நெஞ்சில் சுமந்த நினைவுகள் எல்லாம்...

'கடந்துப் போன எனது குழந்தைப்பருவத்துக்கு நினைவுகளுக்கு உயிர்கொடுப்பதே என் ஓவியத்தின் தலையாயப் பணி.
நெஞ்சில் சுமந்த நினைவுகள் எல்லாம்...
Published on
Updated on
3 min read

'கடந்துப் போன எனது குழந்தைப்பருவத்துக்கு நினைவுகளுக்கு உயிர்கொடுப்பதே என் ஓவியத்தின் தலையாயப் பணி. அதற்காகவே ஓவியங்களை முழு நேரமாக வரைந்துகொண்டிருக்கிறேன். எனக்குள் ஒளிந்திருந்த ஓவியக் கலையை வெளியே கொண்டு வந்ததே என் குழந்தைகள்தான். குழந்தைப் பருவத்து குறும்புகள் மீண்டும் கிடைக்காதவை. அவற்றை ஓவியங்களாக வரைந்து, காலப்பெட்டகத்தில் பாதுகாக்க வேண்டும் என்பதே என் ஓவியக்கலையின் நோக்கம்' என்கிறார் பாரதி செந்தில்வேலன்.

ஓவியத்தின் மீது ஏற்பட்ட தற்செயல் காதலால், தனக்கென ஒரு ஓவிய உலகத்தைக் கட்டமைத்துகொண்டு, எட்டு ஆண்டுகளாகச் சாதனைகளைப் புரிந்து வரும் அவர், உலகின் பல்வேறு இடங்களில் நடைபெற்ற ஓவியக் கண்காட்சிகளில் பங்கேற்று, பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்துவருகிறார்.

கும்பகோணத்தில் பிறந்து, பெங்களூரில் முழுமையான ஓவியராக உருவாக்கிக் கொண்ட அவரிடம் பேசியபோது:

'எனது சிறுவயதில் இருந்தே கோடுகள், வண்ணக்கலவைகள், காட்சிகள், இயற்கையின் குறும்புகள் மீது மனம் புரியாத ஆர்வம் ஏற்பட்டது. வீடுகளின் முன்பு தென்படும் கோலங்கள்தான் நான் பார்த்த முதல் ஓவியங்கள். அவை சொல்லும் செய்திகள் என் கவனத்தை ஈர்த்தன. கோலங்கள் தந்த அழகியல் உணர்ச்சியின் வழியாக ஓவியங்கள், சிற்பங்கள், கலைப்பொருள்கள் மீது கண்கள் படர்ந்தன. அப்போது அதன் ஆழமான அர்த்தங்கள் புலப்படாத வயது. பொழுதுபோக்காக அதை கடந்துவந்துவிட்டேன்.

நான் ரசித்த முதல் ஓவியம் அம்மா. அவர் வரையும் ஓவியங்கள் என்னை ஊக்கப்படுத்தின. அவை என் பள்ளிச்சுவர்களை அலங்கரித்திருந்தன. நான் நன்றாக வரைவதாக ஆசிரியர்கள் ஊக்கப்படுத்தினர்.

பிளஸ் 2 முடித்தவுடன் 1997இல் கும்பகோணம் அரசு நுண்கலைக் கல்லூரியில் ஓவியக்கலை பட்டப் படிப்பை படிக்க எண்ணினேன். வீட்டில் அனுமதிக்கவில்லை. இதனால் பி.எஸ்சி, கணிதம் படித்து, எம்.சி.ஏ. பட்டம் பெற்றேன். துபையில் வடிவமைப்புப் பணியில் சேர்ந்தேன். வரைகலையையும் கற்று, ஆர்வத்துடன் செய்து வந்தேன்.

2007இல் திருமணமானது. எனது ஓவிய ஆர்வத்தை பார்த்து வியந்த என் கணவர் செந்தில்வேலன் என்னைத் தொடர்ந்து ஊக்கப்படுத்தி வந்தார். வேலைநிமித்தமாக கணவருடன் தில்லி வந்துசேர்ந்தேன். அங்கும் கணினி வரைகலை சார்ந்த பணிகளில் ஈடுபட்டு வந்தேன். 2010இல் குழந்தை பிறந்தது. குழந்தை வளர்ந்ததால், பள்ளிப் பாடங்களுக்காக சில ஓவியங்களை வரைந்தேன். இரு குழந்தைகள் இருந்ததால், முழு நேரமாக ஓவியம் வரைவதில் ஈடுபட முடியவில்லை.

2017இல் வேலைநிமித்தமாக பெங்களூருக்கு வந்தோம். என் அண்ணனும், புகழ்பெற்ற ஓவியருமான சிவபாலன், பெங்களூரு சித்ரகலா பரிஷத்தில் ஓவியக்கலையை கற்க ஊக்கப்படுத்தவே, நுட்பமாகக் கற்றேன். அந்த நேரத்தில் எனது குழந்தைகளின் மழலை குறும்புகள், விளையாட்டுகள், வியப்பான உடலசைவுகள் என் ஓவியங்களுக்குக் கருப்பொருளாக மாறின.

எனது குழந்தைப்பருவத்தில் அனுபவித்த அழகான உலகத்தை ஓவியமாக வரைந்தேன். அவை பலரையும் கவர்ந்தன. நினைவலைகளில் உறைந்து கிடக்கும் குழந்தைப்பருவத்தின் அழகான வண்ணக்கோடுகளில் ஓவியமாக தீட்டியதை என் குழந்தைகள் மிகவும் ரசித்து மகிழ்ந்தனர். அந்த மகிழ்ச்சியை என்னையொத்த வயதினரும் அனுபவித்தனர்.

கிராமங்களில் வளர்ந்த குழந்தைகளுக்கு மறக்க முடியாத வாழ்க்கை அமைந்திருக்கும். கிராமங்களில் கிடைத்த பல அனுபவங்கள், நகரங்களில் வாழும் குழந்தைகளுக்கு கிடைப்பதில்லை. கிடைக்கப் போவதும் இல்லை.

நாம் அனுபவித்தச் சூழல்கள், விளையாட்டுகள், குதூகலமான தருணங்கள் நமது குழந்தைகளுக்கு கிடைக்கவில்லையே என வருத்தப்பட்டது உண்டு. அந்த வாழ்க்கையை ஓவியங்களாக மீட்டுருவாக்கம் செய்து வருகிறேன்.

விழாக்காலங்களில் அம்மாவுடன் விளையாட்டாக வரைந்த கோலங்கள், ஒருவர்பின் ஒருவராக ரயில் ஓட்டி சென்றது, மழைநீரில் விட்ட காகிதக் கப்பல்கள், ஓடி விளையாடிய தருணங்கள், ஒளிந்துவிளையாடுதல், நண்பர்களின் முதுகில் அமர்ந்து யானை ஊர்வலம் செல்வது, பம்பரம் சுழற்றுவது, எதையோ யோசித்துகொண்டு அமர்ந்திருப்பது, அம்மாவுடன் கடைகளுக்குச் செல்வது, வியந்து பார்க்கும் மனிதர்கள் பற்றி அம்மாவின் காதுகளில் கூறுவது, அம்மியில் மிளகாயுடன் மாங்காய் நசுக்குவது, ஆடையெல்லாம் நனையும்படி தண்ணீர் குடிப்பது, மழைநீரில் விளையாடி செல்வது, மழைநீரை பாத்திரத்தில் சேகரிப்பது, கோயிலுக்குச் சென்றால் நந்தியின் காதுகளில் ஆசைகளைச் சொல்வது, கூச்சமில்லாமல் தெருக்களில் விளையாடுவது, நண்பர்களுடனா கயிறு தாண்டுதல், அப்பா கொண்டுவரும் தின்பண்டங்களுக்காக காத்திருப்பது, உடன்பிறப்புகளோடு அடிக்கடி சண்டைப்போடுவது, மரங்கள் ஏறுவது, சாய்ந்தாடி மரத்தில் ஆடுவது, குட்டைப்பாவாடையில் ஊர்சுற்றுவது, பக்கத்து வீட்டு நாய்களைக் கொஞ்சுவது, வானத்து நட்சத்திரங்களை எண்ணுவது, கிணறுகளில் அம்மா தண்ணீர் சேந்துவது, பழைய சக்கரங்களை உருட்டிக் கொண்டு ஓடுவது, மரங்களில் ஏறிபுளியம்பழம் தின்பது, மழைநீரில் குதித்து விளையாடுவது, கிணறுகளில் நீந்துவது, குடைபிடித்துகொண்டே மழைநீரில் நனைவது, நண்பர்களின் தோள் மீது கைகளை போட்டு கொண்டு நடப்பது, கடல் அலைகளை அதன் நுரைகளை ரசிப்பது, தரையில் அமர்ந்துகொண்டு மணிக்கணக்கில் சாப்பிடுவது என்ற எண்ணற்ற நினைவுகளை ஓவியங்களை தீட்டியிருக்கிறேன்.

ஓவியம் வரைவதையே முழுநேர வாழ்வியலாக கொண்டிருக்கிறேன். வரையாத நாள்கள்தான் புலராத பொழுதை போல உள்ளது.

2018ஆம் ஆண்டு முதல் பல ஓவியக் கண்காட்சிகளில் கலந்துகொண்டிருக்கிறேன். பெங்களூரு, கோவை, சென்னை, போபால், புதுச்சேரி, தில்லி, கொல்கத்தா போன்ற நகரங்களில் எனது ஓவியங்களை மட்டுமே தனியே காட்சிப்படுத்தி இருக்கிறேன். பல பாராட்டுகளையும், விருதுகளையும் பெற்றிருக்கிறேன்.

எனவே, மரபுசார் ஓவியக்கலையை காப்பாற்றும் கடமை அனைவருக்கும் உள்ளது. மரபுமுறைசார் வரை ஓவியங்களின் சிறப்புகளை அழியாமல் பாதுகாக்க, சிறுவர்களிடையே ஓவியக்கலையை வளர்த்து வருகிறேன். அதற்காக வகுப்பெடுக்கிறேன்' என்கிறார் பாரதி செந்தில்வேலன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com