விவேகானந்தர் நிழற்படம் பொறிக்கப்பட்ட அழகிய சுவர்க்கடிகாரம் ஒன்றை ஒரு விழாவில் பரிசாகத் தந்தார்கள். அந்தக் கடிகாரத்தை வரவேற்பு அறையின் மாட்ட விழைந்தேன். ஊர்ப்புறத்தில் உள்ளது போல வீட்டுச்சுவர் மண்சுவராக இருந்திருந்தால் ஆணியை எளிதில் அடித்திருக்கலாம். இதுவோ சிமிட்டியால் ஆன சுவர். அடிக்க முற்பட்டால் ஆணிதான் வளைந்துவிடும். என்ன செய்வது? என் மகன், ""அப்பா, ஜம்பர் வேண்டும். வாங்கிவரட்டுமா? நாளை வேறு படங்கள் மாட்டுவதற்கும் பயன்படும்'' என்றான். "சரி' என்றேன்.
சுவரில் துளையிட்டு, மரக்கட்டையை அடித்து மூடி அதன்மேல் ஆணியை அடித்துக் கடிகாரத்தை மாட்டிவிட்டோம். கடிகாரத்தில் மணிபார்க்கும் போதெல்லாம் அந்த வீரத் துறவியின் படத்தைப் பார்த்து மகிழும் வாய்ப்பு உண்டாயிற்று. கடிகாரத்தை மாட்டும் வேலை முடிந்துவிட்டது. ஆனால், என் அறிவு அதை மாட்டுவதற்கு உதவிய அந்தக் கருவியைப் பற்றி எண்ணத் தொடங்கி ஒரு முடிவைக் கண்டது. "சொல் தேடலில்' ஈடுப்பட்டபோது "ஜம்பர்' என்பதற்கு வாசகர்கள் என்ன நினைக்கிறார்கள் என்று அறிய விழைந்து அதனைத் தந்தேன்.
இந்த ஆங்கிலச் சொல் ஆளையும் ஆடையையும்கூடக் குறிப்பது. இந்த வாரச் சொல் தேடலில் முனைந்த அனைவரும் ஆள், ஆடை, கருவி ஆகிய மூன்று நிலைகளிலும் எப்படித் தமிழாக்கம் செய்யலாம் என்பதைத் தெரிவித்துள்ளனர். அச்சொல்லைக் கருவியைக் குறிப்பதற்கே பெரிதும் பயன்படுத்துகிறோம். அந்தக் கருவியை எப்படிக் குறிப்பது?
தச்சுத் தொழிலில் இருவகை. ஒன்று கல்லைச் செதுக்கிச் சிற்பங்களை வடிப்பது; மற்றொன்று மரத்தை இழைத்துப் பொருள்களை உருவாக்குவது. முன்னவர் "கல்தச்சர்' என்றும், பின்னவர் "தச்சர்' என்றும் கூறப்பெறுவர். பின்னாளில் கல்தச்சரைச் "சிற்பி' என்று குறிக்கும் வழக்கம் தோன்றியது. பெரும்பாலும் தச்சர்கள் பயன்படுத்தும் கருவிகளுக்கு நல்ல தமிழ்ப்பெயர்கள் அமைந்திருத்தல் காணலாம். பெரிய மரத்தின் மேற்பகுதியைச் செதுக்குவதற்குப் பயன்படுத்தும் கூர்மையான வாய் அமைந்த கருவி "வாய்ச்சி'; அறுப்பதற்குப் பயன்படும் கூரிய கருவி "வாள்' (வள்-கூர்மை) மரத்தில் துளை போடுவதற்குப் பயன்படும் கருவி "துரப்பணம்'; ஆணியைத் திருகி உள்ளே செலுத்துவதற்குப் பயன்படும் கருவி "திருப்புளி'; மரத்தை இழைப்பதற்குப் பயன்படும் கருவி "இழைப்புளி'; அடிப்பதற்குப் பயன்படும் கருவி "கொட்டாப்புளி'. இச்சொற்கள் கருவியின் தன்மையையோ செயலையோ காட்டும் வகையில் அமைந்துள்ளன. ஆங்கிலத்தில் திருப்புளியை "ஸ்குரூ டிரைவர்' என்கிறோம். பேருந்து, மகிழுந்து ஓட்டுபவர்களையும் "டிரைவர்' என்கிறோம். அச்சொல் கருவியைக் குறிக்கிறதா? அன்றி ஆளைக் குறிக்கிறதா? என்னும் ஐயம் உண்டாகிறது, இந்த "ஜம்பர்' என்னும் சொல்லைப் போல.
