11-ஆம் நூற்றாண்டு சோழர் கால செப்பேடுகளை பிரதமர் மோடி முன்னிலையில் திருப்பியளித்த நெதர்லாந்து அரசு!போக்சோ வழக்கு: மத்திய அமைச்சர் மகன் காவல் நிலையத்தில் சரண் தெலங்கானாவில் எஸ்ஐஆர் பணிகள் ஜூன் 15 முதல் தொடக்கம்நீட் விவகாரம்: மத்திய அமைச்சர் பதவியில் இருந்து தர்மேந்திர பிரதானை நீக்க ராகுல் காந்தி வலியுறுத்தல்கேரளத்தில் புதிய முதல்வர் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் பாஜக எம்எல்ஏக்கள்!இளைஞர்களைக் கரப்பான்பூச்சி, ஒட்டுண்ணிகளுடன் ஒப்பிட்ட விமர்சனம்: உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி விளக்கம்!சிபிஎஸ்இ 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூலை முதல் மும்மொழிக் கல்வி கட்டாயம்!புதிய தமிழக அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு!
/

அருங்காட்சியக அதிசயம்!

முன்னோர்களின் வாழ்க்கைமுறை, கலை, கலாசாரம், வரலாறு, அறிவியல், தொல்லியல் உள்ளிட்ட முக்கியத்துவம் வாய்ந்த பொருள்களைச் சேகரித்து, பாதுகாத்து இன்றைய, எதிர்வரும் தலைமுறையினருக்குக் காட்சிப்படுத்தும் இடம்தான் அருங்காட்சியகங்கள்.

News image
Updated On :45 நிமிடங்கள் முன்பு

முன்னோர்களின் வாழ்க்கைமுறை, கலை, கலாசாரம், வரலாறு, அறிவியல், தொல்லியல் உள்ளிட்ட முக்கியத்துவம் வாய்ந்த பொருள்களைச் சேகரித்து, பாதுகாத்து இன்றைய, எதிர்வரும் தலைமுறையினருக்குக் காட்சிப்படுத்தும் இடம்தான் அருங்காட்சியகங்கள்.

கல்வி, ஆய்வு, மகிழ்ச்சிக்காக பண்டைய நவீன நாகரிக சின்னங்களை உள்ளடக்கிய இந்த அருங்காட்சியகங்களில் அரிய பொருள்கள், கலைநயமிக்கச் சிற்பங்கள், இயற்கை அறிவியல் சார்ந்த பொருள்கள், அகழ்வாராய்ச்சியில் கண்டெடுக்கப்பட்ட பொருள்கள், ஓவியங்கள், நாணயங்கள் போன்றவை அடங்கியுள்ளன. இவை கடந்த காலத்தின் சான்றுகளை நிகழ்காலத்தில் மக்கள் அறியவும், அறிவைப் பெருக்கிக் கொள்வதற்கான பெட்டகங்கள்.

சிலைகள், கல்வெட்டுகள், பழங்காலக் கருவிகள் உள்ளிட்டவற்றைப் பாதுகாக்கும் தொல்லியல் அருங்காட்சியகங்கள், ஓவியங்கள், சிற்பங்கள் உள்ளிட்டவற்றை மையமாகக் கொண்ட கலை அருங்காட்சியகங்கள், விலங்குகள், தாவரங்கள், புதை படிவங்கள் உள்ளிட்டவற்றைக் கொண்ட கலை அருங்காட்சியகங்கள், அறிவியல் சோதனைகள், கண்டுபிடிப்புகள் உள்ளிட்டவற்றை விளக்கும் அறிவியல் தொழில்நுட்ப அருங்காட்சியகங்கள் என வகைப்படுத்தப்படுகின்றன.

உலகக் கலாசாரத்தை வளப்படுத்துதல், கலாசாரப் பரிமாற்றம், மக்களிடையே பரஸ்பரப் புரிதல், ஒத்துழைப்பையும் அமைதியையும் மேம்படுத்துதல், அருங்காட்சியகங்களின் முக்கியத்துவத்தை உணர்த்துதல் போன்றவற்றை வலியுறுத்தும் வகையில்,ஆண்டுதோறும் மே 18-இல் உலக அருங்காட்சியக தினம் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் உலகெங்கிலும் உள்ள சுமார் 1 லட்சம் அருங்காட்சியகங்களில் கண்காட்சிகள், பயிலரங்குகள், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

முக்கிய அருங்காட்சியங்கள் சிலவற்றை அறிவோம்.

