ஜெய்பூருக்கு அருகேயுள்ள அபநேரி என்ற ஊரில் 1, 200 ஆண்டுகள் பழமையான 3, 500 படிக்கட்டுகள் கொண்ட கிணறு உலகின் மிக அழகான, ஆழமான கிணறாக உள்ளது. கலைநயத்தால் உலகப் புகழ் பெற்றுள்ள இந்தக் கிணற்றை சுற்றுலாப் பயணிகள் ரசித்துச் செல்கின்றனர்.
பதின்மூன்று அடுக்குகளாக 3,500 படிகள் கண்ணைக் கவரும் விதத்தில் செதுக்கப்பட்டுள்ளன. நூறு அடி ஆழத்தில் சதுர வடிவத்தில் அமைந்திருக்கும் இந்தக் கிணற்றின் ஒரு பக்கத்தின் நீளம் சுமார் 110 அடி (35 மீட்டர்).
அபநேரி கிணற்றை மன்னர் ராஜா சந்த் என்பவர் 850-இல் உருவாக்கினார். இன்றைய அபநேரியின் உண்மையான பெயர் 'அப நகரி'. அதாவது, 'ஒளிமயமான நகரம்' என்று பொருள். ராஜா சந்த் கட்டியதால் கிணற்றின் பெயர் 'சந்த் பாவ்டி' என்றானது. 'பாவ்டி' அல்லது 'பாவ்ரி' என்றால் கிணறு என்று பொருள்.
இந்தக் கிராம மக்கள் கிணற்றை ஒரே இரவில் பூதங்கள் கட்டியதாகவும், மனிதர்களால் இத்தனை ஆழமாக, அழகாக கச்சிதமாக கட்ட முடியாது என்றும் கூறுகிறார்கள்.
இந்தக் கிணறு 'ஹர்சத் மாதா' கோயிலுக்கு முன்னால் அமைந்திருக்கிறது. கிணற்றைப் பார்க்கும்போது இந்தியர்களின் கட்டடக் கலைத்திறனையும் கணிதப் புலமையையும் புரிந்துகொள்ளலாம்.
அபநேரியின் ஆழமான கிணற்றுக்கு மேலே மொகலாயர்கள் சில மண்டபங்கள், கட்டடங்களைக் கட்டியிருக்கிறார்கள். மோர்னா லிவிங்ஸ்டன் என்பவர், ராஜஸ்தான் மாநிலப் படிக் கிணறுகள் பற்றி ஆய்வு செய்து புத்தகம் எழுதியுள்ளார். அந்தப் புத்தகத்திலும் அபநேரி கிணற்றின் முக்கியத்துவம் சொல்லப்பட்டுள்ளது.
ஜோத்பூர் அருகில் 'கடன் வாவ்' என்னும் இடத்தில் மற்றொரு அபநேரி போல் அமைந்த கிணறு இருக்கிறது என்றாலும், அபநேரி கிணற்றின் அழகுக்கு அந்தக் கிணறு ஈடாகாது!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.