இந்த வாரம் கலாரசிகன்
சென்னை மண்ணூர்பேட்டை நேரு நகரில் இருந்து செயல்படும் "தமிழகக் கவிஞர் கலை இலக்கியச் சங்கம்' திருக்குறளை தேசிய நூலாக்க வேண்டும் என்கிற கோரிக்கையுடன் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.


சென்னை மண்ணூர்பேட்டை நேரு நகரில் இருந்து செயல்படும் "தமிழகக் கவிஞர் கலை இலக்கியச் சங்கம்' திருக்குறளை தேசிய நூலாக்க வேண்டும் என்கிற கோரிக்கையுடன் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. வடலூர் வள்ளலார் கோட்டம் முதல் சென்னை வள்ளுவர் கோட்டம் வரை நடைப்பயணம் நடத்தி, வழிநெடுகத் திருக்குறளை தேசிய நூலாக்க வேண்டியதன் அவசியத்தை மக்களிடம் எடுத்துரைக்க முற்பட்டது. அதே கோரிக்கையை முன்வைத்து, தலைநகர் தில்லியில் 120 தமிழ்க் கவிஞர்களுடன் உண்ணாநோன்பிருந்து, நடுவண் அரசுக்குத் திருக்குறளின் பெருமையை எடுத்துரைக்க முற்பட்டது.
இப்போது, அருள்பிரகாச வள்ளலார் அருட்பெரும் ஜோதியில் கலந்த வடலூரில், அடுத்த ஞாயிற்றுக்கிழமை (ஜூன் திங்கள் 21-ஆம் நாள்) திருக்குறள் தேசிய நூல் மாநாடு ஒன்றை நடத்த இருக்கிறார்கள் தமிழகக் கவிஞர் கலை இலக்கியச் சங்கத்தார். "செம்மொழிப் போராளி' கவிஞர் க.ச. கலையரசனும் தோழர்களும் நடத்த இருக்கும் மாநாட்டுக்குத் தமிழை நேசிக்கும் அன்பர்கள் அணி திரண்டு வருதல் வேண்டும் என்பது எனது அன்பு வேண்டுகோள்.
"குறளை தேசிய நூலாக அறிவிப்பதால் என்ன பயன்?' என்று கேள்வி எழுப்புகிறவர்கள் உளர். தேசிய நூலாக அறிவிக்கப்படுவதால் ஏற்படும் முதல் நன்மை, திருக்குறள் இந்தியாவிலுள்ள அனைத்து மாநிலங்களிலும் உள்ள அனைத்து மொழியினராலும் அவரவர் மொழியில் மாற்றம் செய்யப்பட்டுப் பயிலும் வாய்ப்பு ஏற்படும். திருக்குறளை ஒரு முறை பயின்றவர்கள், அதன் கருத்துச் செழுமையால் கவரப்பட்டு ஆட்கொள்ளப்படுவார்கள் என்பதுதான் வரலாறு.
சமயத்தைப் பரப்ப வந்த மேலைநாட்டுப் பாதிரிமார்களும், நம்மை அடிமைப்படுத்தி ஆள வந்த ஐரோப்பியர்களும், அவர்தம் மொழியில் சமயத்தைப் பரப்ப இயலாமல், தமிழ்மொழியைப் பயின்று அதன்மூலம் சமயத்தைப் பரப்ப முற்பட்டனர். இந்தியாவின் ஏனைய பகுதிகளைப் போல அல்லாமல், இங்கே தமிழகத்தில் மட்டும் ஓர் அதிசயம் நிகழ்ந்தது. திருக்குறள், அவர்களது நோக்கத்தையும் மீறி அவர்களது சிந்தனையைத் திசை திருப்பி விட்டது.
கால்டுவெல் இத்தாலிய மொழியிலும், ஜி.யு. போப் ஐரிஷ், ஆங்கில மொழிகளிலும் திருக்குறளை மொழிபெயர்க்க முற்பட்டனர். ஆங்கிலேய அதிகாரியான எல்லிஸ்துரையும் கூடத் திருக்குறளைப் படித்துத் தேறி ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க முற்பட்டார். திருக்குறளின் ஈர்ப்பு அத்தகையது. படிக்க நேர்ந்தால் பிடித்துக் கொள்ளும் அளவுக்குக் கருத்துச் செறிவு நிறைந்த பொக்கிஷம் அது.
திருக்குறளைப் பரப்புவது என்பது தமிழ் மொழியை வளர்ப்பது. அதனால்தான் திருக்குறளைத் தேசிய நூலாக்க வேண்டும் என்கிற கோரிக்கையை முன்வைக்கிறோம்.
கடந்த நூற்றாண்டில் தமிழுக்கு வளம் சேர்த்தவர்களும், உரமிட்டு வளர்த்தவர்களும் ஏராளம், ஏராளம். அந்த அறிஞர்கள் வரிசையில் குறிப்பிடத்தக்க பெருந்தகை "செந்தமிழ்க் காவலர்' டாக்டர் அ. சிதம்பரநாதன் செட்டியார்.
