வளைகுடாவில் இந்திய மக்களைக் காத்தது பாஜக: பிரதமர் மோடிகாட்டுமன்னார்கோவில் தொகுதியில் திருமாவளவன் போட்டி!வருமான வரி செலுத்தாத குடும்பங்களுக்கு இல்லத்தரசிகள் திட்டத்தில் ரூ. 8,000 கூப்பன் வழங்கப்படும் - திமுக தேர்தல் அறிக்கைமுதலமைச்சர் காப்பீடு திட்டம் ரூ. 10 லட்சமாக அதிகரிக்கப்படும்: மு.க. ஸ்டாலின் வாக்குறுதிபேரிடர் கால இழப்பீடு ஹெக்டருக்கு ரூ. 25 ஆயிரமாக உயர்த்தப்படும் : திமுக வாக்குறுதிமுதல்வரின் காலை உணவுத் திட்டம் 8 ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும் : மு.க. ஸ்டாலின் வாக்குறுதி
/

இந்த வாரம் கலாரசிகன்

இப்படிச் செய்வார் தருண் விஜய் என்று நாங்கள் யாருமே எதிர்பார்க்கவில்லை. திருக்குறளையும், திருவள்ளுவரையும் தேசிய அளவில் கொண்டு செல்லவும், உரிய மரியாதையைப் பெற்றுத் தரவும் உத்தரகண்டைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் தருண் விஜய் முனைப்புக் காட்டுவதால்தான் தமிழகம் அவருக்கு நன்றியுடன் மரியாதை செலுத்துகிறது.

News image
Updated On :6 ஜூன் 2015, 7:22 pm

கலாரசிகன்

இப்படிச் செய்வார் தருண் விஜய் என்று நாங்கள் யாருமே எதிர்பார்க்கவில்லை. திருக்குறளையும், திருவள்ளுவரையும் தேசிய அளவில் கொண்டு செல்லவும், உரிய மரியாதையைப் பெற்றுத் தரவும் உத்தரகண்டைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் தருண் விஜய் முனைப்புக் காட்டுவதால்தான் தமிழகம் அவருக்கு நன்றியுடன் மரியாதை செலுத்துகிறது.

திருக்குறளை தேசிய அளவில் பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும் என்று குரலெழுப்பும் தருண் விஜய்க்குத் தென்காசித் திருவள்ளுவர் கழகம் மரியாதை செலுத்திப் பாராட்ட விழைந்ததன் காரணமும் அதுதான்.

தமிழக இலக்கிய அமைப்புகளின் முன்னோடி, அத்தனை திருவள்ளுவர் கழகங்களுக்கும் தாய்க் கழகம் தென்காசி திருவள்ளுவர் கழகம். அவர்களது 88-ஆவது ஆண்டுவிழாவில் கலந்து கொள்கிறேன் என்று தருண் விஜய் தந்த ஒப்புதலைக் கேட்டுப் பெருமகிழ்ச்சி அடைந்த அத்தனை பேருக்கும் பேரதிர்ச்சி. கடைசி நேரத்தில் அவர் வராமல் போனதில் யாருக்கு வருத்தம் இருக்கிறதோ இல்லையோ, எனக்கு நிச்சயமாக உண்டு. இதனால் இழப்பு, 88 ஆண்டுகளாகத் தொடர்ந்து திருக்குறள் பணியில் ஈடுபட்டிருக்கும் தென்காசி திருவள்ளுவர் கழகத்துக்கு அல்ல. அவர்களது பாராட்டையும், கெüரவத்தையும் ஏற்றுக்கொள்ளத் தவறிய தருண் விஜய்க்குத்தான்!

1947-இல் சுதந்திரம் பெற்றும்கூட, அடிமை நாட்டை ஆள்வதற்கு ஆங்கிலேயர் உருவாக்கி வைத்திருந்த சட்டங்களையும், நிர்வாக நடைமுறைகளையும், இந்தியா 60 ஆண்டுகளுக்கும் மேலாக இன்றும் தொடர்ந்து கடைப்பிடிக்கிறது என்கிற அவலத்தை யாரிடம் சொல்லி அழ?

