அரிது... அரிது...

புண்ணிய வசத்தால் மனிதராய் பிறந்த ஒவ்வொருவரும் தாங்கள் இறக்கும் தருவாயில், உறவும் நட்பும் புடைசூழ மயானத்துக்குச் சென்று நல்லபடி இறுதிச் சடங்குகள் செய்யப்பட வேண்டும் என்றே நினைப்பார்கள்.
அரிது... அரிது...
Updated on
1 min read

புண்ணிய வசத்தால் மனிதராய் பிறந்த ஒவ்வொருவரும் தாங்கள் இறக்கும் தருவாயில், உறவும் நட்பும் புடைசூழ மயானத்துக்குச் சென்று நல்லபடி இறுதிச் சடங்குகள் செய்யப்பட வேண்டும் என்றே நினைப்பார்கள். இதற்கு வாய்ப்பு இல்லாமல் ஆதரவற்ற நிலையில் இருப்பவர்கள் பலர். இதுபோன்றவர்களின் உடலுக்கு இறுதிச்சடங்கு செய்யும் பணியை 25 ஆண்டுகளாகத் தனது குடும்பத்துடன் மேற்கொண்டு வருகிறார், திருச்சியைச் சேர்ந்த ஐம்பது வயதான பி. விஜயகுமார்.

பழங்காலப் புழங்குபொருள்- பணத்தாள்- அஞ்சல் தலை சேகரிப்பவர், யோகா ஆசிரியர், நூலகர், தன்னார்வல அமைப்புகளின் உறுப்பினர் எனப் பன்முகத்தன்மையோடு இயங்கி வருகிறார்.

சமூகச் சேவை, சுற்றுச்சூழல் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ள தனிநபர்கள், நிறுவனங்களின் சேவையை அங்கீகரித்துப் பாராட்டும் வகையில் ஆளுநர் விருது 2025-க்கு தேர்வாகியுள்ள விஜயகுமாரிடம் பேசியபோது:

'உலகத்திலேயே மிகவும் துயரமானது, இறுதிச் சடங்கு செய்யக் கூட நமக்கு ஆள் இல்லையே என்கிற நினைப்புதான். இது மரணத்தைவிடக் கொடூரமானது. உறவுகளுக்குச் செய்யும் சடங்குகளைவிட, பெயர் தெரியாதவர்களுக்குச் செய்யும்போது கிடைக்கும் நிம்மதியும் புண்ணியமும் பெரியதாகும். எனவேதான், ஆதரவற்றோர், உரிமம் கோராத நிலையில் உள்ள உடல்களுக்கு இறுதிச் சடங்குகள் செய்யும் அறப் பணியைத் தொடங்கினேன். இதற்காக காவல்நிலையங்கள், மருத்துவமனைகள், தொண்டு நிறுவனங்கள் எனப் பல இடங்களில் என் கைப்பேசி எண்ணைக் கொடுத்தேன்.

குடும்பத்தினரால் வெறுத்து ஒதுக்கப்பட்டு இறந்தவுடன் எட்டிப்பார்க்காத உறவுகளைக் கொண்டவர்களுக்கு என்னால் இயன்ற உதவிகளைச் செய்யத் தொடங்கினேன். முதலில் குறைந்த அளவில் அழைப்புகள் வர ஆரம்பித்தது. அப்படி அழைப்பு வரும்போது, எவ்வளவு வேலையாக இருந்தாலும் நிறுத்திவிட்டுக் கிளம்பிவிடுவேன். உரிய வகையில் சடலங்களை அடக்கம் செய்ய நடவடிக்கை எடுப்பேன்.

திருச்சியில் உள்ள மயானங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் அனைவரையும் நான் அறிவேன். நாளடைவில் எனக்கு உதவியாக மனைவி வழக்குரைஞர் சித்ரா, மகள் சட்டக் கல்லூரி கீர்த்தனா ஆகியோரும் உடன் வரத் தொடங்கினர். குடும்பமாக இணைந்து இறுதிச் சடங்குகளைச் செய்வதால் உயிரிழந்தோருக்கு ஒரு குடும்பம் கிடைத்த மன திருப்தியே என்னை மேலும் மேலும் இயங்கச் செய்து வருகிறது.

கரோனா இரண்டாவது அலை உச்சத்தில் இருந்தபோது, பல உடல்களை நல்லடக்கம் செய்துள்ளோம். இதுவரை ஆயிரக்கணக்கான உடல்களை அடக்கம் செய்துள்ளோம்.

வாழ்நாளில் இறந்தவுடன் வீட்டில் சட்டத்துக்கு இடையே படமாய் இருப்பதை விட, வாழும்போதும், வாழ்க்கைக்குப் பிறகும் பிறருக்குப் பாடமாய் இருப்போம். இருபத்தைந்து முறைக்கு மேல் குருதிக்கொடை அளித்துள்ளேன். எனது உடலைத் தானமாக வழங்க உறுதியேற்று மனைவி, மகள் ஒப்புதலுடன் திருச்சி கி.ஆ.பெ. விசுவநாதம் அரசு மருத்துவக் கல்லூரியில் பதிவு செய்துள்ளேன்' என்கிறார் விஜயகுமார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com