காங்கோவில் திருமண நிகழ்ச்சியில் தீவிபத்து: 22 பேர் பலி சிறப்புத் தீவிர திருத்தம் மூலம் காங்கிரஸ் வாக்குகளை அழிக்க பாஜக சதி: ரேவந்த் ரெட்டி குற்றச்சாட்டு! திண்டுக்கல் மாணவர்கள் 8 பேர் பலி - முதல்வர் விஜய் இரங்கல் கிரேக்கத்தில் வான் சாகச நிகழ்வில் ஜெட் விமானம் விபத்து! விநாயகர் சிலை- வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடுநவ. 1-க்குள் கடைகளுக்கு தமிழில் பெயர்ப் பலகை: உயர்நீதிமன்றம் உத்தரவுமீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கு: உள்ளூர் விடுமுறை குறித்து விரைவில் அறிவிப்பு - அமைச்சர் தகவல் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை பழிவாங்கும் நடவடிக்கைதான்: கே.என். நேரு

தண்ணீர் பயணம்...

கோவையில் நொய்யல் ஆறு, அதைச் சார்ந்த நீர்நிலைகளைப் பாதுகாத்தல், மக்களுக்கும் நீர்நிலைகளுக்கும் இடையிலான தொடர்பை மேம்படுத்துதல் உள்ளிட்ட பணிகளைச் செய்து வருகிறார் மணிகண்டன்.

இரா. மணிகண்டன்

Published On :6 செப்டம்பர் 2026, 4:01 am IST

கோவையில் நொய்யல் ஆறு, அதைச் சார்ந்த நீர்நிலைகளைப் பாதுகாத்தல், மக்களுக்கும் நீர்நிலைகளுக்கும் இடையிலான தொடர்பை மேம்படுத்துதல், பசுமைப் பரப்பளவை அதிகரித்தல், பல்லுயிர்ச்சூழலைப் பெருக்குதல், பொதுமக்களுக்கு சுற்றுச்சூழல் விழிப்புணர்வை மேம்படுத்துதல் உள்ளிட்ட பணிகளைச் செய்து வருகிறார் இளைஞர் இரா. மணிகண்டன்.

'கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு' வாயிலாக அவர் 10 ஆண்டுகளாக மேற்கொண்டு வரும் தனது தண்ணீர் பயணம் குறித்துக் கூறியது:

'எனது அப்பா லாரி ஓட்டுநர். கோவையில் எங்கள் வீட்டுக்கு அருகில் இருந்த கிணற்றின் நீர்மட்டம் வெகுவாகக் குறைந்தபோது எனது குடும்பத்தினர் மிகுந்த சோகத்தில் ஆழ்ந்தோம். எங்கள் வீட்டுக்குப் பக்கத்தில் இருந்த கால்வாயில் மழை பொழிந்தால், நிறைய தண்ணீர் போகும். மற்ற சமயங்களில் வறண்டிருக்கும்.

ஒருநாள் அந்தக் கால்வாயின் போக்கிலேயே நடந்து சென்றபோது, சற்று தொலைவில் ஒரு தடுப்பணையைப் பார்த்தேன். அது உடைந்து, தண்ணீரை தேக்க வழியின்றி இருந்தது. மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தவுடன், அதனை சீர் செய்தனர். இப்படியாகத் துவங்கியது எனது தண்ணீர் பயணம்.

உடனே, 'பாரத விழுதுகள்' என்ற அமைப்பைத் தொடங்கினேன். தண்ணீர் சிக்கனம், சேமிப்பு, மழைநீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் பணியில் நானும், நண்பர்களும் ஈடுபட்டோம். வீடுகளில் மழைநீர் சேகரிப்புக்கான கட்டமைப்புகளையும் உருவாக்கிக் கொடுத்தோம். மரக்கன்றுகளை நடுதல், ரத்த தான முகாம், விளையாட்டுப் போட்டிகளை நடத்தினோம். நேரு யுவ கேந்திராவின் கோவை மாவட்டத்தின் சிறந்த இளைஞர் மன்றம் என்ற விருதும் எங்களுக்குக் கிடைத்தது.

எங்கள் மன்ற உறுப்பினர்கள் பலர் வேலை நிமித்தம் பல்வேறு ஊர்களுக்கும் சென்றுவிட, அதன் பின்னர், 'கரங்கள் அறக்கட்டளை' என்ற அமைப்பை உருவாக்கினோம். மாணவர்களுக்கு தன்னம்பிக்கை, ஊக்கப் பயிற்சிகள் அளித்தல், தொழில் வழிகாட்டுதல் போன்ற சேவைகளில் ஈடுபட்டோம்.