இந்திய ஜனநாயகத்தின், இந்திய நிர்வாகத்தின் செயல்பாடுகள் அனைத்துமே ஆட்சியாளர்களுக்கும், அதிகார

வர்க்கத்தினருக்கும் மட்டுமே முழுமையாகத் தெரியும் விதத்தில் அமைந்திருந்ததை உடைத்தெறிந்த நிகழ்வு 2005-இல் நிகழ்ந்தது. தகவல் அறியும் உரிமைச் சட்டம் அரசுக்கும் மக்களுக்கும் இடையே இருந்த திரையைக் கிழித்தெறிந்து, வெளிப்படைத் தன்மைக்கு வழிகோலியது.

இந்தியாவில் 2005-இல் நிறைவேற்றப்பட்ட தகவல் அறியும் உரிமைச் சட்டம், ஸ்வீடன் நாட்டில் 1766-ஆம் ஆண்டிலேயே நிறைவேற்றப்பட்டு விட்டது. 1966-இல் அமெரிக்காவும், 2000-ஆம் ஆண்டில் பல்கேரியாவும் தகவல் கோரும் உரிமையைக் குடிமக்களுக்கு அளித்தன. இந்தியாவில் தகவல் அறியும் உரிமைச் சட்டம் கொண்டு வரப்பட்ட 2005-ஆம் ஆண்டில் உலகளாவிய அளவில் 55 நாடுகளில் இந்தச் சட்டம் அமலில் இருந்தது என்றால், இப்போது அது 85 நாடுகளுக்கு மேல் விரிவடைந்திருக்கிறது.

தகவல் அறியும் உரிமைச் சட்டம் பற்றி எல்லோரும் பேசுகிறோமே தவிர, அதை எப்படி எல்லாம், எதற்கெல்லாம் பயன்படுத்த முடியும் என்பது பலருக்கும் இன்னும் தெரியாமலேதான் இருக்கிறது. அந்தக் குறையைப் போக்குகிறது தம்பி எஸ்.ஏ.எம். பரக்கத் அலியின் "தகவல் அறியும் உரிமைச் சட்டம்' என்கிற புத்தகம். இந்தச் சட்டத்தின் தோற்றத்தில் ஆரம்பித்து அது தொடர்பான அத்தனை தகவல்களையும் ஒன்றுவிடாமல் சுவாரஸ்யமாகத் தொகுத்தளித்திருக்கிறார் "ஜூனியர் விகடன்' பொறுப்பாசிரியர்களில் ஒருவரான பரக்கத் அலி.

""ஜனநாயகத்தைக் கட்டிக் காக்கவும், குடிமக்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும் நமக்குக் கிடைத்திருக்கும் இந்த ஆயுதத்தை மழுங்கடித்து விடாமலும், வெறும் காட்சிப் பொருளாக்கி விடாமலும் பாதுகாப்போம், பயன்படுத்துவோம்'' என்கிற வரிகளோடு புத்தகம் முடிகிறது. இந்தச் சட்டத்தை நீர்த்துப் போக அனுமதிக்காமலும், மேலும் பலப்படுத்துவதிலும்தான் இந்தியாவின் வெற்றியே அடங்கி இருக்கிறது. தேச நலனில் அக்கறையுள்ள, சமூகப் பிரக்ஞையுள்ள ஒவ்வொரு குடிமகனிடமும் கட்டாயம் இருக்க வேண்டிய, படிக்க வேண்டிய புத்தகங்கள் எவை என்று என்னிடம் கேட்டால், நான் பரிந்துரைக்கும் புத்தகங்களில் எஸ்.ஏ.எம். பரக்கத் அலி எழுதி இருக்கும் தகவல் அறியும் உரிமைச் சட்டமும் ஒன்றாக இருக்கும்!

