கஜகஸ்தானில் ஜூலை 6-இல் நடைபெற்ற உலக குத்துச்சண்டை 2025 கோப்பைக்கான போட்டிகளில், இந்திய அணியின் சார்பில் பங்கேற்ற சாக்ஷி சௌத்ரி (54 கிலோ பிரிவு), ஜேஸ்மின் (57 கிலோ பிரிவு ), நூபூர் (80 கிலோ பிரிவு ) ஆகிய மூவரும் தங்கப் பதக்கங்களை வென்றனர். மூவரும் ஹரியாணாவைச் சேர்ந்தவர்கள். மூன்று தங்கம், ஐந்து வெள்ளி, மூன்று வெண்கலப் பதக்கங்கள் உள்பட 11 பதக்கங்களை இந்திய அணி பெற்றது, சாதனை நிகழ்வாகும்.
பெண்களுக்கான 54 கிலோ எடைப் பிரிவில் நடுவர்களிடமிருந்து ஒருமனதான தீர்ப்பைப் பெற, அமெரிக்காவின் யோஸ்லின் பெரெஸூக்கு எதிராக சாக்ஷி தனது தாக்குதல் திறமையை வெளிப்படுத்தினார். அதேநேரத்தில் ஜேஸ்மின் எதிராளியின் அழுத்தத்தின் கீழ் அமைதியாக இருந்து, பெண்களுக்கான 57 கிலோ எடைப் பிரிவில் பிரேசிலின் ஜூசிலன் செக்வேரா ரோமியுவை 4:1 என்ற கணக்கில் வீழ்த்தினார். நூபூர் கஜகஸ்தான் குத்துச்சண்டை வீராங்கனை யெல்டானா தலிபோவாவின் சவாலை முறியடித்து 80+ கிலோ இறுதிப் போட்டியில் 5:0 புள்ளிகள் கணக்கில் வென்றார்.
ஹரியாணாவைச் சேர்ந்த சாக்ஷி சௌத்ரி, ராணுவத்தில் பணிபுரிகிறார். தொடக்கத்தில் அவர் பயிற்சிக்காக தினமும் 20 கி.மீ. பயணம் செய்ய வேண்டிவந்தது. சாக்ஷியின் தந்தையின் ஆதரவுடன் குத்துச்சண்டையில் சாக்ஷியின் பயணம் தொடங்கியது. அதிகாலை 4.30 மணிக்கு எழுந்திருக்கும் சாக்ஷி சமர்ப்பணத்துடன் குத்துச்சண்டையின் நுணுக்கங்களைக் கற்றார். இருபத்து நான்கு வயதாகும் அவருக்கு, திருமணம் ஆகவில்லை. 'தனது திறமையில் 60 சதவீதம் மட்டுமே சாக்ஷி சௌத்ரி போட்டிகளில் காட்டுகிறார்' என்பது அவரது பயிற்சியாளரின் கணிப்பு .
ஹரியாணாவைச் சேர்ந்த இருபத்து நான்கு வயதாகும் ஜேஸ்மின் லம்போரியாவின் குடும்பத்தினர் குத்துச்சண்டை, மல்யுத்தப் பயிற்சிகளில் பரம்பரையாக ஈடுபடுபவர்கள். ஜேஸ்மினின் கொள்ளுத் தாத்தா ஹவா சிங், இரண்டு முறை ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்றவர். ஜேஸ்மினின் தாத்தா கேப்டன் சந்தர் பன் லம்போரியாவும் மல்யுத்த வீரர்.
குத்துச்சண்டையில் தேசிய சாம்பியன்களான ஜேஸ்மினின் மாமாக்களான சந்தீப் சிங், பர்விந்தர் சிங் ஆகியோரிடம் ஜேஸ்மின் பயிற்சி பெற்றார். 2021-இல் இருந்து குத்துச் சண்டை போட்டிகளில் பங்கு பெற்றுவருகிறார். ஐந்து முறை தேசிய சாம்பியன் நூபுர் ஷியோரன், புகழ்பெற்ற குத்துச்சண்டை வீரரான தனது தாத்தாவின் குத்துச் சண்டை பாரம்பரியத்தை முன்னெடுத்துச் செல்கிறார்.
இவரது தந்தை சஞ்சய் சிங்கும் குத்துச்சண்டை வீரர். தாத்தாவின் நினைவாக நிறுவப்பட்ட குத்துச்சண்டை அகாதெமியில் பயிற்சியாளராக உள்ளார். நூபுரின் தாயார் முகேஷ் ராணி, கூடைப்பந்தாட்டத்தில் ஆசிய சாம்பியன் பதக்கம் வென்றவர். குத்துச்சண்டையில் பல்கலைக்கழக போட்டியில் ஏற்பட்ட தோல்வி அவரது வாழ்க்கையின் போக்கை மாற்றியது. இருபத்து ஏழு வயதான நூபுர்ஆறடி உயரமுடையவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.