தொழில் துறையிலும் நவீனக் கட்டமைப்பிலும் உலகளவில் கொண்டாடும் மாபெரும் நகரமாக கோவை உயர்ந்திருக்கிறது. இங்கு பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முந்தைய ஆதிமனிதர்களின் வரலாற்றுப் பக்கங்களும் புதைந்து கிடக்கின்றன.
கோவையில் நாணயங்கள் கண்டெடுக்கப்பட்ட வெள்ளலூரை அகழ்வாராய்ச்சிப் பகுதி என தமிழ்நாடு அரசு அறிவித்ததும், மதுக்கரை, நீலகிரி மாவட்டப் பாறை ஓவியங்கள் பல நூற்றாண்டுகளுக்கு முந்தையவை எனத் தொல்லியல் ஆய்வாளர்கள் நிறுவியதும் இதற்குச் சான்றுகளாகும். அந்த வரிசையில் 3 ஆயிரம் ஆண்டுகள் பழைமையான கற்கால மனிதர்களின் வாழ்விடத் தடயங்கள் சூலூர் அருகே கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
சென்னைப் பல்கலைக்கழகத்தின் பண்டைய வரலாறு, தொல்லியல் துறையைச் சேர்ந்த முதுநிலை மாணவி ஜி.உமாமகேஸ்வரி, மென்பொருள் பொறியாளர் புவனேஸ்வரன் உள்ளிட்டோர் சூலூர் அருகேயுள்ள ஜல்லிபட்டி, மலைப்பாளையம் கிராமப் பகுதிகளில் தீவிர கள ஆய்வு மேற்கொண்டனர்.
ஆய்வின்போது சின்னமலை, அதிலிருந்து 1.4 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள செஞ்சேரிமலை ஆகிய இரு குன்றுகளிலும் வரலாற்றுக்கு முந்தைய காலத்தைச் சேர்ந்த அரிய பொக்கிஷங்களும், மறைவிடங்களில் தீட்டப்பட்ட வடிவியல் ஓவியங்களும், ஆதிமனிதர்கள் பயன்படுத்திய நுண்கற்காலக் கருவிகளும் ஒரே இடத்தில் (இன்-சிட்டு முறையில்) அப்படியே மாறாமல் கிடைத்திருக்கின்றன.
அடர் சிவப்பு நிற மண் சாயத்தால் பாறை, அங்குள்ள பாறைக் குகைகளின் மறைவிடங்களில், 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய மனிதர்கள் தங்களின் ரசனையையும், வாழ்வியலையும் ஓவியங்களாகப் பதிவு செய்துள்ளனர். அங்கு ஆதிமனிதர்கள் கைகளால் செதுக்கிப் பயன்படுத்திய கட்டைவிரல் நக வடிவிலான சுரண்டிகள், துளையிடும் கருவிகள், சுத்தியல் கற்கள் உள்ளிட்ட சுமார் 150 கற்கால கருவிகளும், ஏழு கல் கலைப்பொருள்களும் சேகரிக்கப்பட்டுள்ளன.
'தொழில்நுட்பப் பகுப்பாய்வின்படி இவை இந்திய நுண்கற்கருவி மரபின் சிறப்புமிக்கக் கருவிகள் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளன. இங்கு 'பைபோலார் ஃபிளாக்கிங்' எனப்படும் இருமுனைச் செதுக்கல் முறை முதன்மையாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. உள்ளூரில் கிடைக்கக் கூடிய குவார்ட்ஸ் படிகக் கற்களைக் கொண்டு மிக நேர்த்தியான பயன்பாட்டுக்காக இந்த நுண்கற்காலக் கருவிகள் செய்யப்பட்டுள்ளன.