சென்னை அரசு அருங்காட்சியகம்: சென்னை எழும்பூரில் 1851-ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட அரசு அருங்காட்சியகத்தில் சிற்பங்கள், தொல்லியல், நாணயவியல், இயற்கை அறிவியல், விலங்கியல் உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்த ஏராளமான பொருள்கள் வைக்கப்பட்டுள்ளன. சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் உள்ள கோட்டை அருங்காட்சியகம், வேலூர் கோட்டை அருங்காட்சியகம், கரூர் தொல்லியல் அருங்காட்சியகம், தஞ்சை கலைக்கூடம் உள்ளிட்டவற்றிலும் அரிய பொருள்கள் காட்சிப்படுத்தப்பட்டும், பராமரிக்கப்பட்டும் வருகின்றன.

கீழடி அருங்காட்சியகம்: சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்புவனத்தில் வைகை நதிக்கரையில் உள்ள கொந்தகை பகுதியில் கீழடி அருங்காட்சியகம் உள்ளது. கீழடி, அகரம், மணலூர், கொந்தகை உள்ளிட்ட பகுதிகளில் நடத்தப்பட்ட அகழாய்வுகளில் கிடைத்த ஆயிரக்கணக்கான பொருள்கள், தமிழ் பிராமி எழுத்துகள் பொறிக்கப்பட்ட மட்பாண்டங்கள், சுடுமண் பொம்மைகள், இரும்பு, செம்புப் பொருள்கள், பகடைக் காய்கள் உள்ளிட்டவை இங்குள்ளன. 2,600 ஆண்டுகளுக்கு முன்பே நகர நாகரிகம் இருந்ததற்கான செங்கல் கட்டுமானங்கள், வணிகம் நடைபெற்றதற்கான சான்றுகள், தொழில்நுட்பம், எழுத்தறிவு, மேம்பட்ட சமூக வாழ்க்கை உள்ளிட்ட தொல்பொருள்கள் சான்றாக அமைந்துள்ளன.

Story image

ANI

அகழாய்வு நடைபெற்ற இடங்கள் கீழடி திறந்தவெளி அருங்காட்சியகமாக மாற்றப்பட்டு, சில மாதங்களுக்கு முன்னர் திறந்து வைக்கப்பட்டது. இங்கு மீன் உருவம் பொறித்த உறைகிணறு, பானைகள், செங்கல் கட்டுமானம் உள்ளிட்டவை காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. சுயபடம் (செல்ஃபி) எடுக்க "கீழடி நம் தாய்மடி' என்ற வாசகம், தென்னை மரத்துடன் அமைக்கப்பட்டுள்ளது.

பொருநை அருங்காட்சியகம்: திருநெல்வேலி மாவட்டத்துக்கு உள்பட்ட ரெட்டியார்பட்டியில் உள்ள பொருநை அருங்காட்சியகத்தில் சுமார் 3,200 ஆண்டுகள் பழைமையான தாமிரபரணி நதிக்கரை நாகரிகத்தின் (பொருநை நாகரிகம்) தொன்மையை உலகுக்கு உணர்த்தும் தொல்லியல் மையமாகும். சுமார் 13 ஏக்கரில், 54,296 சதுர அடியில் பிரம்மாண்டமாகவும், கலைநயத்துடனும் உருவாக்கப்பட்டுள்ள அருங்காட்சியக வளாகத்தில் 7 கட்டடத் தொகுதிகள் அமைக்கப்பட்டுள்ளன.

உள்ளூர் கலைநயத்துவ வடிவங்களுடன் அருங்காட்சியகக் கட்டடங்கள் உள்ளன. ஆதிச்சநல்லூர், சிவகளை, கொற்கை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து எடுக்கப்பட்ட அகழாய்வுப் பொருள்கள், முதுமக்கள் தாழிகள், இரும்பு ஆயுதங்கள், மட்பாண்டங்கள், பழங்கால அணிகலன்கள் உள்ளிட்டவை காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. சிந்துவெளி நாகரிகத்துக்கும், தமிழ்நாட்டுக்கும் இடையேயான பண்பாட்டு தொடர்புகளை வெளிப்படுத்தும் ஒப்பீட்டு மாதிரிகள் இங்கு வைக்கப்பட்டுள்ளன. புதிய தொழில்நுட்பங்களுடன் 2025-ஆம் ஆண்டில் இந்த அருங்காட்சியகம் திறந்து வைக்கப்பட்டது.

புதுதில்லி தேசிய அருங்காட்சியகம்: புதுதில்லி ஜன்பத் பகுதியில் உள்ள தேசிய அருங்காட்சியகத்தில் பண்டைய நாகரிகப் பொருள்கள், சிற்பங்கள், ஓவியங்கள், கையெழுத்துப் பிரதிகள், பண்டைய நாணயங்கள் உள்ளிட்டவை வைக்கப்பட்டுள்ளன.

