

ஆண்டுதோறும் நெய்வேலி புத்தகக் கண்காட்சிக்குச் செல்வது என்பதை வழக்கமாக்கிக் கொண்டிருக்கிறேன். "தினமணி' நாளிதழுடன் இணைந்து ஆண்டுதோறும் சிறுகதை, குறும்படம் ஆகிய போட்டிகளை நடத்துகிறார்கள் எனும்போது, நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் புத்தகக் கண்காட்சியில் பங்கு பெறாமல் இருப்பது நியாயமும் இல்லை.
ஓர் அரசுத்துறை நிறுவனம், இந்த அளவு சமூகப் பொறுப்புணர்வுடன் புத்தகக் கண்காட்சி நடத்துகிறது என்பதுகூடப் பெரிதல்ல. அந்த நிகழ்ச்சியில் தினந்தோறும் ஓர் எழுத்தாளரையும், புத்தகப் பதிப்பகத்தாரையும் மேடையில் அமரவைத்துப் பரிசும், பாராட்டும் அளிப்பது போற்றுதலுக்குரிய செயல்பாடு. பள்ளி மாணவர்களுக்குப் பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, கவிதைப் போட்டி என்று பல்வேறு போட்டிகளையும் நடத்துகிறார்கள். நெய்வேலி புத்தகக் கண்காட்சிக்குச் சென்று வந்தால், எனக்கு ஏற்படும் உற்சாகத்துக்கு அளவே இல்லை.
இந்த ஆண்டுக்கான நெய்வேலி புத்தகக் கண்காட்சியும், தினமணி நாளிதழும் இணைந்து நடத்திய சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு பெற்ற பா.சந்திரசேகர், வித்தியாசமான மனிதர். பரிசும் பாராட்டும் பெற மேடைக்கு வந்தவர், எனக்குத் தருவதற்கென்றே சில புத்தகங்களையும் எடுத்து வந்திருந்தார். பிறகுதான் தெரிந்தது அவர் ஒரு பதிப்பாளரும்கூட என்பது.
அவர் எனக்களித்த புத்தகங்களில் மூன்று புத்தகங்கள் நான் நீண்ட நாள்களாகத் தேடி வந்தவை. "சுதேசமித்திரன்' பத்திரிகையின் நிறுவனர் ஜி.சுப்பிரமணிய ஐயர் எழுதிய "ஆசாரத்திருத்த வியாசங்கள்' என்கிற புத்தகம் 1914-இல் வெளியானது. சுமார் 81 ஆண்டுகளுக்கு முன்னால் 1934-இல் "சாதாரண மக்களும் வேதங்கள் என்ன சொல்கின்றன' என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும் என்கிற நோக்கில் திருப்பனந்தாள் மடாதிபதியாக இருந்த ஸ்ரீலஸ்ரீ சுவாமிநாத சாமிகளின் ஆசியுடன் எம்.ஆர்.ஜம்புநாதனால் எழுதப்பட்ட "நான்கு வேதங்கள் ஓர் அறிமுகம்' என்பது இன்னொரு புத்தகம். மூன்றாவது புத்தகம் தஞ்சாவூர் இரா.சுப்பராயலுவால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட "கோட்úஸயின் வாக்குமூலம்'.
கடந்த நூற்றாண்டின் முற்பகுதியில் வாழ்ந்த புரட்சிகரமான பத்திரிகையாளர் ஜி.சுப்பிரமணிய ஐயர். மகாகவி பாரதியாரின் திறமையை இனம் கண்டு சுதேசமித்திரன் பத்திரிகையை அவர் பொறுப்பில் ஒப்படைத்ததிலிருந்தே, ஜி.சுப்பிரமணிய ஐயரின் உயர்ந்த நோக்கத்தை நாம் புரிந்து கொள்ளலாம். "ஆசாரத்திருத்த வியாசங்கள்' என்கிற ஜி.சுப்பிரமணிய ஐயரின் கட்டுரைகளின் தொகுப்பு, ஒரு நூற்றாண்டுக்கு முன்னால் அந்த மனிதருக்குள் இருந்த சமுதாயச் சிந்தனையை வெளிச்சம் போடுகிறது. காலத்திற்கேற்ப சமூக ஆசாரங்களும் பழக்க வழக்கங்களும் மாற வேண்டும் என்பதை வலியுறுத்துகின்றன அதில் இடம் பெற்றிருக்கும் கட்டுரைகள்.
என்போன்று சம்ஸ்கிருதம் தெரியாதவர்களுக்கு எப்போதுமே வேதத்தில் என்னதான் சொல்லப்படுகிறது என்கிற ஆர்வம் உண்டு. அங்கொன்றும் இங்கொன்றுமாகப் பரமார்த்த குருவும் சீடர்களும் கண்ணைக் கட்டிக்கொண்டு யானையைத் தொட்டுப் பார்ப்பதுபோலத் தெரிந்துகொள்ள முடிந்திருக்கிறதே தவிர, ஒரு தெளிவான புரிதல் கிட்டவே இல்லை.
எம்.ஆர்.ஜம்புநாதன் எழுதியிருக்கும் "நான்கு வேதங்கள்
