வளம் கொழிக்கும் வண்டல் மண் நிறைந்துள்ள காவிரி டெல்டா மாவட்டங்களில் 'லேட்டரைட் சாயில்' என்கிற செம்புறை மண் வித்தியாசமானது. சிவப்புக் கப்பிக்கல் வகையைச் சார்ந்த இந்த மண்ணை 'செம்பாறங்கல்' எனக் கூறுகின்றனர். தஞ்சாவூர் அருகேயுள்ள வல்லம், அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் காணப்படும் இந்த மண் அரிய வகையைச் சார்ந்தது. டெல்டாவில் மிக உயரமான பகுதியான இந்த இடத்தை மேட்டு நிலம் (அப் லேண்ட்) என அழைக்கின்றனர்.
இதுகுறித்து தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத் தொழில், நில அறிவியல் துறைத் தலைவர் முனைவர் ரெ. நீலகண்டன் கூறியது:
'அதிக வெப்பநிலை, பலத்த மழை நிலவும் பகுதிகளில் 'லேட்டரைசேஷன்' என்ற செயல்முறை மூலம் உருவாகும் வெப்ப மண்டல எஞ்சிய மண்ணே லேட்டரைட் மண் என்கிற செம்புறை மண். களிமண் போன்ற நிலையிலிருந்து கல் போன்ற நிலைக்கு மாறக்கூடிய வேதியியல் எதிர்வினையே லேட்டரைட் மண். இது இந்திய தீபகற்பம், தமிழ்நாட்டின் சில பகுதிகளில் பரவலாகக் காணப்படுகிறது.
இந்த மண் துருப்பிடித்த சிவப்பு நிறத்துடனும், காய்ந்த பின்னர் "செங்கல் போன்ற' கடினத்தன்மையுடனும் தனித்துவமாக இருக்கிறது. மண் காயும்போது, அதிலுள்ள இரும்பு ஆக்சைடுகள் சிமெண்ட் போலச் செயல்பட்டு, ஒரு நிலையான அமைப்பை உருவாக்குகின்றன. இதனால்தான், இதைப் பண்டைய காலத்தின் "கான்கிரீட்' என அழைக்கிறோம்.
தமிழ்நாட்டின் மொத்தப் பரப்பளவில் ஏறத்தாழ 3 சதவீதப் பகுதிகளில் இந்த மண் காணப்படுகிறது. சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் ஆழமான சிவப்பு நிற செம்புறை மண் காணப்படுகிறது. நீலகிரி, பழனி மலைகளில் தோட்டப் பயிர்களுக்குச் சாதகமான உயர் மட்ட செம்புறை மண்ணும், காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் சிறிய அளவிலான தாழ் மட்ட செம்புறை மண்ணும் காணப்படுகின்றன.
அதிகப்படியான மழையால் மண்ணிலுள்ள சிலிக்கா, சுண்ணாம்புச் சத்துகள் அடித்துச் செல்லப்பட்டு, இரும்பு, அலுமினியம் ஆக்சைடுகள் எஞ்சியிருப்பதன் வாயிலாக இந்த மண் உருவாகிறது. இது முக்கியமாக நீரேற்றப்பட்ட இரும்பு ஆக்சைடுகள், அலுமினியம் ஆக்சைடுகளைக் கொண்டுள்ளன. இது கரடுமுரடான, நுண்துளைகள் கொண்டதாக இருப்பதால், இதற்கு நீர் உறிஞ்சும் திறன் அதிகம். ஆனால், ஈரப்பதத்தைத் தக்கவைக்கும் திறன் குறைவு.
செம்புறை மண் பூமிக்கு அடியில் இருக்கும்போது மென்மையாக இருப்பது இதன் தனித்துவமான பண்பு. ஆனால், காற்றில் வெளிப்படும்போது மிகவும் கடினமாகிவிடும். அடுக்கடுக்காக இருக்கும் இந்த மண் சிறந்த இயற்கைக் கட்டுமானப் பொருளாக நூறு ஆண்டுகளுக்கு முன்பு வரை இருந்தது. வல்லம், காரைக்குடி, நீலகிரி, பழனி ஆகிய பகுதிகளில் முன்னொரு காலத்தில் வீடு கட்டுவதற்கு முக்கியமான கட்டுமானப் பொருளாக இருந்தது. இதன் மீது சுண்ணாம்புக் கலவையும் பூசப்படும். இவ்வாறு கட்டப்படும் வீடுகளில் கோடைகாலத்தில் வெப்பத்தின் தாக்கம் தெரியாது.