கொல்கத்தா அருங்காட்சியகம்: தென் கிழக்கு ஆசியாவின் மிகப் பழைமையான அருங்காட்சியகமாகக் கூறப்படும் இங்கு அரிய வகை தொல்பொருள்கள், கலைப் பொருள்கள், புதை படிவங்கள் உள்ளன.

கொண்டாப்பூர் அருங்காட்சியகம்: தெலங்கானா மாநிலத்துக்கு உள்பட்ட சங்கரெட்டி மாவட்டத்தில் கொண்டாப்பூரில் உள்ள தொல்லியல் அருங்காட்சியகம் சிறிய குன்றின் மீது அமைந்துள்ளது. இது ஹைதராபாத்தில் இருந்து சுமார் 70 கி.மீ. தொலைவில் உள்ளது. டெரகோட்டா (சுடுமண்) சிலைகள், நாணயங்கள், மணிகள், ரோமானிய வர்த்தகத் தொடர்பைக் காட்டும் நாணயங்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பழங்காலப் பொருள்கள் வைக்கப்பட்டுள்ளன. 1940-ஆம் ஆண்டுகளில் கொட்டகட்டாமேட்டில் அகழ்வாராய்ச்சி செய்யப்பட்ட சாதவாகன காலத்தைச் சேர்ந்த அரிய கலைப்பொருள்களைக் கொண்ட முக்கிய தளமாக விளங்குகிறது. இவை கி.மு. 2-ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 2-ஆம் நூற்றாண்டு வரையிலானவை.

வைஷாலி தொல்லியல் அருங்காட்சியகம்: பிகார் மாநிலத்தில் சக்ராம்தாஸில் உள்ள வைஷாலி தொல்பொருள் அருங்காட்சியகம் பல்வேறு காலங்களைச் சேர்ந்த நாணயங்கள், முத்திரைகள், டெரகோட்டா உருவங்கள், மட்பாண்டங்களைக் கொண்டவை. பௌத்த, சமண பாரம்பரியத்தை விளக்கும் சிறந்த தலமான இங்கு புத்தரின் அஸ்தி கலசம் பாதுகாக்கப்படுகிறது.

பாதாமி அருங்காட்சியகம்: கர்நாடகத்தின் பாகல்கோட் மாவட்டத்தில் உள்ள பாதாமி தொல்பொருள் அருங்காட்சியகத்தில் 6-16-ஆம் நூற்றாண்டு வரையிலான சாளுக்கிய காலச் சிற்பங்கள், கல்வெட்டுகள், கலைப் பொருள்கள், அரிய கல்வெட்டுகள், பண்டைய நாணயங்கள், பழைய கோயில்களில் இருந்து சேகரிக்கப்பட்ட சிற்பங்கள் பாதுகாக்கப்படுகின்றன. இதன் அருகே பாதாமி குடைவரை கோயில்கள் உள்ளன.

லூவ்ரே அருங்காட்சியகம்: பிரெஞ்சு மன்னர்களின் அரண்மனையாக பாரிஸில் இருந்த பகுதி அருங்காட்சியகமாக மாறியுள்ளது. பண்டைய கிரேக்கத்தின் மிகவும் பிரபலமான கி.மு. 2-ஆம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்டதாகக் கருதப்படும் வீனஸ் டி மிலோ பளிங்குச் சிற்பமும், புகழ்பெற்ற சிற்பங்களில் ஒன்றான சமோத் ரேஸின் இறக்கைகள் கொண்ட வெற்றிச் சிலையும், மோனலிசா ஓவியமும் இங்குள்ளது.

பிரிட்டிஷ் அருங்காட்சியகம்: இங்கிலாந்தின் லண்டன் நகரில் உள்ள இந்த அருங்காட்சியகத்தில் மனித வரலாறு, கலை, கலாசாரம் தொடர்புடைய எண்ணற்ற கலைப் பொருள்கள் உள்ளன.

Story image

அக்ரோபோலிஸ் அருங்காட்சியகம்: கிரீஸ் நாட்டின் ஏதென்ஸ் நகரில் உள்ள இந்த அருங்காட்சியகத்தில் கிரேக்கர்களின் வாழ்க்கை முறையை அறியும் காட்சிக் கூடங்கள், பழங்கால வழிபாட்டுத் தலங்கள், குடியிருப்புகள், அக்ரோபோலிஸ் குன்றின் மீது கண்டெடுக்கப்பட்ட கலைப்பொருள்கள், பார்த்தீனானின் தொல்பொருள்கள் உள்ளன.

ஜெம்: எகிப்து தலைநகர் கெய்ரோவுக்கு அருகில் கிசா நகரத்தில் அமைந்துள்ள ஜெம் எனப்படும் கிராண்ட் எகிப்தியன் அருங்காட்சியகம், பண்டைய எகிப்து நாகரிகத்தை கண்முன் கொண்டுவரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.