தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம் வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

வாழ்த்தொலி கேட்டவள் யார்?

வரதராஜபிள்ளை இப்பாட்டிற்கு, ""ஒளி பொருந்திய நீண்ட கண்களையுடைய பெண்ணே, முதலும் முடிவுமில்லாத அரிய பெரிய சோதிப்பிழம்பான இறைவனை நாங்கள் பாடுவதைக் கேட்டும் உறங்குகின்றனையோ?

News image
Updated On :5 ஜனவரி 2014, 1:00 am

""ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ்

சோதியை யாம்பாடக் கேட்டேயும் வாள்தடங்கண்

மாதே வளருதியோ வன்செவியோ நின்செவிதான்

மாதேவன் வார்கழல்கள் வாழ்த்திய வாழ்த்தொலிபோய்

வீதிவாய்க் கேட்டலுமே விம்மிவிம்மி மெய்ம்மறந்து

போதார் அமளியின்மேல் நின்றும் புரண்டிங்ஙன்

ஏதேனும் ஆகாள் கிடந்தாள்என் னேஎன்னே

ஈதேஎம் தோழி பரிசேலோர் எம்பாவாய்''

என்பது திருவெம்பாவையின் முதற்பாடல். இப்பாடல் இரு பெண்களைப் பற்றிப் பேசுகிறதா? அன்றி ஒரு பெண்ணைப் பற்றிப் பேசுகிறதா? என்னும் ஐயம் உரையாசிரியர்களிடையே நிலவுகிறது.

வரதராஜபிள்ளை இப்பாட்டிற்கு, ""ஒளி பொருந்திய நீண்ட கண்களையுடைய பெண்ணே, முதலும் முடிவுமில்லாத அரிய பெரிய சோதிப்பிழம்பான இறைவனை நாங்கள் பாடுவதைக் கேட்டும் உறங்குகின்றனையோ? உன் காது ஓசை புகாத வலிய காதோ? மகாதேவனுடைய நெடிய சிலம்பணிந்த திருவடிகளை நாங்கள் புகழ்ந்து பாடிய வாழ்த்துப் பாடல்களின் ஒலி சென்று தெருவின்கண் கேட்ட அளவிலேயே எங்கள் தோழி ஒருத்தி, பொருமி அழுது, உடம்பை மறந்து, மலர்நிறைந்த படுக்கையின்மீதிருந்து புரண்டு விழுந்து, இந்நிலத்தே ஒன்றுக்கும் ஆகாதவள் போல மூர்ச்சித்துக் கிடந்தாள். இஃது அவள் தன்மை. என்ன வியப்பு!'' என்று பொருள் கொண்டுள்ளார். அவர் கருத்துப்படி இப்பாடல் எழுப்பப்படும் பெண்ணொருத்தியும், வாழ்த்தொலி கேட்டு மயங்கிய பெண்ணொருத்தியுமாக இருவர் நிலையைக் கூறுவதாகும்.

அருணைவடிவேல் முதலியார், ""மாதேவன் வாழ்த்திய வாழ்த்தொலியைக் கேட்டவளும் உள்ளே கிடப்பவளும் ஒருத்தியே'' என்கிறார். அஃது இன்னொரு பெண்ணின் நிலையினைக் கூறுவதாயின், அவள் கிடந்தாள் என்று மட்டும் கூறியொழியாது பின்னர் எழுந்து வந்தாள் என்றும் ஒருதலையாகக் கூறவேண்டும். அப்படிக் கூறாமையால் பொருந்தாது என்கிறார். மேலும்,

ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ்

சோதியை யாம்பாடக் கேட்டேயும் வாள்தடங்கண்

மாதே வளருதியோ வன்செவியோ நின்செவிதான்

என்பது வரை, ""சென்ற மகளிர் உறங்குவாளை நோக்கிக் கூறியன என்றும், எஞ்சிய பகுதி அவளைப் பற்றி அவர்கள் தங்களுள் நகையாடிக் கூறுவன என்றும் இவையும் அவள் கேட்டு எழுந்துவருவாள் என்னும் கருத்தினால் கூறுவனவேயாம்'' என்றும் தெரிவிக்கிறார். "நம் தோழி உறக்கத்தால் எழாது இருக்கிறாள் அல்லள்; நமது பாடல் வீதியில் எழும்போதே அதனைக் கேட்டு மனம் உருகிப் படுக்கையிலேயே மெய்ம்மறந்து கிடக்கிறாள்; இவளது அன்பின் பெருமை எத்தகையது?' என்பது அப்பகுதியின் திரண்ட பொருள் என்று எழுதுகிறார்.

இப்பாடலில் ஒரு பெண்ணின் நிலையே பேசப்படுகிறது என்பது சரியே. ஆனால், பாட்டில் "வாழ்த்தொலிபோய்' என்னும் தொடர் அமைந்துள்ளது. "வாழ்த்தொலி இங்குப் போயிற்று' என்று வாராது; "அங்குப் போயிற்று' என்றுதான் வரும். எழுப்ப வந்த பெண்கள், உறங்குபவள் வீட்டின் வாசலில் நிற்கிறார்கள். ஆகவே, வாழ்த்திய வாழ்த்தொலி அங்கு வீதியில் போய் ஒலிக்க, இங்கு இவள் அதனைக் கேட்டு மயங்கிக் கிடக்கிறாள் என்று பொருள் கொள்வது பொருந்தாது. பலரும் இந்தப் "போய்' என்பதனை விடுத்து வீதியில் வாழ்த்திக்கொண்டு வந்தது கேட்டு என்றே பொருள் கூறியுள்ளனர். இப்படிப் பொருள்கொள்ளும்போது "போய்' என்பது வறிதே நிற்கிறது. இச்சொல் ஏடு எழுதுபவரால் ஓசையின்பத்திற்காகச் சேர்க்கப்பட்டுவிட்டதோ என்னும் ஐயம் உண்டாகிறது. "வாழ்த்தொலிபோய் வீதிவாய்' என்பது காய் முன் நேராய் வெண்சீர் வெண்டளை ஆகும். "வாழ்த்தொலி வீதிவாய்' என்பது விளமுன் நேராய் இயற்சீர் வெண்டளை ஆகும்.

மாதேவன் வார்கழல்கள் வாழ்த்திய வாழ்த்தொலி

வீதிவாய்க் கேட்டலுமே விம்மிவிம்மி மெய்ம்மறந்து

என்று இருந்தாலும் யாப்புக் கெடாது. நாம் வாழ்த்திய வாழ்த்தொலி வீதிமுனையில் கேட்டலும் விம்மி விம்மி அழுதாள் என்று பொருளும் பொருத்தமாக அமைகிறது. இப்பாட்டிலேயே ஆறு இடங்களில் இயற்சீர் வெண்டளை வருதல் காணலாம். இது குறித்து அறிஞர்கள் சிந்திப்பார்களாக.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.