'ஏழை, எளிய மாணவர்களின் கல்வி முன்னேற்றத்துக்கு எந்த வகையில் உதவி செய்யலாம்' என்று எந்த நேரமும் சிந்தித்து, சென்னையில் பல்வேறு பள்ளிகளைத் தேடிச் சென்று தானாக முன்வந்து கல்வி உதவிகளை அளித்து வருகிறார் ஜமீன் பல்லாவரம் அரிமா சங்கப் பிரமுகர் கே. ராதாகிருஷ்ணன்.
சென்னை குரோம்பேட்டை நியூ காலனியில் உள்ள சர்வோதயம் பள்ளிக்கு கட்டடம் கட்டிக் கொடுத்து இருக்கும் இவர், மாணவர்கள் தரையில் அமர்ந்து பாடம் பயில வேண்டிய நிலையில் உள்ள பள்ளிகளுக்குத் தேவையான மேஜைகள், இருக்கைகளை வழங்கி வருகிறார்.
அவரிடம் பேசியபோது:
'சிறுவயதில் எனது பெற்றோர் ராஜம்மா-கல்லாடி கிருஷ்ணன் அறிவுறுத்தியபடி, கல்விக்கு உதவிகளைச் செய்துவருகிறேன். வீடுகள் கட்டித் தரும் கட்டுமான நிறுவனத்தை நான் நடத்திவருவதால், எனது வருவாயில் கல்விப் பணிக்காக ஒரு குறிப்பிட்ட அளவு நிதியை ஒதுக்கிவிடுகிறேன். இதற்கு மேலும்கூட நிதியுதவியை கூடுதலாக்கி உதவிகளைச் செய்துவிடுவேன்.
பள்ளிகள், கல்லூரிகளில் பயிலும் ஏழை- எளிய மாணவர்களின் கல்விக்கட்டணம், பள்ளிகளுக்கு பெஞ்சு, இருக்கைகள், உதவி கேட்டு வரும் நோயாளிகளுக்கு மருத்துவச் செலவு உதவிகள் என கடந்த பல ஆண்டுகளாகத் தொடர்ந்து வழங்கி வருகிறேன்.
குரோம்பேட்டை ராதா நகர் வெங்கடேஸ்வரா பள்ளியில் மாணவர்கள் அமர, இருக்கைகளை வழங்கினேன். அங்கு புதியதாக கூடுதல் வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில், வகுப்பறைகள் கட்டித் தருமாறு பள்ளிச் செயலர் ஆர்.மனோகரன், பள்ளி நலக் குழு உறுப்பினர் சி.ஆர். நரசிம்மன் ஆகியோர் கேட்டுக் கொண்டதன்பேரில் ரூ38 லட்சம் செலவில் எனது பெற்றோர் ராஜம்மா-கல்லாடி கிருஷ்ணன் பெயரில் மூன்று வகுப்பறைகள் அண்மையில் கட்டினேன்.
'குரோம்பேட்டை நேரு நகரில் 67 ஆண்டுகளாகச் செயல்பட்டு வரும் ஸ்ரீ அய்யாசாமி அய்யர் பள்ளியின் ஆய்வகங்களில் இல்லாத காரணத்தினால், பள்ளியின் தரத்தை உயர்த்தி பிளஸ் 2 வகுப்புகள் தொடக்க முடியாத நிலை உள்ளது' என்று குரோம்பேட்டை மக்கள் விழிப்புணர்வு நலச் சங்கத் தலைவரும், மூத்த சமூக ஆர்வலருமான வி. சந்தானம் என்னிடம் கோரிக்கை விடுத்தார். அவரது வேண்டுகோளை மறுக்காமல் ஏற்று, பள்ளியில் ரூ 12 லட்சம் மதிப்பில் மூன்று ஆய்வகங்களைக் கட்டினேன்.
இதனால், பள்ளியில் பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகள் தொடங்கப்பட்டு, தற்போது எண்பதுக்கும் மேற்பட்ட மாணவர்கள் இரு வகுப்புகளிலும் பயின்று வருகின்றனர்.
நான் படித்த புருஷோத்தமன் நகர் பள்ளி வளாகத்தில் மழைக்காலத்தில் முழங்கால் அளவுக்கு தண்ணீர் தேங்குவது வழக்கம். இதனால் தேங்கிய மழைநீர் வற்றும் வரை பள்ளிக்கு விடுமுறை விடும் நிலை இருந்தது. இதையடுத்து, அந்தப் பள்ளிக்கு ரூ.3.5 லட்சம் மதிப்பில் மணல் கொட்டி உயர்த்தினேன். இதனால் பள்ளி வளாகத்தில் பல வருடங்களாக இருந்து வந்த மழைநீர் தேங்கும் பிரச்னைக்கு நிரந்தரமாகத் தீர்வு ஏற்பட்டுள்ளது. மேலும் அந்தப் பள்ளிக்கு மாணவர்கள் அமர பெஞ்சுகள், இருக்கைகளை வழங்கினார்.
தாம்பரம் சானடோரியம் காது கேளாதோர் பள்ளிக்கு, கணினிகளுக்குத் தேவையான இன்வெர்ட்டர், விளையாட்டு உபகரணங்கள் வழங்கியுள்ளேன்' என்கிறார் கே.ராதாகிருஷ்ணன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.