
ஆன்ட்டிபயாடிக் மருந்துகளைச் சாப்பிட்டால், நோய் ஏற்படுத்தும் பாக்டீரியாக்களை அழிக்கும். இதோடு, குடல், மூக்கு, தொண்டை, சிறுநீர்த் துவாரம், இனப்பெருக்க உறுப்பு போன்ற பகுதிகளிலும் இருக்கும் நன்மை செய்யும் பாக்டீரியாக்களையும் அழித்துவிடும். இதனால் செரிமான மண்டலச் சிக்கல்கள் ஏற்படுவதுடன், அந்த உறுப்புகளில் பூஞ்சைத் தொற்றையும் ஏற்படுத்தும்.
ஆன்ட்டிபயாடிக் மருந்துகளால் குமட்டல், வாந்தி, வயிற்றுப்போக்கு, வயிறு உப்புசம், செரிமானமின்மை, வயிற்று வலி, பசியின்மை, தோல் சிவந்துவிடுதல், பூஞ்சைத் தொற்று, மலச்சிக்கல், இதயத் துடிப்பு அதிகமாகிவிடுதல், அதிக வியர்வை, மயக்கம், கை, கால்களில் வீக்கம் போன்றவை பக்கவிளைவுகளாக மாறுவதைத் தவிர்ப்பதற்காக, உணவுக்கு முன்பாகச் சாப்பிட ஒருசில மாத்திரைகள் பரிந்துரைக்கப்படும்.
மருந்துகளை நிறுத்தியும் மேலும் சில நாள்களுக்குப் பக்க விளைவுகள் சிலருக்குத் தொடரும். இந்தத் தொந்தரவுகளில் இருந்து விடுபடவேண்டுமென்றால், மருந்துகள் எடுத்துகொள்ளும்போது, அவற்றுக்கேற்றவாறு உணவுகளையும் மாற்றிக் கொள்ள வேண்டும்.
ஆன்ட்டிபயாடிக் என்பதற்கு நுண்ணுயிர் எதிர்ப்பிகள் அல்லது எதிர்ப்பு மருந்துகள் என்றால், 'பிரிபயாடிக்' என்பது நல்ல நுண்ணுயிரிகளை வளர்க்கும் உணவுப் பொருள்கள் என்றும் 'புரோபயாடிக்' என்பது நல்ல நுண்ணுயிரிகளைப் பெருக்கும் வேறு சில நுண்ணுயிரிகள் என்றும் பொருள்கொள்ள வேண்டும்.
'தாவர உணவுகளில் இருக்கும் செரிக்காத நார்ச்சத்துப் பொருள்கள், குடலுக்குள் சென்று, நொதித்து, அங்கிருக்கும் நன்மை செய்யும் நுண்ணுயிர்களுக்கு உணவாக மாறி, அவற்றை பலமடங்கு பெருக்கம் செய்து, குடலுக்கும் செரிமான மண்டலத்துக்கும் நன்மையை அளிக்கின்றன. அவையே பிரிபயாடிக் உணவுகள் எனப்படும்' என்று உணவு நுண்ணுயிரியல் துறை பேராசிரியர்கள் கிளென் கிப்ஸன், மார்சல் ராபர்பிராய்டு ஆகியோர் 1995-இல் கூறினர். இவை 'பிரக்டோ ஆலிகோசாக்கரைட்', 'காலாக்டோ ஆலிகோசாக்கரைட்', 'டிரான்ஸ் காலாக்டோ ஆலிகோசாக்கரைட்' என மூன்று வகைப்படும்.
பலவகையான பழங்கள், பச்சை காய்கள், கீரைகள், கோதுமை, பார்லி, ஓட்ஸ் போன்ற முழு தானியங்கள், பருப்புகள், விதைகள், கொட்டை உணவுகள் போன்றவற்றிலுள்ள கரையும், கரையாத நார்ச் சத்தானது, குடலில் புளித்தலுக்கு உள்ளாகி, அங்கிருக்கும் நன்மை செய்யும் பாக்டீரியாக்களுக்கு உணவாகி, அவற்றை பெருக்கம் செய்கின்றன.
இதன்படி, பூண்டு, வெங்காயம், வாழைப்பழம், பார்லி, ஓட்ஸ், ஆப்பிள், பிளாக்ஸ் விதை, முழு கோதுமை, வெண்டைக்காய், கொத்தவரை உள்ளிட்ட பச்சை நிறத்தில் இருக்கும் நாட்டு காய்கள், கீரைகள் முதலானவை சிறந்த உணவுகளாகும்.
