
செட்டிநாட்டுச் செந்தமிழ் ஆழி - கவியரசர் கண்ணதாசன்!
கவிஞர் கண்ணதாசன் பிறந்த நூற்றாண்டுத் தொடக்கத்தையொட்டி...

கண்ணதாசன்
தமிழகத்தில் கல்வியிலும் வணிகத்திலும், கொடையிலும் ஈடு இணையற்று விளங்குவது செட்டிநாடு. அப்பகுதியில் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூருக்கு அருகே உள்ளது சிறுகூடற்பட்டி. அவ்வூரில் வாழ்ந்த பெருமைமிகு சாத்தப்ப செட்டியார் - விசாலாட்சி இணையரின் அருந்தவப் பயனாய் 1928-ஆம் ஆண்டு ஜூன் 24-ஆம் தேதி 8-வது பிள்ளையாகப் பிறந்தவர்தான் "முத்தையா' எனும் இயற்பெயர் கொண்ட கவிஞர் கண்ணதாசன்.
பன்மொழிப் புலவர் கா.அப்பாதுரையாரிடம் பாடம் கேட்கும் நற்பேறு பெற்றார். சின்னஞ்சிறு வயதிலிருந்தே கவிதை இயற்றுவதிலும், பாடுவதிலும் பேராவல் கொண்டார். கம்பன் அடிப்பொடி சா.கணேசனின் உறவினரான பழ.தெய்வானை ஆச்சி என்பவர், இவரை வளர்ப்பு மகனாக விரும்பி ஏற்றுக்கொண்டார். அவ்வன்னை இவருக்கு "நாராயணன்' என்னும் பெயர் சூட்டி மகிழ்ந்தார்.
சிறுகூடற்பட்டியில் கோயில் கொண்டுள்ள மலையரசி அம்மன் அருளால், அதன் அருகில் அமைந்துள்ள பாப்பாத்தி ஊருணிக் கரையிலேதான் அவர்தம் கன்னிக்கவிதை மலர்ந்தது. கலைத்துறையில் கால் பதிக்கும் விருப்பத்தோடு சென்னை வந்தார். ஜூபிடர் பிக்சர்சின் "கன்னியின் காதலி' படத்தில் "கலங்காதிரு மனமே' எனும் இவரது முதல் பாடல் ஒலித்தது. பின், சேலம் மாடர்ன் தியேட்டர்சில் மு. கருணாநிதியோடு தம் கலைப்பணியைத் தொடரலானார்.
1949-ஆம் ஆண்டு பொள்ளாச்சியில் திராவிடர் கழகப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அம்மேடையில் கருணாநிதி இவருக்குக் "கவிஞர்' பட்டம் சூட்டியதோடு, அவரது கன்னிச் சொற்பொழிவையும் அரங்கேற்றினார்.
1953 ஜூலை 15-ஆம் தேதி கருணாநிதியோடு இணைந்து கல்லக்குடியில் நடைபெற்ற மும்முனைப் போராட்டத்தில் மூன்றாவது அணிக்குத் தலைமை ஏற்று, அதன் காரணமாக சிறையில் அடைக்கப்பட்டார்.
அரசியலிலும் கலைத்துறையிலும் பெரும் செல்வாக்கு மிக்கோராய் இருந்தும், 1957-ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் தம் சொந்தத் தொகுதியான "திருக்கோஷ்டியூரில்' டெபாசிட் (காப்புத்தொகை) இழந்து தோல்வியைத் தழுவியது விந்தையிலும் விந்தை. இளமையில் காங்கிரஸில் கால்பதித்த இவர், திராவிடர் கழகம், திமுக, தமிழ் தேசியக் கட்சி, ஸ்தாபன காங்கிரஸ், இந்திரா காங்கிரஸ் ஆகிய கட்சிகளில் இருந்தார்.
கர்ம வீரர் காமராஜ் மீது அளப்பரிய அன்பும், மரியாதையும் கொண்டொழுகியவர். அதன் பொருட்டு காமராஜைப் பற்றித் திரைப்படம் எடுக்க ஆயத்தமானார். படப்பிடிப்பும் தொடங்கியது. எனினும், ஏனோ அப்படம் தடைப்பட்டது.
ஒரு சமயம் சென்னை ஆபட்ஸ்பரி மாளிகையில் கண்ணதாசனால் தமக்கு ஆங்கிலத்தில் அளிக்கப்பட்ட வரவேற்பை நேருஜி பெரிதும் ரசித்துப் புளகாங்கிதமுற்றார்.விசுவநாதன் - இராமமூர்த்தி ஆகிய இசை மேதைகளுக்கு "மெல்லிசை மன்னர்' பட்டம் இவரால் சூட்டப்பட்டது. இவர் புனைந்த 1000-க்கும் மேற்பட்ட பாடல்களுக்கு விசுவநாதன் இசையமைத்து, இவர் தம் புகழை ஓங்கச் செய்தார்.
இவர் அண்ணாவோடு "சந்திரோதயம்' நாடகத்தில் ஆசிரியர் வேடம் புனைந்து தம் நடிப்பாற்றலை நாடறியச் செய்தார். இவர் நடித்த "கோணிப்புளுகன் கோயபல்ஸ்', உன்னைத்தான் தம்பி, டாக்டர் சம்பத், நான் ராஜாவானால், நகரத்தந்தை, நாரத விஜயம்' ஆகிய நாடகங்கள் இவரைப் புகழின் உச்சிக்கே கொண்டுசென்றன. பராசக்தி, ரத்தத் திலகம், கறுப்புப் பணம், சூரியகாந்தி, அபூர்வ ராகங்கள், வேலும் மயிலும் துணை ஆகிய படங்களில் நடித்துப் பெயரும், புகழும் எய்தினார். இவர் பாடல் ஆசிரியராக மட்டுமன்றி, கதை வசனம் தீட்டியதோடு, படத் தயாரிப்பாளராகவும் செயல்பட்டார்.
இவரது சில படங்கள் வெற்றி கண்டபோதிலும் பல படங்கள் தோல்வியைத் தழுவின.
1954-இல் இவரின் முதல் நூலான "ஈழத்து ராணி' எனும் சிறுகதைத் தொகுதி வாசகர் வட்டத்தில் அபார வரவேற்பைப் பெற்றது. நாத்திகவாதியாக விளங்கியபோது, இவர் விதைத்த கருத்துகள் அனைத்தும் புரட்சிகரமான சிந்தனைகளைச் சமுதாயத்திலே துளிர்க்கச் செய்தன. ஆனால், இவர் ஆத்திகவாதியாகப் புனர்ஜென்மம் எடுத்த பின்னர், இவர் எழுதிய "அர்த்தமுள்ள இந்துமதம்' (10 பாகங்கள்) நேர்மாறான ஆன்மிக உணர்ச்சிகளைக் கிளர்ச்சியுறச் செய்தது.
மத நல்லிணக்கச் சிந்தனையோடு இவரால் படைக்கப்பட்ட "இயேசு காவியம்' இலக்கியவானில் இவரின் புகழை விண்ணைத் தொடவைத்தது. இவருடைய நாவல்கள், உரைநூல்கள், வாழ்வியல் நூல்கள், வரலாற்று நூல்கள், தத்துவப் பாடல்கள் ஏராளம், ஏராளம்...
1968-ஆம் ஆண்டு "சிறந்த பாடலாசிரியர்' என்னும் விருது (குழந்தைக்காக) மத்திய அரசாலும், அதே ஆண்டு (லெட்சுமி கல்யாணம்) மாநில அரசாலும் வழங்கப்பட்டது. 1971-இல் "கலைமாமணி' விருதும் கிட்டியது. இவருடைய கவித்துவத்தைப் பாராட்டும் விதமாக அன்றைய தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர். இவரை 1978-இல் "அரசவைக் கவிஞராக' கொலுவீற்றிருக்கச் செய்து அழகு பார்த்தார். 1979-இல் "சேரமான் காதலி' என்னும் நூலுக்கு "சாகித்ய அகாதெமி' விருதும் அவரை வந்தெய்தியது.
பத்திரிகைத் துறையிலும் தம்மை அர்ப்பணித்துக் கொண்டார். அதன் பயனாய் திருமகள், மேதாவி, சண்டமாருதம், திரைஒலி ஆகிய இதழ்களுக்கு ஆசிரியராக இருந்து தமிழ் வளர்ச்சிக்கு அரும்பாடுபட்டார். தென்றல், முல்லை, தென்றல் திரை ஆகிய பத்திரிகைகளுக்கும் இவரே உரிமையாளர். மேலும், "கண்ணதாசன்' எனும் இலக்கிய இதழும், பதிப்பகமும் நிறுவி அன்னைத் தமிழுக்கு அணி சேர்த்தார்.
தம் 54-ஆம் வயதில், 1981-ஆம் ஆண்டு அக்டோபர் 17-ஆம் தேதி விண்ணுலகு ஏகினார். மாநில அரசால் சென்னையில் உருவாக்கப்பட்ட கண்ணதாசன் சிலை, கண்ணதாசன் சாலை, கண்ணதாசன் நகர் ஆகியவை இன்றளவும் இவரை நினைவுகூர்கின்றன. இவரது கலைச் சேவையையும், தமிழ்த் தொண்டையும் மக்கள் என்றும் நினைவில் கொள்ளுமாறு தமிழக அரசு 21.10.1992-இல் இவருக்குக் காரைக்குடியில் மணிமண்டபம் அமைத்துச் சிறப்பித்தது. மத்திய அரசும் 2004-இல் சிறப்பு அஞ்சல் தலை வெளியிட்டு இவரது பெருமையை உலகறியச் செய்தது.
சிறுகூடற்பட்டியில் உள்ள இவரது இல்லத்தை "அரசு நினைவுச் சின்னமாக்கி' கண்ணதாசனுக்கு அழியாப் புகழ்சேர்க்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே கண்ணதாசன் பாடல்களுக்கு அடிமையானவர்களின் வேண்டுகோள்.
"நான் நிரந்தரமானவன் அழிவதில்லை; எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை'' என்ற இந்தக் கவிஞன் பாடிய தாரக மந்திரம் காலத்தால் அழியாதது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

முற்றுப் பெறாமல் முடிவுக்கு வந்த கண்ணதாசனின் கடைசி கட்டுரைத் தொடர்! நூற்றாண்டுத் தொடர் - 12

ரூ. 125 சம்பளத்தில் அன்றிருந்த நிம்மதி இன்று இல்லை! கவிஞர் கண்ணதாசனின் கட்டுரைத் தொடர்! - 11





