தென் அமெரிக்காவின் சிலி நாட்டின் சாண்டியாகோ நகரத்திலிருந்து தெற்கே 2,180 மைல் தொலைவில் தென் பசிபிக் பெருங்கடலின் நடுவில் மக்கள் வசிக்கும் ஈஸ்டர் தீவை 'மர்மத் தீவு', 'விசித்திரத் தீவு' என்றெல்லாம் அழைக்கின்றனர். பூமியின் மிகவும் தொலைதூரத்தில் உள்ள இந்தத் தீவில் மோவாய் சிலைகள் ஆயிரத்துக்கும் மேற்பட்டவை நிறுவப்பட்டுள்ளன. மிகப் பழைமையான 'ரபா நூய்' நாகரிகம் செழித்து வளர்ந்ததும், பின்னர் மறைந்ததும் ஈஸ்டர் தீவில்தான்.
மரங்கள் இல்லாத இந்தத் தீவில் நிலப் பறவைகளும் இல்லாமல் போயின. தீவுவாசிகளால் புதிய படகுகளை உருவாக்க முடியவில்லை. மேல்மண் அரிப்பு தீவிரமாகி, விவசாயத்தில் பெரும் வீழ்ச்சியை ஏற்படுத்தியது. பஞ்சம், வறட்சி, வறுமை ஆகியன வந்து சேர்ந்தது.
1722- ஆம் ஆண்டு ஏப்ரல் 5-இல் ஈஸ்டர் தினத்தன்று டச்சு ஆய்வாளர் ஜேக்கப் ரோக்வீன் அந்தத் தீவுக்கு வந்து, 'ஈஸ்டர் தீவு' என்று பெயரிட்டார்.
புராணங்களின்படி, அனகேனா கடற்கரையில் முதல் ரபாநூய் மன்னரான ஹோட்டு மாட்டுவா பாலினேசியாவிலிருந்து படகில் ராணி வகாயுடன் இந்தத் தீவுக்கு வந்தடைந்தார் என்று கூறப்படுகிறது.
புராணங்களில் கூறப்படும் டெர்ரா ஆஸ்ட்ராலிஸ் கண்டத்தைக் கண்டுபிடிப்பதற்காக கடற்பயணம் மேற்கொண்டிருந்தபோது, ரோக்வீன் தலைமையிலான கப்பல் குழுவினர் தற்செயலாக அந்தத் தீவைக் கண்டறிந்தனர். பின்னர் பிரெஞ்சு, ஸ்பானிய, பிரிட்டிஷ் மதபோதகர்களும் ஆய்வாளர்களும் தீவுக்கு வருகை தந்தனர்.
1888- ஆம் ஆண்டில் அந்தத் தீவானது சிலியின் ஒரு பகுதியாக ஆனது. இந்த நேரத்தில் தீவுவாசிகள் அடிமைப்படுத்தப்பட்டதாலும், பெரியம்மை, காசநோய் உள்ளிட்ட தொற்றுநோய்களால் ரபாநூய் மக்களின் எண்ணிக்கை பெருமளவில் குறைந்தது.
இதனால் இளைய தலைமுறையினரால் மொழியைப் படிக்கவோ அல்லது கலாசாரத்தைப் பின்பற்றவோ முடியவில்லை. அவர்களது முன்னோர்கள் எப்படி அந்தத் தீவுக்கு வந்தனர் என்றும், புதிரான மோவாய் சிலைகளை உருவானது எப்படி? என்றும் ரபாநூய் மக்களின் வரலாறு உள்ளிட்டவை வெளிவராமல் போனது.
தீவின் சிறப்புகள்
இங்குள்ள அஹு தொங்காரிகியில் சூரிய அஸ்தமனத்தையும், உதயத்தையும் காணலாம். மூன்று செயலற்ற எரிமலைகளையும் ஏராளமான மேடு பள்ளங்களையும் கொண்ட இந்த ஒற்றைத் தீவானது, 15 மைல் அகலமும் 8 மைல் நீளமும் கொண்டது. ஒரே நாளில் இத்தீவை காரில் சுற்றி வரமுடியும். ஆண்டுக்கு ஒரு லட்சம் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர்.
ஈஸ்டர் தீவின் தென்மேற்கு முனையில் ஹங்கா ரோவா என்ற ஒரே ஊரில் விமான நிலையம் அமைந்துள்ளது. சிலியில் உள்ள சாண்டியாகோவிலிருந்து விமானத்தில் செல்ல வேண்டும்.
தீவின் மக்கள்தொகை சுமார் 6 ஆயிரம் பேர்தான். இவர்கள் அந்த ஊரிலேயே வசிக்கின்றனர். மக்களில் சுமார் பாதி பேர் சிலி நாட்டிலிருந்து வேலை செய்வதற்கும் வாழ்வதற்கும் வந்தவர்கள். மற்ற பாதி பேர்கள் அந்தத் தீவிலேயே பிறந்து வளர்ந்த ரபாநூய் இனத்தவர்கள். ஒரு காலத்தில் ரபாநூய் மக்களின் எண்ணிக்கை 15 ஆயிரமாக இருந்தது. ஆனால், வன அழிப்பு, காலநிலை மாற்றம், வளப் பற்றாக்குறை காரணமாக மக்களின் எண்ணிக்கை 2 ஆயிரமாகியது.
தீவின் வருமானம் சுற்றுலாவிலிருந்துதான் வருகிறது. எல்லாப் பொருள்களும் சிலியிலிருந்து வரவேண்டும் என்பதால், பொருள்களின் விலை அதிகம். டீசல் இயந்திரங்களில் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. மோவாய் சிலைகளும் சில எரிமலைக் குகைகளும் அகஹங்கா என்ற பகுதியில் உள்ளன.