குளிர், மழைக்காலத்தில் கதகதப்பாக இருக்கும். சிமென்ட் வருகைக்குப் பின்னர் இந்தச் செம்புறை மண்ணின் பயன்பாடு குறைந்துவிட்டது. இந்தக் கற்களால் கட்டப்பட்ட வீடுகளில் சுவர் சொரசொரப்பாக இருக்கும். பார்ப்பதற்கு அழகாக இருக்காது. எனவே, சிமென்ட் கலாசாரம் வந்த பிறகு இந்தக் கற்களை யாரும் விரும்புவதில்லை. தற்போது, செம்புறை மண்ணில் கட்டப்பட்ட பெரும்பாலான கட்டடங்கள் சிமென்ட் கட்டடங்களாக மாறிவிட்டன.
தமிழ்நாட்டில் இரும்பு யுகத்தில் (பெருங்கற்காலம்) ஈமச்சின்னங்களை உருவாக்க செம்புறைக் கற்கள் (லேட்டரைட் கற்கள்) அடிக்கடி பயன்படுத்தப்பட்டன. ஆதிச்சநல்லூர், பழனி மலை அடிவாரப் பகுதிகளில் செம்புறைக் கற்கள் வெட்டப்பட்டு சிஸ்ட் வகை கல்லறைகள் அல்லது பாதுகாப்பு வளையங்கள் அமைக்கப்பட்டன.
இரும்புக் கருவிகள் அதிகம் இல்லாத காலத்திலேயே ஈரப்பதமாக இருக்கும்போது இதை எளிதாக வெட்ட முடிந்ததால், பண்டைய மக்கள் இதைத் தேர்ந்தெடுத்தனர்.சோழர் காலத்து பிரம்மாண்ட கோயில்கள் கருங்கல் கட்டுமானத்துக்குப் பெயர் பெற்றவை என்றாலும், செம்புறை மண் ஒரு முக்கியமான துணைப் பொருளாகப் பயன்படுத்தப்பட்டது. பல இடைக்காலக் கோயில்களின் உள்புறச் சுவர்கள் அல்லது அடித்தள மேடைகளுக்கு செம்புறைக் கற்கள் பயன்படுத்தப்பட்டன.
சித்தன்னவாசல் உள்ளிட்ட இடங்களில் செம்புறைப் பாறைகள் சில சிறிய சந்நிதிகளைக் செதுக்க அல்லது பெரிய வளாகங்களுக்குக் கட்டமைப்பை வழங்கப் பயன்படுத்தப்பட்டன. சுட்ட செங்கற்கள் பரவலாகப் பயன்பாட்டுக்கு வருவதற்கு முன்பு இயற்கையாகவே கடினமான செம்புறைக் கற்களே கோட்டைச் சுவர்கள் மற்றும் குடியிருப்புகளுக்கு முதன்மையான பொருளாக இருந்தன. கடல் காற்றின் அரிப்பைத் தாங்கி நிற்கும் பழங்காலக் கோட்டைகளின் எஞ்சிய பகுதிகள் இதன் வலிமைக்குச் சான்று.
தற்போது கட்டுமானத் துறையில் செம்புறை மண் முக்கியப் பங்கு வகிக்கிறது. இது சாலைகள் அமைப்பதற்கும், செங்கல் தயாரிப்புக்கும் பயன்படுத்தப்படுகிறது. பாரம்பரிய இடங்களைப் பாதுகாக்கவும், புதிய கட்டுமானத் திட்டங்களைச் செயல்படுத்தவும் இந்த மண்ணின் தன்மையைப் புரிந்துகொள்வது அவசியம்'' என்கிறார் நீலகண்டன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஆத்திகத்துக்கு அஸ்திவாரமாக திகழ்கிறது இந்த மண்: தருமபுரம் ஆதீனம்

தொகுதி அலசல்: கிருஷ்ணராயபுரம்! புதுமுகங்களிடையே கடும் போட்டி
வாழைத்தண்டின் பயன்கள்!

ஆண்டிபட்டி: 50 ஆண்டுகளாக நிறைவேறாத கோரிக்கை!
விடியோக்கள்

நான்தான் கிங் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை
