வறுமையின் கொடுமை!

பத்துப்பாட்டு நூல்களுள் மூன்றாவதாக அமைந்த சிறுபாணாற்றுப்படை ஓர் ஆற்றுப்படை இலக்கியம். 269 அடிகளைக் கொண்ட நெடும்பாடல். இது ஓய்மாநாட்டு நல்லிக்கோடனைப் புகழ்ந்து இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் எனும் புலவரால் பாடப்பட்டது.
வறுமையின் கொடுமை!

பத்துப்பாட்டு நூல்களுள் மூன்றாவதாக அமைந்த சிறுபாணாற்றுப்படை ஓர் ஆற்றுப்படை இலக்கியம். 269 அடிகளைக் கொண்ட நெடும்பாடல். இது ஓய்மாநாட்டு நல்லிக்கோடனைப் புகழ்ந்து இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் எனும் புலவரால் பாடப்பட்டது.

ஆற்றுப்படையின் தலையாய மாந்தராகிய ஆடி மகிழ்விக்கும் கூத்தரும், பாடிப் பரவசப்படுத்தும் பாணரும், இசைக் கருவியின் மூலம் இன்பமூட்டும் பொருநரும் விறலியும் ஆகிய நாற்பாலரும், அரசர்களையோ, வள்ளல்களையோ பாடிப்புகழ்ந்து தாம் பெற்றுவந்த பெருஞ் செல்வத்தை, எதிர்வந்த தம்போன்ற வறிய கலைஞனும் பெறவேண்டும் என அவருக்கு அறிவுறுத்தி ஆற்றுப்படுத்துவதே ஆற்றுப்படை இலக்கியமாகும்.

இப்பாடலில், "செங்கோட்டியாழ்' என்னும் சீறியாழ் (சிறிய யாழ்) வாசிக்கும் யாழ்ப்பாணர் "சிறுபாணர்' என அழைக்கப்பட்டனர். சிறுபாணாற்றுப்படையில் பாணனது இல்லத்தில் உறையும் வறுமையின் கொடுமையை நல்லூர் நத்தத்தனார் ஓர் அழகிய ஓவியமாகக் காட்சிப்படுத்தியுள்ளார்.

""..... ....... இந்நாள்

திறவாக் கண்ண சாய்செவிக் குருளை

கறவாப் பால்முலை கவர்தல் நோனாது

புனிற்றுநாய் குரைக்கும் புல்லென் அட்டில்

காழ்சோர் முதுசுவர்க் கணச்சிதல் அரித்த

பூமி பூத்த புழற்கா ளாம்பி

ஓங்குபசி உழந்த ஒடுங்குநுண் மருங்குல்

வளைக்கைக் கிணைமகள் வள்ளுகிர்க் குறைத்த

குப்பை வேளை உப்பிலி வெந்ததை

மடவோர் காட்சி நாணிக் கடையடைத்து

இரும்பேர் ஒக்கலொடு ஒருங்குடன் மிசையும்

அழிபசி வருத்தம் வீடப்பொழிகவுள்

தறுகண் பூட்கைத் தயங்குமணி மருங்கின்

சிறுகண் யானையொடு பெருந்தேர் எய்தி

யாமவன் நின்றும் வருதும்...'' (அடி.129-143)

"பிறந்து சில நாள்களேயான திறவாத கண்களை உடைய, வளைந்த செவிகளை உடைய நாய்க்குட்டி தன் தாயின் கறவாப் பால் முலையை இழுத்து பாலுண்ண முயற்சி செய்கிறது. ஆனால், ஈன்றணிமை நீங்காத தாய் நாய்க்கு உணவின்றி பால் சுரக்காததால் வலிதாங்க முடியாமல் வேதனையோடு குரைக்கிறது. கூரை கழிகள் கட்டவிழ்ந்து வீழ்கின்ற சுவரை உடைய அடுக்களையில் கூட்டமான கரையான் அரித்து ஈரமான புழுதியில் காளான்கள் பூத்துக்கிடந்து, அடுக்களையைப் பொலிவிழக்கச்செய்து கொண்டிருக்கிறது. பசியால் வாடி இளைத்த பாணன் மனைவி, ஒடுங்கிய இடையினையும் மெலிந்த கைகளையும் பெற்றிருக்கிறாள். "குப்பை' என்று ஒதுக்கப்பட்ட வேளைக் கீரையை தன் பெரிய நகத்தால் கிள்ளி, உப்புக்கும் வழியில்லாததால், கீரையை உப்பில்லாமல் வேகவைத்து, "வறுமையுறுதல் இயல்பு என்றுணராத அறிவற்றவர்கள் இதைக் காணக்கூடாது' என்று தன் வீட்டின் தலைவாயிலை மூடி, பசியால் வருந்தும் தம் சுற்றத்துடன் முழுதும் உண்பர்.

மானம், குலம், கல்வி, வண்மை, அறிவுடைமை, தானம், தவம், உயர்ச்சி, தாளாண்மை, காமம் ஆகிய பத்தையும் அழிக்கும் பசி என்னும் பிணி போகுமாறு நல்லியக்கோடன் யானையும் தேரும் தர, யாம் அவற்றைப்பெற்று வந்துகொண்டிருக்கிறோம். நீங்களும் அவன்பால் சென்று உங்கள் வறுமையைப் போக்கிக் கொள்ளுங்கள்' என்று ஆற்றுப்படுத்துவதன் மூலம் நல்லியக்கோடனின் ஈகைத்திறத்தைப் போற்றி, வறுமையின் கொடுமையைக் கண்முன் நிறுத்துகிறார் புலவர்.

பசி, பிணி, பகை இவையின்றி இருப்பதே நல்ல நாடு (குறள்.734) என்கிறார் வள்ளுவர். இம்மூன்றும் இல்லாத நாடு எது? என்பதே பலரும் கேட்கும் கேள்வி. ஆனால், சங்க காலத்தில் பசிக்கொடுமையும் இருந்தது; அப்பசி என்னும் பிணியைப் போக்கும் மருத்துவராக அக்கால அரசர்களும் இருந்திருக்கிறார்கள் என்பதே ஆற்றுப்படை இலக்கியத்தின் தனிச்சிறப்பாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com