மலையின் மேல் உள்ள நன்னீர் ஏரியில் வனக்குதிரைகள் தண்ணீர் குடிக்க வருகின்றன. ஆனால், துரதிர்ஷ்டவசமாக சில குதிரைகள் சேற்றில் சிக்கி இறந்துவிடுகின்றன. இந்தப் பகுதியைச் சுற்றி குதிரை எலும்புகள் சிதறிக் கிடக்கின்றன.
மோவாய் சிலைகள்
'மோவாய்' எனப்படும் பெரிய கல் சிற்பங்களால் ஈஸ்டர் தீவு பிரபலமாகியுள்ளது. ஒவ்வொன்றும் ஒரே எரிமலைக் கல்லில் செதுக்கப்பட்டு, பெரிய, அகன்ற மூக்குகள், நீண்ட காதுகள், பெரிய உதடுகள், கண்கள், எடுப்பான தாடைகள் கொண்ட மனித உருவத்தில் உருவாக்கப்பட்டுள்ளன. இங்குள்ள ஆன்மிகத் தலைவர்கள் அல்லது தலைவர்களுக்கு மரியாதை செலுத்தும் சின்னம் என்று கருதப்படுகிறது. ஆனால், இந்தக் கட்டமைப்புகளின் நோக்கம் என்னவென்று யாருக்கும் தெரியவில்லை.
கால்கள் இல்லாமல் முழு உடலுடன் உயரமாக நிற்பவை, மலைச்சரிவிலிருந்து ஒரு பெரிய தலை மட்டும் வெளியே நீட்டிக்கொண்டிருப்பவை என இரண்டு வகையான மோவாய் சிலைகள் உள்ளன. இந்தச் சிலைகள் சராசரியாக சுமார் 13 அடி உயரமும், 14 டன் எடையும் கொண்டவை. ஆனால், அவற்றில் ஒன்று 30 அடி உயரத்திலும் 80 டன் எடையிலும் கவிழ்ந்துள்ளது. அந்தக் கல் குவாரியில் உள்ள, முழுமையடையாத மற்றொரு மோவாய் சிலை சுமார் 70 அடி நீளமும் 270 டன் எடையும் கொண்டது.
சில மோவாய் சிலைகளில் உருளை வடிவிலான 'புக்காவோ' எனப்படும் சிவப்பு எரிமலைக் கல் தொப்பிகள் உள்ளன. சில மோவாய்கள் 'அஹு' எனப்படும் கல் மேடைகளின் மீது அமர்ந்திருக்கின்றன. ஏறக்குறைய அனைத்து மோவாய்களும் அவற்றின் பச்சை குத்தப்பட்ட முதுகுகள் கடலை நோக்கியவாறு தீவின் கடற்கரையோரம் வைக்கப்பட்டுள்ளன.
தீவு முழுவதும் சுமார் 887 மோவாய் சிலைகள் கூட்டங்களாகக் கண்டறியப்பட்டுள்ளன. அஹு தொங்காரிகியில், 15 மோவாய் சிலைகள் கடலுக்கு பின்புறம் காட்டி வரிசையாக நிற்கின்றன. இங்குள்ள மோவாய் சிலைகளில் ஒன்று 86 டன் எடையுடன் உள்ளது.
1960-இல் தீவின் இந்தப் பகுதியை ஒரு சக்திவாய்ந்த சுனாமி தாக்கியதில் மோவாய் சிலைகள் அவற்றின் அஹு மேடையிலிருந்து உள்நாட்டுக்கு அடித்துச் செல்லப்பட்டது. கவிழ்க்கப்பட்ட இந்தச் சிலைகள், 1990-இல் மீண்டும் நிமிர்த்தி வைக்கப்பட்டன. இங்கிருந்து பார்த்தால், தொலைவில் செயலற்ற தெரவாக்கா எரிமலை தெரியும்.
ஈஸ்டர் தீவின் பிரபலமான சுற்றுலா இடமான ரானோ ரராக்குவில் உள்ள மோவாய்களில் சுமார் 95% பாறைகளில் செதுக்கப்பட்டவை. தலை, உடல் உருவாகும் வரை பாறைச் சுவர்களில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக மோவாய்களின் உடல்களை இங்குள்ளோர் செதுக்கியுள்ளனர். முடிக்கப்படாத இரண்டு மோவாய்கள் இன்றும் காணப்படுகின்றன.
தீவு முழுவதும் கடந்த காலத்தில் வன அழிப்பால் மண் கீழ்நோக்கி அரித்துச் செல்லப்பட்டு, மோவாய் உடல்களை மூடியுள்ளது. மோவாய் உடல்கள் மண்ணுக்கு அடியில் புதைக்கப்பட்டிருந்ததை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் அண்மையில் கண்டுபிடித்துள்ளனர். துகுதுரி மோவாயானது மற்ற மோவாய்களிலிருந்து வேறுபடுகிறது. இது வட்டமான தலை மண்டியிட்ட நிலையில் காணப்படுகிறது. இந்த மோவாய், ஈஸ்டர் தீவில் உருவாக்கப்பட்ட கடைசி மோவாயாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
கடலோரத்தில் அமைந்துள்ள தேபிட்டோ குரா வில் தீவில் மிக உயரமான மோவாய் சிலை, தனியாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது. இந்த மோவாய் 30 அடிக்கும் மேல் நீளமும், 80 டன் எடையும் கொண்டதுடன், சிவப்பு நிற புக்காவோ தொப்பியையும் கொண்டுள்ளது. இந்த மோவாய்க்கு அருகில் 'பூமியின் தொப்புள்' என்று கருதப்படும் காந்த சக்தி கொண்ட வட்டமான, வழவழப்பான ஒரு கல் உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







