டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

முப்பால் சேறு

இலக்கியத்தில், சேறு பற்றிய பல செய்திகள் விரவிக்கிடக்கின்றன. சேறு என்றதுமே நமக்குத் தண்ணீரும் மண்ணும் கலந்து உருவான ஒரு கலவைதான் மனதில் தோன்றும். தற்காலத் தமிழ் அகராதி கூடச் சேறு என்பதற்கு நீரால் குழம்

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 12:38 pm

குடந்தை வய்.மு. கும்பலிங்கம்

இலக்கியத்தில், சேறு பற்றிய பல செய்திகள் விரவிக்கிடக்கின்றன. சேறு என்றதுமே நமக்குத் தண்ணீரும் மண்ணும் கலந்து உருவான ஒரு கலவைதான் மனதில் தோன்றும். தற்காலத் தமிழ் அகராதி கூடச் சேறு என்பதற்கு நீரால் குழம்பிக் கொழகொழப்பாக இருக்கும் மண் என்றே பொருள் கூறுகிறது. ஆனால், ஒரு திரவமும் ஒரு திடப்பொருளும் கலந்து உண்டாகின்ற கலவையே சேறு என்பதை நாம் உணர வேண்டும். திடப்பொருள் என்பது சிறு துகள்களாகக் கூட அமையலாம். திரவம் என்பது நீர் மட்டுமன்றி கஞ்சி, குருதி, பால் போன்றவையாகவும் அமையலாம்.

திருப்பாவை பன்னிரண்டாம் பாசுரத்தில்,

""கனைத்திளம் கற்றெருமை கன்றுக் கிரங்கி

நினைத்து முலைவழியே நின்றுபால் சோர

நனைத்தில்லம் சேறாக்கும் நற்செல்வன் தங்காய்''

என்று ஆண்டாள் பாடியுள்ளார். இப்பாடலில் ஓர் அழகான காட்சி வருணிக்கப்படுகிறது.

இளங்கன்றை ஈன்ற எருமைகளிடமிருந்து பால் கறக்கவில்லை. எனவே, அவை கனைத்துக் கொண்டு தம் கன்றுகளை மனத்தில் எண்ணி இரங்குகின்றன. அதனால் அவற்றின் மடியிலிருந்து பால் சிந்துகிறது. அப்படிச் சிந்திய பாலால் மண்ணானது சேறாகிவிட அதை மிதித்து மிதித்து உள்ளே செல்வதால் இல்லமும் சேறாகிவிடுகிறது. இவ்வாறு இப்பாசுரம் பாலும் மண்ணும் கலந்த சேற்றைக் காட்டுகிறது.

பால் என்பதற்குப் பிரிவு என்னும் பொருள் உண்டு. வள்ளுவர் திருக்குறளை அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் என்று பகுத்துள்ளார்.

சங்க காலத்தில் பசிப்பிணி போக்குதல் தலையாய அறங்களுள் ஒன்றாகக் கருதப்பட்டது. வேற்றூரிலிருந்து வரும் மக்கள் தங்கவும், அவர்களுக்கு உணவு வழங்கவும் பல தருமச் சத்திரங்கள் இருந்ததாகப் பட்டினப்பாலை கூறுகிறது. அந்நூலை எழுதிய உருத்திரங்கண்ணனார், காவிரிப்பூம்பட்டினத்தின் வீதிகள் எவ்வாறு இருந்தன என்பதைக் காட்டுகிறார்.

அப்பட்டினத்தின் சத்திரங்களில் சோறு பொங்குகிறார்கள். அப்போது வடிக்கப்படும் கஞ்சி வீதிகளில் ஆறுபோல ஓடிவருகிறது. அக்கஞ்சி மண்ணில் கலந்து சேறானது. சூரியனின் வெயில் பட்டுப்பட்டு அது காய்ந்து விடுகிறது. காய்ந்துபோன அத்தெருக்களில் தேர்கள் ஓடுகின்றன. அதனால் படிந்த அச்சேற்றிலிருந்து வெண் துகள்கள் கிளம்பி உயரமான கோவில்கள் மீது படிந்தன.