ஓர் அறிமுகம்' ஓரளவுக்கு வேதம் பற்றிய புரிதலை ஏற்படுத்துகிறது.
"கோட்ஸேயின் வாக்குமூலம்' ஏற்கெனவே ஆங்கிலத்தில் படித்ததுதான் என்றாலும், கால் நூற்றாண்டு இடைவெளிக்குப் பிறகு, இப்போது மீண்டும் படிக்கும்போது, புதிய பல விளக்கங்களும், கருத்துகளும் புலப்படுகின்றன. கோட்úஸயின் கருத்துகளை நம்மால் ஏற்றுக்கொள்ள முடியாவிட்டாலும், கொலையாளியின் நியாயத்தைத் தெரிந்து கொள்வதில் தவறில்லையே...
விஷயத்துக்கு வருகிறேன். ஒரத்தநாட்டில் இருந்துகொண்டு, மருதம் பதிப்பகம் என்கிற பெயரில், கிடைத்தற்கரிய பல பழைய புத்தகங்களைத் தேடிப்பிடித்துப் பதிப்பித்து வரும் எழுத்தாளர் பா.சந்திரசேகரை எவ்வளவு பாராட்டினாலும் தகும். சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு பெற்றதற்கு வாழ்த்துகள். கிடைத்தற்கரிய பழைய புத்தகங்களைத் தேடிப்பிடித்து பதிப்பித்து வருவதற்கும் பாராட்டுகள். தமிழ்கூறு நல்லுலகம் உங்களுக்குக் கடமைப்பட்டிருக்கிறது சந்திரசேகர்!
முன்பொருமுறை கோவை சென்றிருந்தபோது, வழக்கம்போல விஜயா பதிப்பகத்துக்குச் சென்றிருந்தேன். விஜயா பதிப்பக உரிமையாளர் வேலாயுதம் அண்ணாச்சி, "இதைப் படிச்சுப் பாருங்க' என்று ஒரு கவிதைத் தொகுப்பையும், ஒரு சிறுகதைத் தொகுப்பையும் எடுத்துத் தந்தார். "இந்த இளைஞர் பிரமாதமாக வருவார்' என்று விஜயா பதிப்பகம் வேலாயுதம் அண்ணாச்சி சான்றிதழ் தந்த பிறகு, அந்த எழுத்தாளர் சிறந்த எழுத்தாளராகத்தானே இருக்க முடியும்!
கண்மணி குணசேகரன் எழுதிய சிறுகதைத் தொகுப்பு "உயிர்த்தண்ணீர்'. 13 சிறுகதைகள் அந்தத் தொகுப்பில் இருந்தன. அவரது சிறுகதைகளின் தனிச்சிறப்பு என்னவென்றால், அவரது மண் சார்ந்த மொழிநடை. அவரது மொழி மட்டுமல்ல, கதைக் களமும் மண் சார்ந்ததாக இருப்பதுதான் சிறப்பு. தமிழகத்தில் கிராமங்களில் இன்னும் நுனிநாக்கு ஆங்கிலத்தின் பாதிப்பு அதிகம் இல்லாத அடித்தட்டு மக்களின் மன ஆழத்தைப் படம் பிடித்துக் காட்டுகின்றன இவருடைய கதைகள்.
புத்தகத்திற்கு ஏன் "உயிர்த்தண்ணீர்' என்று பெயர் வைத்தார்கள் என்பதை அந்தக் கதை உணர்த்தியது. இன்னும் இதுபோல எத்தனை எத்தனையோ கிராமங்களும், பீட்டர்களும், டெலிபிகளும் இருப்பது நிஜம். கதையைக் கண்மணி குணசேகரன் நகர்த்திக்கொண்டு போயிருக்கும் விதமும், முடித்திருக்கும் விதமும் அசத்தல்.
கண்மணி குணசேகரன் எழுதி வெளிவந்திருக்கும் ஏனைய ஒன்பது படைப்புகளின் பட்டியலும் தரப்பட்டிருக்கிறது. அவற்றையும் படித்துப் பார்க்க வேண்டும் என்கிற ஆர்வத்தை ஏற்படுத்தும் எழுத்து குணசேகரனுடையது!
சேலத்திலிருந்து வாசகர் ஒருவர் அனுப்பித் தந்திருக்கும் கவிதை இது. இந்தக் கவிதையை மதுபானக்கூடம் ஒன்றில் எழுதி வைத்திருப்பதாகவும், அதைக் குறித்துவைத்து அனுப்பித் தருவதாகவும் குறிப்பிட்டிருக்கிறார். இதற்கு முன்னால் எங்கேயோ இந்தக் கவிதையை படித்திருப்பதாக நினைவு. மதுபானக்கூடம் நடத்துபவருக்கு கவி ரசனை இருப்பதில் வியப்பில்லை. இரண்டுமே மயக்கம் தருபவைதானே...!
தன்னை ஒருவர்
திறக்கும்வரை
அவர்களுக்கான
போதையைப்
பாதுகாக்கும்
மதுக்குவளை
ஒருபோதும்
உளறுவதில்லை
தன்னைப் பற்றியோ
தன்னை
திறக்கப் போகிறவர்
பற்றியோ!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பாரியூா் கோயிலில் பிரசாரத்தை தொடங்கினாா் கோபி வேட்பாளா்