தொடர்ந்து வறட்சி நிலவியதால், எங்கள் பகுதியில் இருந்த குறிச்சி குளம் நீரின்றி வறண்டு விட்டது. தன்னார்வலர்களை ஒன்றிணைத்து 'குறிச்சி குளங்கள் பாதுகாப்பு இயக்கம்' என்ற அமைப்பை உருவாக்கினேன். குளத்தை சுத்தம் செய்தல், நெகிழிக் கழிவுகள், வீட்டுக் குப்பைகளை அகற்றுதலில் நாங்கள் கவனம் செலுத்தினோம்.

வாட்ஸ் ஆப் குழுவால் உருவான அமைப்பு

இந்த நேரத்தில் வறட்சியின் விளைவாக ஏரிகள், நீர்நிலைகள் வறண்டு போயின. அந்த நேரத்தில், ஜல்லிக்கட்டு போராட்டத்தில் இளைஞர்கள் பெருமளவில் பங்கேற்றது என் மனதைக் கவர்ந்தது. நான் வாட்ஸ் ஆப் குழுவை ஏற்படுத்தி, கோவையின் வறட்சி பற்றி கவனம் ஈர்த்தேன். 2017-ஆம் ஆண்டு பிப்ரவரி 5-இல் பேரூர் பெரிய குளக்கரையில் அனைவரும் ஒன்று திரண்டோம். அப்போது உருவானதுதான் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு.

தன்னார்வலர்களின் உடலுழைப்பு, பிற அமைப்புகளின் நிதியுதவி போன்றவற்றின் பயனாக பத்து ஜே.சி.பி.களின் உதவியோடு 265 ஏக்கர் பரப்பளவுடைய குளத்தில் இருந்த கருவேல மரங்களை முழுமையாக அகற்றினோம். குடிமராமத்து திட்டத்தின்படி, அரசு குளத்தில் இருந்து மண்ணை எடுக்க குளம் ஆழமாகியது. 2018-இல் அந்தக் குளம் தண்ணீரால் நிரம்பியது.

கரோனா காலத்தைத் தவிர்த்து, 450 வாரங்கள் தொடர்ச்சியான களப் பணியில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் நீர்நிலைகளைப் பாதுகாத்தல், சீரமைத்தல், நெகிழிகளை அகற்றுதல், பசுமைப் பரப்பளைவை அதிகரித்தல் போன்ற பணிகளைச் செய்துவருகிறோம். கடந்த பத்து ஆண்டுகளில் நொய்யல் ஆறு, அதனை நம்பியுள்ள பேரூர் பெரியகுளம், செங்குளம், வெள்ளலூர் குளம், சுண்டக்காமுத்தூர் வரலாற்று சிறப்புமிக்க கிணறு, குட்டைகள், நீர்வழித்தடங்கள், தடுப்பணைகள், குன்னத்தூர் குளம் உள்ளிட்டவற்றில் பல பணிகளைச் செய்துள்ளோம்.

Story image

தூர்வாரப்பட்ட 15 குட்டைகள்

கோவையில் 15 குட்டைகள் தூர்வாரப்பட்டு, அதன் பயனாக 200 கோடி லிட்டர் மழைநீர் சேமிப்புத் திறன் அதிகரித்துள்ளது. நீர்நிலைகளில் இருந்து 250 டன் நெகிழிக் கழிவுகள் தன்னார்வலர்களால் அகற்றப்பட்டுள்ளன. மொத்தம் 750 ஏக்கர் பரப்பளவு கொண்ட பல்வேறு குளங்களிலிருந்து சீமைக்கருவேல முள்புதர்கள், கேடு விளைவிக்கும் தாவரங்கள் அகற்றப்பட்டுள்ளன. 21 கி.மீ. நீளத்துக்கு மூன்று முக்கிய கால்வாய்கள் தூர்வாரப்பட்டு, சமன் செய்யப்பட்டுள்ளன. வெள்ளலூர் குளம் (85.9 ஏக்கர்), பேரூர் பெரிய குளம் (265 ஏக்கர்), காட்டம்பட்டி குளம் (160 ஏக்கர்) என மூன்று குளங்கள் சில ஆண்டுகளுக்குப் பிறகு நிரம்பி வழிந்தன. செங்குளத்தில் 500 மீட்டர் நீளத்துக்கு நெகிழிக் குப்பைகளைக் கொண்டே கரை அமைக்கப்பட்டது.

கோயம்புத்தூரில் நிலத்தடி நீர் மட்டத்தை அதிகரிக்கும் விதமாக 40-க்கும் மேற்பட்ட நிலத்தடி நீர் செறிவூட்டும் கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. ஆலாந்துறையில் அண்ணன் தம்பி பள்ளத்தில் ஐந்து தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளன. பசுமை பரப்பளவை அதிகரிக்க ஐம்பது ஆயிரத்துக்கும் அதிகமான மரக்கன்றுகளை நட்டிருக்கிறோம்.