"கீதாச்சாரியன்' இதழ் ஆசிரியர் வேங்கடகிருஷ்ணன் சில ஆண்டுகளுக்கு முன் தெரிவித்த சுவையான நிகழ்ச்சி. வைணவப் பேரறிஞர் காஞ்சிபுரம் பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சாரிய சுவாமிகள் சென்ற மகிழுந்து வழியில் பழுதடைந்து நின்றுவிட்டது. ஓட்டுநர் வண்டியின் முன்பகுதியைத் திறந்து பார்த்துவிட்டு, வண்டியைச் சரிசெய்ய "ஸ்குரூ டிரைவர்' வேண்டும் என்றார். "என்னடா இது! இரண்டாயிரம் ரூபாய் கொடுத்து டிரைவர் வைத்திருப்பது போதாது என்று இவன் வண்டியைச் சரிசெய்ய ஸ்குரூ டிரைவர் வரவேண்டும் என்கிறான்' என்றாராம். உடன் இருந்தவர் "அது கருவியின் பெயர்' என்றாராம். "என்ன பாஷையோ? ஓட்டுபவனுக்கும் டிரைவர் என்று பெயர்; ஆணியை முடுக்குவதுக்கும் டிரைவர் என்று பெயர்' என்றாராம் அந்த ஆங்கிலம் அறியாத தென்கலையும் வடகலையும் துறைபோய மாமேதை.
ஜம்பர் பிற்காலத்தில் உருவான கருவி. அதனால் நாமும் அந்த ஆங்கிலச் சொல்லையே பயன்படுத்தி வருகிறோம். இதற்கு ஏற்ற தமிழ்ச் சொற்களாக,
சந்திரா மனோகரன் - நெட்டுளி.
இரா. மோகனசுந்தரம் - துளைபோடப் பயன்படும் உளிவகை.
சோ. முத்துமாணிக்கம், என். ஆர்.ஸத்யமூர்த்தி - துளைப்பான்.
எழில் சோம பொன்னுசாமி - துள்ளுக்கம்பி, நெட்டுளி.
சி. இராமச்சந்திரன் - துளையிடும் உளி.
நா. கிருஷ்ணவேலு - இரும்பு உளி.
அ.கருப்பையா, டி.வி.கிருஷ்ணசாமி - துளையிடும் கருவி.
ஆகியவற்றை எழுதியுள்ளனர். கோ. மன்றவாணன் எழுதியிருந்த சொற்களின் எண்ணிக்கையைக் கண்டு ஒருகணம் மலைத்துப் போனேன். துளைப்புளி, துள்ளுளி, நெட்டுளி, குத்துளி, துளைப்புக்கோல், துளைக்கொம்பு, கல்துளைக் கருவி இப்படி எத்தனை அழகான சொற்கள்!
உளி கூர்மையான கருவி. எப்படி முயன்றாலும் வாய்மூடிக்கொண்டு எதனையும் சொல்லாமல் சற்றும் அசைந்து கொடுக்காமல் இருப்பவனைக் கல்லுளி ம(ழு)ங்கன் என்று ஏசுவது உண்டு. அஃதாவது கல்லைப் பிளக்கும் உளியையும் மழுங்கும்படி உறுதியாக இருப்பவன் என்பது பொருள். "ஜம்பரை' உளி என்பது சரி. ஆனால், அது நீளமானது அன்று; நான்கு அங்குல அளவிலும் இருக்கிறது. ஆதலின் "நெட்டுளி' என்று கூற இயலாது. துள்ளுளி, துளைப்புளி இவற்றில் ஒன்றைத் தேர்வு செய்யலாம். திருகுவதைத் திருப்புளி என்றும் இழைப்பதை இழைப்புளி என்றும் குறிப்பதுபோலத் துளைப்பதைத் துளைப்புளி என்று குறிக்கலாம் என்று முன்பே முடிவு செய்திருந்தேன். அக்கருத்தினை இரா. மோகனசுந்தரமும் அச்சொல்லைக் கோ. மன்றவாணனும் குறித்திருப்பது கண்டு மகிழ்ந்தேன். துளைப்புளி என்பது பொருத்தமாக இருக்கும்.
Jumper - துளைப்புளி.
அடுத்த வாரத்திற்குரிய சொல் - Plumber
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
மண்டாடி தமிழ்ப் புத்தாண்டு போஸ்டர்!

மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ரோஹித் சர்மா புதிய சாதனை!

ஆஷா போஸ்லே மறைவுக்கு இரங்கல் தெரிவித்த ஆஸி. கிரிக்கெட் வீரர்!

அதீத பேட்டரி திறன்... இன்ஃபினிக்ஸ் நோட் 60 ப்ரோ இந்தியாவில் அறிமுகம்!
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