ஸ, ஷ, ஹ, ஜ, க்ஷ ஆகிய ஐந்து எழுத்துகள் தேவையா தேவையில்லையா என்கிற சர்ச்சைக்குத் "தமிழ்மணி' பகுதியில் முற்றுப்புள்ளி வைத்த பிறகும்கூடத் தொடர்ந்து கடிதங்களும் கட்டுரைகளும் வந்தவண்ணம் உள்ளன.

இதுவரை தமிழ்மணியில், ச.மு. விமலானந்தன், மீ. காசுமான், கவிக்கோ ஞானச்செல்வன், கலியன் எதிராசன், புலவர் பதுமனார், சுப. தனுஷ்கோடி போன்றோரின் விவாதக் கட்டுரைகள் இடம்பெற்றன. இதுதொடர்பாக மேற்கூறியவர்கள் கருத்தை அடியொற்றியே பலரும் கட்டுரை எழுதியுள்ளனர். அவர்களுள், தெ. முருகசாமி, செ. நாராயணசாமி, த. விண்மீண் பாண்டியன், கா.மு. சிதம்பரம், ப. சிவதாணுப்பிள்ளை, செ. இராமலிங்கன், இரா. ஷண்முகப்பிரியன், கி.த. பச்சையப்பன், ப. எழில்வாணன், பி. கணேஷ்ராம், இலக்குவனார் திருவள்ளுவன், சு. மாரிமுத்து, சா. பன்னீர்செல்வம் போன்றோர் குறிப்பிடத்தக்கவர்கள்.

நமது நோக்கம் இந்தப் பிரச்னை விவாதப் பொருளாக்கப்பட வேண்டும் என்பதுதான். இதற்கு விடைகாண வேண்டியதும், தேர்ந்த முடிவை நடைமுறைப்படுத்துவதும் அறிஞர்களின், பல்கலைக்கழகங்களின், தமிழ் ஆய்வாளர்களின் பணி. பலதரப்பட்ட கருத்துகளையும் பதிவு செய்து விட்டோம். இனி உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம், தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகம், செம்மொழித் தமிழ் உயராய்வு நிறுவனம் போன்றவை இந்த விவாதத்தை முன்னெடுத்துச் செல்வதுதான் சரியாக இருக்கும்!

விமர்சனத்திற்கு வந்திருந்தது "பச்சோந்தி' என்கிற கவிஞரின் "வேர் முளைத்த உலக்கை' என்கிற கவிதைத் தொகுப்பு. "சிமென்ட் சாலையில் புதைந்த மூதாதையரின் காலடிச் சுவடுகளுக்கும், கிராமத்து வீட்டை குட்டிச் சுவராக்கி, மாநகரத்தில் மாடி வீடு கட்டிய ஒவ்வொரு கிராமத்தவனுக்கும் அந்தக் கவிதைத் தொகுப்பை சமர்ப்பித்திருந்ததில்' இருந்தே புரிந்தது, இந்தக் கவிஞர் சற்று வித்தியாசமானவராகத்தான் இருக்க வேண்டும் என்று.

"குடிசைக் குகைக்குள் ஒரு குட்டை' கவிதையில் அடிக்குறிப்பிலிருந்து தெரிந்தது இவர் "கணையாழி' இதழின் உதவி ஆசிரியராக இருக்கிறார் என்பது. "இருட்டில் மூழ்கிய வெளிச்சம்' என்றொரு கவிதை. மேலெழுந்தவாரியாகப் பார்த்தால் மிகவும் சாதாரணமாகத் தெரியும். சற்று ஆழ்ந்து சிந்தித்துப் பார்த்தால் இருளைவிட ஆழமாக அல்லவா இருக்கிறது.

இருட்டு எல்லோருக்கும் இருட்டாகவே இருக்கிறது.

வெளிச்சம்தான் எல்லோருக்கும் வெளிச்சமாக இருப்பதில்லை!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.