நீர்நிலைகள், வனப்பகுதிகளில் ஒன்றரை லட்சத்துக்கும் அதிகமான பனை விதைகளை ஊன்றி இருக்கிறோம்.

கோவை மாநகரின் பொது இடங்கள், காட்டம்பட்டி குளக்கரை, வெள்ளலூர் குளக்கரையில் மியாவாக்கி முறையில் நாட்டு மரக் கன்றுகள், மூலிகைச் செடிகள், பூச்செடிகள் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன.

உலக தண்ணீர் தினம், உலக சுற்றுச்சூழல் தினம் உலக மண் தினம், திருமணம், பிறந்தநாள் விழாக்களின்போது 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரக்கன்றுகள், துளசி போன்ற மூலிகைச் செடிகளை பொதுமக்களுக்கு விநியோகித்தோம்.

எங்களது பசுமை, நீர்வள மேம்பாட்டுப் பணியைப் பாராட்டி மத்திய அரசு வழங்கிய ரூ.2 லட்சம் ரூபாய் பரிசை பல்லுயிர் பெருக்கம், மியாவாக்கி அடர்வனம் அமைக்க முழுவதுமாகப் பயன்படுத்தினோம். காளப்பட்டியில் தமிழ் சங்க இலக்கியங்களில் குறிப்பிட்டுள்ள மரங்கள், செடிகள், தமிழர்கள் வகுத்த ஐவகை நிலங்கள் (குறிஞ்சி, முல்லை. மருதம், நெய்தல், பாலை) கூடிய சங்க இலக்கிய பூங்கா வடிவமைக்கப்படுள்ளது.

Story image

வெள்ளலூர் ஏரியில் அமைந்த பட்டாம்பூச்சி பூங்கா

வெள்ளலூர் குளம் பன்னிரண்டு ஆண்டுகளாக தண்ணீர் இல்லாமல் வறண்டு கிடந்தது. முதலில் ஒரு தனியார் நிறுவன பங்களிப்புடன் குளத்தில் இருந்த சீமைக் கருவேலம் மரங்களை அகற்றினோம். வெள்ளலூர் அணைக்கட்டிலிருந்து நீர் வெளியேறும் வழிகள் பல ஆண்டுகளாக கழிவுகளால் அடைபட்டுக் கிடந்தன.

தன்னார்வலர்கள் மூன்று ஞாயிற்றுக்கிழமைகளில் வேலை செய்து, அவற்றை முற்றிலுமாக சரி செய்தார்கள். பின்னர், மாவட்ட ஆட்சியரிடம் மனுவை அளித்து, அணையிலிருந்து குளத்துக்குத் தண்ணீர் வரும் ஆறரை கி.மீ. தூரக் கால்வாயில் இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றினோம். பின்னர், வாய்க்காலை நாங்களே தூர்வாரினோம். இதனால் 2018-ஆம் ஆண்டு ஆகஸ்டில் பெய்த மழையில் குளம் நிரம்பியது.

அதன்பின் குளக்கரையில் ஆயிரத்துக்கும் அதிகமான மரக்கன்றுகளை நட்டோம். இன்று அந்தப் பசுமையான குளக்கரையில் ஏராளமான பறவைகள் வருகின்றன. அங்கே ஒரு பட்டாம்பூச்சிப் பூங்காவும் அமைத்துள்ளோம். இங்கு ஞாயிற்றுக்கிழமைகளில் பொதுமக்கள் அனுமதிக்கப்படுகிறார்கள்.

இதர நாள்களில் மாணவர்கள், தனியார் நிறுவனத்தினர், ஆராய்ச்சியாளர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். அவர்களுக்கு இங்கு சுற்றுச்சூழல் விழிப்புணர்வு, நீர்நிலைகளையும் மரங்களையும், பல்லுயிர்களையும் பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வு வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வருகை தந்துள்ளனர்.

எங்கள் பணிகளைப் பாராட்டி 2019, 2025- ஆம் ஆண்டுகளில் மத்திய அரசின் நீர்வளத் துறை, தமிழ்நாடு அரசு, கோவை மாவட்ட நிர்வாகம் வழங்கிய விருதுகளையும், திருவாவடுதுறை ஆதீனம், ஜீ தொலைக்காட்சி, சிறுவாணி வாசகர் மையம் உள்ளிட்ட அமைப்புகள் வழங்கிய விருதுகளையும் பெற்றுள்ளோம்' என்கிறார் மணிகண்டன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.