங்கெல்லாம் ஆந்த்ரே மால்ராவைக் காணலாம். ஐரோப்பாவில் பாசிஸத்தை எதிர்த்துப் போராடி மக்களுக்கு இந்தக் கொள்கையின் மீது வெறுப்பு ஊட்டச் சமுதாயச் சேவை செய்தோர்களின் முன்னணியில் இடம்பெற்றவர் இவர்.
ஸ்பெயின் நாட்டில் உள்நாட்டுப் போர் மூண்டபோது, இவர் சர்வதேச விமானப்படையை உருவாக்கி அதில் தீவிரமாகப் பங்கேற்றவர். பின்னர், இந்தப் படையில் 'கர்னல்' என்ற பதவி அளிக்கப்பட்டது.
இரண்டாவது உலகப் போர் தொடங்கியதும் இவர் பிரெஞ்சு 'மங்கி'ப்படையில் சேர்ந்து போர் புரியும்போது, ஒருநாள் எதிரியின் கையில் சிக்கினார். ஆயினும் தகுந்த நேரம் கிடைத்தபோது, சிறையிலிருந்து தப்பினார். 1945-இல் இவர் அமைச்சராகி, செய்தித் துறை, கலாசாரத் துறைகளில் பணியாற்றினார். ஆனால், 1946 ஜனவரியில் 'ஜெனரல் டீகால்' ஓய்வு எடுத்துகொள்ள முடிவு செய்து, பதவி விலகியதும் இவரும் விலகினார்.
பின்னர், 12 ஆண்டுகள் எழுத்துப் பணியில் தீவிரமாக ஈடுபட்டார். ஓய்வின்றி சலிக்காமல் எழுதுகோலை ஊக்கத்துடனும், உற்சாகத்துடனும் ஏந்தி பல அற்புதமான நூல்களை வெளியிட்டார். அவை வாசகர்கள் மத்தியில் பெரிதும் வரவேற்பைப் பெற்றன.
1959 ஜூன் மாதத்தில் மீண்டும் அமைச்சராகப் பணியாற்ற அழைப்பு வந்ததும் எழுதுகோலுக்கு ஓய்வு அளித்துவிட்டு, பதவியை ஏற்றார். அரசியல் நிர்வாகத்தில் கண்ணியமாக இடம்பெற்றபோதிலும், இவர் இலக்கியத் துறையில் பெற்ற இடம் அழியாப் புகழைத் தேடி கொடுத்துள்ளது.
மால்ராவின் இலக்கிய நடை தற்காலத்து பிரெஞ்சு இலக்கியத்தில் ஓர் உன்னத இடம் பெற்றுவிட்டபடியால், அந்த நாட்டின் இளம் எழுத்தாளர்கள் இப்போதும் நடையைப் பின்பற்றுவது மிகவும் சாதாரணமாகிவிட்டது.
இவருடைய நூல்களில் மனோதத்துவம், மரணத்தையொட்டிய தத்துவம், இறுதியில் எல்லாமே தீமையிலேயே முடியும் என்ற கொள்கை முதலிய கருத்துகளைக் காணலாம். தத்துவக் கருத்துகள் நிரம்பிய நாவல்களைத் தவிர, இவர் கலை, ஆராய்ச்சி நூல்கள் பலவற்றை இயற்றியுள்ளார். இவற்றிலும் மனிதப் பண்பின் சோக நிலையை அடிப்படையாகக் கொண்ட கருத்துகள் கொந்தளிக்கின்றன.
ஆந்த்ரே மால்ராவோ மற்ற பேனா வீரர்களைப் போல் அல்லாமல், ஒரு போர் வீரரும்கூட! மனிதனின் உயர்ந்த பண்பாட்டுக்காக இரு முனையிலும் ஈடுபட்ட பெருமை இவரையே சாரும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.