மாதம் ஒரு (இலக்கிய) விவாதம்! - "கவிதை' தமிழ்ச் சொல்லே!

"பா' என்றும் "கவி' என்றும் சுட்டப்படும் "கவிதை', வடமொழிச் சொல்லா இல்லை தமிழ்ச் சொல்தானா? "பா' என்றும் "கவி' என்றும் சுட்டப்படும் கவிதை, தமிழ்ச் சொல்லே. கருத்தைக் கவரும் ஓசை ஒழுங்கும் பொருட்சிறப்பும் ஒ

"பா' என்றும் "கவி' என்றும் சுட்டப்படும் "கவிதை',

வடமொழிச் சொல்லா இல்லை தமிழ்ச் சொல்தானா?

"பா' என்றும் "கவி' என்றும் சுட்டப்படும் கவிதை, தமிழ்ச் சொல்லே. கருத்தைக் கவரும் ஓசை ஒழுங்கும் பொருட்சிறப்பும் ஒருங்கே கொண்டது கவிதை, இந்த அடிப்படையைப் பாவானாலும், கவியானாலும் ஒருங்கே கொண்டதன் மறு வாசிப்புதான் கவிதை.

வனப்பு என்றால் அழகு, அந்தப் பொருளுணர்வில் வனப்புடையவள் "வனிதை' என்பதுபோல மனதை ஓசை ஒழுங்கும், கருத்துப் பொருளும் கவ்வுவதால் "பா' அல்லது "கவி'க்குக் கவிதை எனப் பெயர் அமைந்தது.

ஓசையும் கருத்தும் ஒருங்கே கவர்வது எவ்வாறென்றால், உருண்டையாக அல்லது செவ்வகமாக உள்ள இனிப்புப் பண்டத்தை (லட்டு அல்லது மைசூர்பாகு) வாயில் போட்டுச் சுவைக்கும்போது அவற்றின் வடிவம் இனிப்புடன் கரைதல் போன்றது.

"பா' என்பது பாட்டைக் குறிக்கும். "பாவெனப் படுவது நின் பாட்டு' என, நால்வர் நான்மணி மாலையில் "திருவாசகத்தை' பா - பாட்டு என்கிறார் சிவப்பிரகாசர்.

புவியினுக் கணியாய் ஆன்ற

பொருள் தந்து புலத்திற் றாகி

அவியகத் துறைகள் தாங்கி

ஐந்திணை நெறிய ளாவிச்

சவியுறத் தெளிந்து தண்ணென்

றொழுக்கமும் தழுவிச் சான்றோர்

கவியெனக் கிடந்த கோதா

வரியினை வீரர் கண்டார்

எனக் கம்பர் கவிதையைக் "கவி' என்கிறார். எனவே, பாவும், கவியும் கவிதையைக் குறிக்கும் செம்மொழிப் பதங்கள் என்பதால் கவிதை தமிழ்ச் சொல்லேயாகும்.

மேலும், இலக்கண நூலான நன்னூலின் பதவியல் என்ற பிரிவு கூறும், "செய் என் வெல் வினைப் பகாபதங்கள் பலவற்றுள்' (நூ-10) "வெü, வவ்' என்ற இரு சொற்கள் கவர்தல் என்ற ஒரே பொருளைத் தருவதாகக் கூறப்பட்டுள்ளன. இந்த இலக்கண நூற்பாவுடன் இருபத்து மூன்று சொற்கள் கூறப்பட்டாலும், உரை எழுதியவர்கள் இச்சொற்களைப்போல் வரும் பிறவற்றையும் பொருத்தி உணரலாம் என்றதால், "கெü, கவ்' என்ற இருசொற்கள் "கவர்தல்' என்ற ஒரு பொருளைத் தருவதாக உள்ளன.

கெüவுவது அல்லது கவ்வுவது என்றால், மனதைக் கவர்வது (ஈர்ப்பது) என்று பொருள்படும். அந்த வகையில், மனதை ஒருவகை ஓசை ஒழுங்காலும் கருத்துச் சிறப்பாலும் கவ்வுவதைக் (ஈர்ப்பதை) கவிதை என இயல்பாக அமைவதால் கவிதை தமிழ்ச் சொல்லே!

"பா' என்ற சொல், பரந்துபட்ட ஓசையைச் சிறப்பாகக் குறிக்கும். எந்தப் பாவுக்கும் ஓசை ஒழுங்கு உண்டு. ஓசை ஒழுங்கு மட்டுமே பாவாகாது. சிறந்த பொருட்செறிவும் வேண்டும். எனவே, மனதை ஈர்க்கும் (கவ்வும்) இயல்புடையது கவிதை என்பதால் கவிதை தமிழ்ச்சொல்லே!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com