'புளித்த தயிரிலுள்ள நுண்ணுயிரிகள், தீய நுண்ணுயிரிகளை அழித்து, நன்மை செய்யும் நுண்ணுயிரிகளை உருவாக்கி, குடலில் இருக்கும் நுண்ணுயிரிகளின் படலத்தைப் பெருக்கி உடலைக் காக்கிறது' என்று இலியா இலிச் மெச்னிகோவ் என்ற ரஷ்ய அறிவியல் அறிஞர் 1907-இல் கண்டறிந்தார். இதன்படி, புளித்த தயிர் அல்லது மோர், புளிக்க வைத்த சோயா பால், சீஸ், புளிக்க வைத்து செய்த கேழ்வரகு, கம்பு, சிறுதானிய கூழ், இட்லி, தோசை, ஆப்பம் முதலானவை நல்ல உணவுகளாகும்.
ஒருவேளை, வைரஸ் காய்ச்சல், கடுமையான சளி, இருமல், தொண்டைப்புண், மூச்சிரைப்பு போன்ற நிலைகளில், காய்கறிகள், கீரைகள், தயிர் சாப்பிட்டால், உடலை மேலும் குளுமையாக்கும் என்று பலர் நினைப்பார்கள். அவர்கள் எப்போதும் முழு தானியக் கஞ்சி, பருப்பு கடைசல் போன்றவற்றை சாப்பிடலாம். உதாரணத்துக்கு பார்லி, உடைத்த கோதுமை, சிறுதானியங்களில் கஞ்சி, வடிநீர், பருப்பு கடையல், குழகுழப்பாக வேகவைத்த பருப்பு சுண்டல், காய்கள் சூப் போன்றவற்றை எடுத்துகொள்ளலாம்.
அறுவைச் சிகிச்சை முடிந்து, வாய் வழியாக உணவு எடுப்போர் ஆன்ட்டிபயாடிக் மருந்துகள் சாப்பிடும்போது, ஒரு நாளைக்கு மூன்று முறை பழங்களையும், இரண்டு வேளை காய்களையும், மூன்று வேளை வெவ்வேறு தானியங்களையும் சாப்பிடலாம். மூன்று வேளையும் சோறு, குழம்பு என்று சாப்பிட்டால் பிரீபயாடிக், புரோபயாடிக் உடலுக்குக் கிடைக்காது. மாறாக, உணவு நேரத்தை ஆறாக அல்லது எட்டாகப் பிரித்துகொண்டு, 3 மணி நேரத்துக்கு ஏதேனும் ஒரு உணவை சிறிதளவு சாப்பிடலாம். அதில் அனைத்து உணவுப் பொருள்களும் இருக்குமாறு சரிவிகித உணவாகவும் இருக்க வேண்டும்.
ஆன்ட்டிபயாடிக் மருந்துள் எடுத்துக்கொள்பவர்கள் வேறெந்த தீவிரமான உடல் நலக்கோளாறும் இல்லாமல், வீட்டிலேயே இருக்கும்போது, கீழ்வருமாறு ஒருநாளை உணவை மாற்றியமைத்துக் கொள்ளலாம்.
காலை - புளிக்க வைத்து தயார்செய்யப்பட்ட ஏதேனும் தானியக்கூழ்
காலை உணவு- ஆப்பம், தேங்காய்ப்பால்
முற்பகல் உணவு- வாழைப்பழம், கொய்யா, திராட்சை கலந்த சாலட்
மதிய உணவு- மோர் சாதம், காரமில்லாமல் காய் அவியல்
பிற்பகல் - ஊறவைத்த கொட்டை , விதைகள் (பாதாம், பிஸ்தா, பிளாக்ஸ்ஃவால்நட்), ஆப்பிள்
மாலை- பருப்பு, சுண்டல், ஆவியில் வேகவைத்த புட்டு வகைகள்
இரவு உணவு - இடியாப்பம், ஆப்பம், கோதுமை உப்புமா
ஏப்போது ஆன்ட்டிபயாடிக் மருந்துகள் எடுத்துகொண்டாலும், பச்சை காய்கள், பழங்கள், கீரைகள், முழு தானியங்கள் போன்றவற்றை பிரிபயாடிக் உணவாகவும், தயிர், மோர், யோகர்ட், புளிக்க வைத்த கூழ், ஆப்பம் போன்றவற்றை புரோபயாடிக் உணவாகவும் தொடர்ச்சியாக எடுத்துக்கொள்ள வேண்டும்.
முழு செரிமான மண்டலமும் சரியாக வேண்டுமானால், நன்மை செய்யும் நுண்ணயிரிகளைப் பெருக்க வேண்டும். அதற்கு பிரிபயாடிக், புரோபயாடிக் உணவுகள் உதவிசெய்கின்றன. இந்த உணவுகள், ஆன்டிபயாடிக் மருந்துகளை சரியாகச் செரிக்கச் செய்து, கழிவுநீக்கம் செய்வதுடன் மட்டுமல்லாமல், அவற்றால் ஏற்படும் பக்கவிளைவுகளிலிருந்தும் உடலைக் காக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.