""சோறு ஆக்கிய கொழுங்கஞ்சி

ஆறு போலப் பரந்தொழுகி

ஏறு பொரச் சேறாகித்

தேரோட்டத் துகள் கெழும்

நீராடிய களிறு போல

வேறுபட்ட வினையோவத்து

வெண்கோவில் மாசூட்டும்''

என்பன அப்பாடல் அடிகளாகும்.

பட்டினப்பாலை அறம் சார்ந்த சேற்றைக் காட்டுகிறது என்றால், ஒரு தனிப்பாடலில் மறம் சார்ந்த சேற்றைக் காணலாம். கல்வி, செல்வம், வீரம் ஆகியவை பொருட்பாலிலே அடங்குவதாகக் கொள்ளலாம்.

÷ஏகம்பவாணன் எனும் பெயர் கொண்ட சிற்றரசன் வேளாண் மரபில் வந்தவனாவான். அவனது எல்லையற்ற புகழ்கண்டு மூவேந்தர்க்கும் அவன் மீது பொறாமை இருந்தது. ஒருமுறை ஏகம்பவாணனைக் காண மூவேந்தர்கள் சென்றபோது அவன் மனைவி, ஏகம்பவாணன் பணி நிமித்தமாக வெளியில் சென்றிருப்பதாகக் கூறினாள்.

ஏகம்பவாணனை எள்ளி நகையாடுவதாக நினைத்த அவர்கள், ""ஓ! அவர் முடி நடப் போயிருக்கிறாரா?'' என்று அவனது வேளாண் தொழிலைக்காட்டி நாற்றுமுடி நடப்போயுள்ளாரா எனும் பொருளில் கேலி பேசினர். அதற்கு மறுமொழியாக அவன் மனைவி ஒரு பாடல் பாடினாள்.

""சேனை தழையாக்கிச் செங்குருதி நீர்தேக்கி

ஆனை மிதித்த அடிச்சேற்றில் - மானபரன்

மாவேந்தன் ஏகம்ப வாணன் பறித்துநட்டான்

மூவேந்தர் தங்கள் முடி''

""ஆமாம்! என் கணவர் ஏகம்பவாணன் முடி நடத்தான் போயிருக்கிறார். படை எனும் தழைபோட்டு அதில் ரத்தம் எனும் நீரைத் தேக்கி, யானைகளை விட்டு மிதித்த சேற்றில் மூவேந்தராகிய நீங்கள் தலையில் அணிந்துள்ள முடிகளை நடச்சென்றுள்ளார்'' எனும் பொருளில் தன் தலைவனின் புகழை விளம்பிய இப்பாடலில் பொருட்பாலுக்கே உரிய வீரத்தால் விளையும் சேற்றைக் காண்கிறோம்.

முத்தொள்ளாயிரத்தில், பாண்டியனின் நாட்டில் உள்ள செல்வ வளம் காட்டும் ஒரு பாடலில் காமத்துப்பால் தொடர்பு உடைய குங்குமமும் சந்தனமும் கலந்த சேற்றைப் பார்க்கலாம்.



""மைந்தரோடு ஊடி மகளிர் திமிர்ந்திட்ட

குங்கும ஈர்ஞ்சாந்தின் சேறிழுக்கி - எங்கும்

தடுமாற லாகிய தன்மைத்தே தென்னன்

நெடுமாடக் கூடல் அகம்''

பாண்டியனுடைய மதுரை நகரில் வீதிகள், அவ்வழியே செல்வோரை வழுக்கித் தடுமாறச் செய்கின்றனவாம். ஏனெனில் இரவில் மேல் மாடங்களில் இருந்து ஆடவருடன் ஊடிய மகளிர் சாளரங்கள் வழியாக எறிந்த குங்குமத்துடன் கூடிய சந்தனத்தாலாகிய சேறு சிதறிக்கிடக்கிறதாம்.

இவ்வாறு இலக்கியம் எனும் ஆழ்கடலில் முக்குளித்தால் அரிய, பெரும் முத்துகள் கிடைக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.