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் இடைக்காலத் துணைவேந்தராகப் பணியாற்றிய சிதம்பரநாதனாரின் மிகப்பெரிய பங்களிப்பு, சென்னைப் பல்கலைக்கழகத்தால் வெளியிடப்பட்ட ஆங்கிலம், தமிழ் சொற்களஞ்சியம். தனது இறுதிக் காலத்தில் மதுரை தியாகராயர் கல்லூரியில் பணியாற்றிய "செந்தமிழ்க் காவலர்' தமிழிலும், ஆங்கிலத்திலும் புலமை பெற்றிருந்தவர் மட்டுமல்ல, தலைசிறந்த பேச்சாளரும்கூட. ஆறு ஆண்டுகள் தமிழக மேலவை உறுப்பினராகவும் இருந்தவர்.
சிதம்பரநாதனார் எழுதிய நூல்கள் குறைவு. சிறுகதைகள், கவிதைகள் படைத்திருந்தாலும்கூட, இவரது பங்களிப்பு கட்டுரைகள், ஆய்வுகள், சொற்பொழிவுகள் ஆகியவற்றுடன் நின்றுவிட்டது. "செந்தமிழ்க் காவலர் டாக்டர் அ. சிதம்பரநாதன் ஆராய்ச்சிக் கட்டுரைகள், உரைகள்' என்கிற தலைப்பில் அவற்றை எல்லாம் இரண்டு தொகுதிகளாகப் பதிப்பித்திருக்கிறார் முனைவர் இராம. குருநாதன்.
தமிழ் மாணவர்கள் கட்டாயம் படிக்க வேண்டிய கட்டுரைகள். தமிழ் ஆர்வலர்கள் சேகரித்து வைக்க வேண்டிய தொகுப்புகள். மொத்தத்தில் இந்தத் தொகுப்புகள் பற்றிச் சொல்வதாக இருந்தால் - "தமிழ்ப் பெட்டகம்'!
சங்க இலக்கிய காலத்தில் "அறம்' என்கிற வழக்குதான் காணப்பட்டது. தொல்காப்பியத்தில் அறம்தான் பேசப்படுகிறது. சங்க இலக்கியங்களில் சுமார் 60 இடங்களிலும், திருக்குறளில் சுமார் 30 இடங்களிலும் "அறம்' என்கிற சொல் இடம்பெறுகிறது. "நீதி' என்கிற வழக்கு சமய இலக்கியங்களில்தான் புழக்கத்திற்கு வருகிறது.
தமது ஆய்வியல் நிறைஞர் பட்டத்திற்காக அ. ஷமிம் நிஷா எடுத்துக்கொண்ட தலைப்பு, "தமிழில் நீதி நூல்கள் உருவாக்கம்'. கி.பி. 9-ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 19-ஆம் நூற்றாண்டு வரையிலான நீதி நூல்கள் பற்றிய முழுமையான ஆய்வை மேற்கொண்டு, அவரது கருத்தைப் பதிவு செய்திருக்கிறார். தமிழில் வெளிவந்துள்ள நீதி நூல்கள், தனியுடைமைச் சமூக அமைப்பைப் பாதுகாக்க இயற்றப்பட்டவை' என்பது அவரது கருத்து.
அதேநேரத்தில், அந்த நீதி நூல்களில் கூறப்படும் வாழ்க்கைத் தத்துவங்களையும், அறிவுரைகளையும் அவர் குறிப்பிடவும், தெளிவுபடுத்தவும் தவறவில்லை. அதுமட்டுமல்ல, அத்தனை நீதி நூல்கள், நீதிச் சதகங்கள் பற்றிய பட்டியலும் குறிப்பும் நுட்பமான தேடுதலுடன் தொகுத்து வழங்கப்பட்டிருக்கிறது. நீதி நூல்களின் பதிப்பு விவரங்கள் பதிப்பிக்கப்பட்ட ஆண்டின் விவரத்துடன் தரப்பட்டிருக்கிறது.
அற்புதமான ஆய்வு நூல். அ. ஷமிம் நிஷா தமிழுக்குக் கிடைத்திருக்கும் நுட்பமான ஆராய்ச்சியாளர். இந்த ஆய்வு நூல் மூலம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை அவர் ஏற்படுத்துகிறார்!
"உங்களுக்கும் பிடித்திருந்தால் இந்த வாரத்திற்கான கவிதையாக இதைத் தேர்வு செய்யுங்களேன்' என்கிற வேண்டுகோளுடன், பெயரைச் சொல்லாமல் ஒரு வாசகர் அனுப்பித் தந்த கவிதை இது. கவிஞர் பெயர் - தி. வீரபாண்டியன் என்பதை மறக்காமல் குறிப்பிட்டிருக்கிறார் அந்த வாசகர்.
கன்னிப் பருவத்தில்
காதலியாய் இருக்கையில்
அவள் கடையிதழ் சிரித்தால்போலும்
கிடந்து தவித்தேன்
அவளே
மனைவியாய் மாறி
மக்களைப் பெற்று
லோனுக்கு அலைகையில்
சிரித்தால் போலும்
எரிந்து விழுந்தேன்.
அது புன்சிரிப்பு
இது புண்சிரிப்பு!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...