கூட்டணி கட்சி வேட்பாளா்கள் தோ்வில் திமுக தலையிடாது: அமைச்சா் சு.முத்துசாமி

நீதிமன்ற ஊழியரைத் தாக்கியதாக தம்பதி மீது வழக்கு

அண்ணாமலைக்கு தொகுதி ஒதுக்கீடு: கட்சித் தலைமைதான் முடிவு செய்யும்! - வானதி சீனிவாசன்
வீடியோக்கள்
Jawahirullah interview | அதிமுக, பாஜகவுக்கு உதவ இறக்கிவிடப்பட்டவர் Vijay | Dinamani | Election 2026
தினமணி வீடியோ செய்தி...

#ipl2026 | சிஎஸ்கேவில் சஞ்சு சாம்சன், ராஜஸ்தானில் ஜடேஜா: இதுதாண்டா ஆட்டம்! | MS Dhoni | RR vs CSK |
தினமணி வீடியோ செய்தி...

164 தொகுதிகளின் திமுக வேட்பாளர்களை அறிவித்த முதல்வர் ஸ்டாலின்! | DMK candidates | MK Stalin
தினமணி வீடியோ செய்தி...

முக்கிய வீரர்கள் விலகல்: ஐபிஎல் சுவாரசியமாக இருக்குமா?
தினமணி வீடியோ செய்தி...

