சாதனைகள் நிகழ்த்துவேன்...

பதிமூன்று ஆண்டுகளாக வெறும் காலுடன் பயிற்சி பெற்ற இருபது வயது தடகள வீரர் பிரவீன் குப்தா, பயிற்சியாளர்களும், ஸ்பான்சர்களும் இல்லாமலேயே 'ஜம்ப் ரோப்' விளையாட்டில் புதிய கின்னஸ் உலக சாதனையை உருவாக்கியுள்ளார்.
சாதனைகள் நிகழ்த்துவேன்...
Published on
Updated on
2 min read

பதிமூன்று ஆண்டுகளாக வெறும் காலுடன் பயிற்சி பெற்ற இருபது வயது தடகள வீரர் பிரவீன் குப்தா, பயிற்சியாளர்களும், ஸ்பான்சர்களும் இல்லாமலேயே 'ஜம்ப் ரோப்' விளையாட்டில் புதிய கின்னஸ் உலக சாதனையை உருவாக்கியுள்ளார். 'என்னால் இன்னும் சாதனைகள் நிகழ்த்த முடியும். இது ஆரம்பம் மட்டும்தான்' என்று சொல்லும் அவர் கூறியது:

'நாங்கள் மும்பையில் ஒரு சிறிய அடுக்குமாடி கட்டடத்தில் வசிக்கிறோம். மாலை வேளைகளில் காலில் காலணி அணியாமல் ஸ்கிப்பிங் செய்வேன். குதிக்கும்போது அக்கம் பக்கத்தவர்களுக்கு சத்தம் கேட்கும். அசெளகரியமாக இருக்கும் என்பதால் வெறும் கால்களால் வேகமாக ஸ்கிப்பிங் செய்வேன்.

கேந்திரிய வித்யாலயாவில் படித்தபோது ஜூடோவில் பயிற்சி பெற்றேன். மூத்த ஜூடோ வீரரான மணீஷ் குமார், ஸ்கீப்பிங்க்கில் எனது திறமையைக் கண்டு ஈடுபாடு காட்டச் சொன்னார்.

பள்ளியில் அதிக மதிப்பெண் பெற்ற உற்சாகத்தில், இரண்டு பயிற்சியாளர்களிடம் பயிற்சி பெற்றேன். ஸ்கிப்பிங் விளையாட்டின் அடிப்படைகளைக் கற்றேன். தேவையான உடல் தகுதியை அடைவதில் பயிற்சிகள் கிடைத்தன. போட்டிகள், வெற்றிகள், பதக்கங்கள்.. என்று நாள்கள் நகர்ந்தன. தேசிய போட்டிகளிலும் பங்கேற்க ஆரம்பித்தேன். தனிநபர் போட்டியில் வெள்ளிப் பதக்கமும், , குழு போட்டியில் தங்கப் பதக்கமும் கிடைத்தன.

பள்ளிப் படிப்புக்குப் பிறகு மும்பை முலுண்டில் உள்ள கல்லூரியில் சேர்ந்தேன். கரோனா காலத்தில் எனது பயிற்சியும் தடைபட்டது. கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு, போட்டிகள் மீண்டும் தொடங்கியபோதும், 'ஜம்ப் ரோப்' (ஸ்கிப்பிங்) மும்பை பல்கலைக்கழகத்தின் கீழ் அதிகாரபூர்வ விளையாட்டாக அங்கீகரிக்கப்படாததால், அகில இந்திய பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ளும் அனுமதி எனக்கு கிடைக்கவில்லை.

சர்வதேச விளையாட்டு வீரர்களின் வீடியோக்களை ஆன்லைனில் விடாமல் பார்ப்பேன். ஜப்பானிய, சீன ஜம்ப் ரோப்பர்கள் பார்த்திராத நுட்பங்களைப் பயன்படுத்துவதைப் பார்க்கிறேன். அவர்களைக் கவனிப்பதன் மூலம் ஃப்ரீஸ்டைல் திறன்களைப் பட்டை தீட்டிக் கொள்ள உதவியது. பதினைந்துக்கும் மேற்பட்ட போட்டிகளில் பங்கேற்று 37- க்கும் மேற்பட்ட பதக்கங்களை வென்றுள்ளேன்.

நவம்பர் 2024-இல், எனது திறமையைக் காட்டும் வாய்ப்பு வந்தது. கின்னஸ் உலக சாதனைக்காக 30 விநாடிகளில், ஒரு காலில் பின்னோக்கித் தாவி, 69 கயிறு 'க்ரிஸ்க்ராஸ்கள்' செய்து முடித்தேன்.

நாசிக்கில் நடைபெற்ற 2025 சீனியர் ஜம்ப் ரோப் தேசிய சாம்பியன்ஷிப்பில், ஒற்றை ரோப் இரட்டையர்களில் போட்டியில் தங்கப் பதக்கமும், ஒற்றை ரோப் ஸ்பிரிண்டில் வெள்ளிப் பதக்கத்தையும் வென்றேன்.

பொதுவாக, ஸ்கிப்பிங் 'குழந்தைகளுக்கான விளையாட்டு' என்று நினைக்கிறார்கள். இந்த விளையாட்டில் எதிர்காலம் இல்லை என்கிறார்கள். இந்தக் கணிப்பு எனக்கு வலியைத் தருகிறது. போதாதக்குறைக்கு, 2017-இல் இந்திய அரசு 'அங்கீகரிக்கப்பட்ட விளையாட்டுப் பட்டியலில்' இருந்து 'ஜம்ப் ரோப்பிங்' நீக்கப்பட்டதிலிருந்து, எனது சாதனைகள், திறமைகளைச் சாதாரணமாக எடுத்துக் கொண்டனர். எனது திறமைக்கு மதிப்பில்லாமல் போய்விட்டது.

இந்த விளையாட்டை அரசாங்கமோ, ஒலிம்பிக்ஸ் கமிட்டியோ அங்கீகரிக்காததால் பண உதவி செய்ய தயங்குகின்றனர்.

ஒரு தசாப்த காலமாக விளையாட்டில் ஆதிக்கம் செலுத்தி வரும் சீன ஜம்ப் ரோப் ஜாம்பவான் சென் சியாவோலின் உலக சாதனையை முறியடிப்பதே எனது மிகப்பெரிய கனவு' என்கிறார் பிரவீன் குப்தா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com