செஞ்சேரிமலைப் பகுதியில் கண்டெடுக்கப்பட்ட குவார்ட்சைட் சுத்தியல் கல்லில் கற்களை உடைத்து செதுக்கியதற்கான அடிபட்ட அடையாளங்கள் தெளிவாகக் காணப்படுகின்றன. இந்த வகையான குவார்ட்சைட் பாறைகள் அந்த உள்ளூர் பகுதி நிலப்பரப்பில் இயற்கையாகக் கிடைப்பவை அல்ல. இதன் மூலம், பாலக்காட்டுக் கணவாய் வழியாகத் தங்கள் கால்நடைகளை ஓட்டிச் சென்ற கற்கால மனிதக் குழுக்கள், பயணத்தின்போது தாற்காலிகமாகவோ அல்லது பருவகாலத் தங்குமிடங்களாகவோ இந்த சின்னமலை, செஞ்சேரிமலைக் குன்றுகளைப் பயன்படுத்தியிருக்கலாம் என்று கருதப்படுகிறது. தங்களின் பயணத்தின்போது பிற பகுதி மனிதர்களுடன் ஏற்பட்ட தொடர்புகளின் மூலமே இந்த விசித்திரக் கற்களை அவர்கள் கொண்டு வந்திருக்க வேண்டும்'' என்று தொல்லியல் துறை அகழ்வாராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
தொல்லியல் ஆய்வாளர் வி.செல்வகுமார்:
கோவையில் மலைகள், பாறை மறைவிடங்களில் இத்தகைய நுண்கற்கருவிகள் மிகப்பரவலாகக் கிடைக்கின்றன. சுமார் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே வேட்டையாடி வாழும் ஆதிமனித சமூகங்கள் தொடர்ந்து வாழ்ந்து வந்துள்ளனர்.
ஏற்கெனவே குமிட்டிப்பதி, வாளையாறு, மருதமலை, சிறுவாணி அருவிப் பகுதி, பாரதியார் பல்கலைக்கழக வளாகம் ஆகிய இடங்களிலும் இக்கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டு, ஆதிமனிதர்களின் வாழ்விடங்களாக அவை உறுதி செய்யப்பட்டுள்ளன. மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரப் பகுதிகளில் ஆதிமனிதர்களுக்குத் தேவையான தாவர, விலங்கு உணவுகள் தாராளமாகக் கிடைத்ததே, வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திலிருந்து இன்று வரை தொடர்ச்சியாக மனிதர்கள் இங்கு வாழ்ந்து வருவதற்கு மிக முக்கியக் காரணமாகும்.
வரலாற்றுக்கு முந்தைய காலம் மட்டுமன்றி, இந்த இரு குன்றுகளும் இடைக்கால வரலாற்றிலும் ஆன்மிகக் கொண்டாட்ட மையங்களாகத் திகழ்ந்துள்ளன. செஞ்சேரிமலை அடிவாரத்தில் உள்ள குகை, அதன் மலை உச்சியில் அமைந்துள்ள மந்திரகிரி வேலாயுதசுவாமி கோயிலில் 1339-ஆம் ஆண்டைச் சேர்ந்த ஹொய்சாள மன்னர்களின் கல்வெட்டு ஒன்று உள்ளது. இக்கோயிலின் மூல அமைப்பு சோழ பேரரசன் கரிகால சோழனால் கட்டப்பட்டது. பின்னர் ஹொய்சாள தளபதியால் புனரமைக்கப்பட்டது.
சின்னமலை சுந்தரராஜ பெருமாள் கோயில் நாயக்கர் காலத்தைச் சேர்ந்ததாகும். இந்த பெருமாள் கோயில் சுவர்களுக்குப் பின்னாலேயே உள்ள பாறைக்குகை, அந்த மலையின் மிகப்பழைமையான நினைவை அமைதியாகத் தன்னுள் தேக்கி வைத்துள்ளது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க பாறை ஓவியங்கள் தற்போது எவ்வித பாதுகாப்பும் இல்லாமல் திறந்தவெளியில் உறைந்து கிடக்கின்றன. இவற்றை உடனடியாகப் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்க வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பாலாற்றின் குறுக்கே அணை கட்ட எதிா்ப்பு: மண்ணில் புதைந்து விவசாயிகள் போராட்டம்

வி.பி. சிங்: வரலாறு நினைவுகொள்ள வேண்டிய ஓர் இந்தியப் பிரதமர்

மேக்கேதாட்டு அணை விவகாரம்: காவிரியாற்று மணலில் புதைந்து விவசாயிகள் போராட்டம்





