'பிளாஸ்டிக் கழிவுகளைக் கொடுங்கள். பதிலுக்குத் தானியங்களைப் பெற்றுகொள்ளுங்கள்' என்கிறார் மும்பை தாணேவில் செயல்படும் 'குஷியான்' (மகிழ்ச்சி) அறக்கட்டளை அமைப்பாளர் சினு குவாத்ரா .
பிளாஸ்டிக் கழிவுகளை மறுசுழற்சி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ள அவர் கூறியது:
'2017-இல் தொடங்கப்பட்ட 'குஷியான்' அறக்கட்டளை கரோனா காலத்தில் பல சேவைகளை மேற்கொண்டது.
சிறுவயதில் வீட்டில் வாங்கும் பால் பாக்கெட்கள் காலியானதும், பழைய பிளாஸ்டிக் பைகள் வாங்குபவரிடம் அளித்து, பூண்டுகளைப் பெறுவேன். அந்தச் சிந்தனையில் உருவானதுதான் 'பிளாஸ்டிக் கழிவுகளைக் கொடுங்கள். பதிலுக்கு தானியங்களைப் பெற்றுக்கொள்ளுங்கள்' என்ற திட்டம்.
மும்பையின் 'ஆரே காட்' பகுதியில் 'கல்திபாடா' பழங்குடி குடியிருப்பில் 'பிளாஸ்டிக் தோ... தான் லோ' என்ற திட்டத்தைச் செயல்படுத்திவருகிறோம். இதன்படி, பிளாஸ்டிக் கழிவுகளை நாங்கள் மாதம்தோறும் வீடுகளுக்கு வந்து பெற்றுகொண்டு, பயறு வகைகளை பண்டமாற்று முறையில் வழங்கி வருகிறோம். பிளாஸ்டிக் கழிவுகளை மறுசுழற்சி செய்து அரசு பள்ளிகளில் மாணவர்கள் உட்கார பெஞ்சுகளை செய்து இலவசமாக வழங்கி வருகிறோம்.
அடர்த்தி மிகுந்த, தடிமனான, தரமான பிளாஸ்டிக் பைகள், பெட் பாட்டில்களை எடைக்கு விலை போட்டு பெற்றுகொள்ள பலரும் உள்ளனர். ஆனால், மெல்லிய ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைகளை யாரும் வாங்குவதில்லை. அவைதான் சுற்றுப்புறச் சூழலுக்கு அபாயமாக மாறுகின்றன. இதற்கு முடிவு கட்ட இந்தியாவிலேயே முதல் முறையாக ஒருமுறை பயன்படுத்தும் குறைந்த அடர்த்தி கொண்ட பிளாஸ்டிக் கழிவுகளை மறுசுழற்சி செய்யும் தொழில் பட்டறையை அமைத்துள்ளோம்.
குடியிருப்புப் பகுதிகளில் இருந்து பிளாஸ்டிக் சேகரிப்பு ஆரம்பக் கட்டத்தில் இருப்பதால், பெரும்பாலான பிளாஸ்டிக் கழிவுகள் கடற்கரைகளில் இருந்து 'குஷியான்' அறக்கட்டளையின் தூய்மைப்படுத்தும் பிரிவின் பணியாளர்கள் மூலம் சேகரிக்கப்படுகின்றன. இவை தாணேவின் வர்தக் நகரில் உள்ள மையத்துக்கு இனம்வாரியாகப் பிரிப்பதற்கு கொண்டு செல்கிறோம்.
அங்கு அவை சுத்தம் செய்யப்பட்டு, துகள்களாக உருமாற்றம் செய்கிறோம். அந்தத் துகள்கள் மறுசுழற்சிக்காக அனுப்பப்பட்டு, அங்கு பிளாஸ்டிக் பெஞ்சுகளாக வடிவம் பெறுகின்றன. ஒரு பெஞ்ச் தயாரிக்க 19 கிலோ பிளாஸ்டிக் கழிவுகள் தேவைப்படும். ஒருநாளைக்கு ஐந்து பெஞ்சுகளை உருவாக்குகிறோம்.
தொடர்ந்து இதுபோன்ற பிளாஸ்டிக் கழிவுகளைச் சேகரிக்க கள பணியாளர்களை ஏற்பாடு செய்துவருகிறோம். நாங்கள் சுறுசுறுப்பாகச் செயல்பட்டு ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் கழிவுகளைச் சேகரிக்காவிட்டால், அவை சிமென்ட் ஆலைகளுக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கே எரிக்கப்படுகின்றன. அவை எரிக்கப்படும் போது உருவாகும் புகை காற்று மணடலத்தை விஷமுள்ளதாக்கும். இதனைத் தடுப்பதற்காகவாவது நாங்கள் துரிதமாகச் செயல்பட்டே ஆகவேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.
சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்திருப்பது அவசியம்' சினு குவாத்ரா.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.