தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம் வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

சொல் தேடல் -14

நகரங்களிலும் தங்க நாற்கரச் சாலைகளிலும் எந்நேரமும் நிரம்பி வழியும் நாற்சக்கர வாகனங்கள் போக்குவரத்துத் துறையில் மனித குலம் பெற்றிருக்கும் அசுர வளர்ச்சியின் அடையாளங்கள். வாகனங்களின் இந்த மிகுவேக வளர்ச்சி எப்போது ஏற்பட்டது?

Updated On :27 ஜூன் 2015, 7:39 pm

நகரங்களிலும் தங்க நாற்கரச் சாலைகளிலும் எந்நேரமும் நிரம்பி வழியும் நாற்சக்கர வாகனங்கள் போக்குவரத்துத் துறையில் மனித குலம் பெற்றிருக்கும் அசுர வளர்ச்சியின் அடையாளங்கள். வாகனங்களின் இந்த மிகுவேக வளர்ச்சி எப்போது ஏற்பட்டது? மறைந்த இந்தியத் தலைமை அமைச்சர் அன்னை இந்திரா காந்தி இறுதியாகப் படித்த நூல் ஆல்வின் டாப்ளர்  (Alvin Toffler) எழுதிய பியூச்சர் ஷாக் (Future Shock)  என்பதனை அறிந்து நெடுநாள்களுக்கு முன்பு அதனைப் படித்தபோது, அதில் கண்ட ஒரு செய்தி வியப்பளித்தது.

சக்கரம் கண்டுபிடிப்பதற்கு முன்பு மனிதகுலம் பெற்ற வளர்ச்சியினும் பல மடங்கு மிகுதியான வளர்ச்சியை அதன்பின் பெற்றது என்பதே அது. சக்கரம் தொழில் நுட்ப வளர்ச்சியில் முதன்மையான கண்டுபிடிப்பு மட்டும் அன்று, சிறந்த சாதனையும்கூட. அதற்கு முன்பு நத்தைபோல் ஊர்ந்துவந்த வளர்ச்சி உருளை கண்டுபிடிக்கப் பட்டபின் முயல்போல் ஓடத் தொடங்கியது. இயந்திரங்கள், உழவுக்கருவிகள், வானூர்திகள், தொடர்வண்டிகள், பேருந்துகள் எல்லாவற்றிலும் சக்கரம் உண்டு.

சென்னை நகரில் 1925 - 28ஆம் ஆண்டுகளுக்கு இடையில்தான் முதன் முதலாகப் பேருந்து இயக்கப்பட்டுள்ளது. பின்னர், பிற நகரங்களில் இயங்கத் தொடங்கியது. சுமார் எழுபது ஆண்டுகளுக்கு முன் தனியாரால் இயக்கப்பட்ட பேருந்துகள் ஐம்பது கல் தொலைவுக்கு உள்ளேயே இயங்கிக்கொண்டிருந்தன. இன்றோ, மாநிலத் தலைநகரங்களை இணைக்கும் பேருந்துப் போக்குவரத்து இயங்கிக் கொண்டிருக்கிறது. பொதுமக்களின் போக்குவரத்துச் சாதனமாகத் தொடர்வண்டிக்கு அடுத்துப் பேருந்தே திகழ்கிறது. தொடர்வண்டி இல்லாத பகுதிகளில் எல்லாம் பேருந்துகளே இயங்குகின்றன. இன்று பேருந்துவசதி இல்லாத ஊரைக் காண்பது அரிது. மாநில அரசுகளே பேருந்துப் போக்குவரத்தினை மேற்கொண்டிருக்கிறது.

பெருகி வரும் பயணியர் எண்ணிக்கைக்கு அரசுப் பேருந்துகள் ஈடுகொடுக்க முடியாத நிலையில் தனியார் பேருந்துகள் அரசின் இசைவுபெற்று இயங்குகின்றன. அரசின் போக்குவரத்துக்கு இணையாக நடைபெறும் மற்றொரு போக்குவரத்து தனியார்கள் நடத்தும் இப்போக்குவரத்து எனலாம். பெரும்பாலான அரசு வண்டிகள் ஓட்டை உடைசல்களோடு மூச்சைப் பிடித்துக்கொண்டு ஓடுகின்றன. ஆனால், இந்த வண்டிகள் நன்கு பராமரிக்கப்படுகின்றன. அரசு வண்டிகளில் புளி மூட்டையை அடுக்குவதுபோல் ஆள்களை அள்ளிப் போட்டுக்கொண்டு போகிறார்கள். இவ்வண்டிகளில் அந்த நிலை இல்லை. இவை வடிவில் பெரியனவாகவும் உள்ளன. ஆனால், அரசுப் பேருந்துக் கட்டணத்தினும் பல மடங்கு அதிகக் கட்டணத்தை நேரத்துக்கு ஏற்றாற் போல் உயர்த்தி வாங்குகிறார்கள். வசதியை விரும்புவோரும் அவசரமாகச் செல்வோரும் இவ்வண்டிகளில் பயணம் செய்கிறார்கள். இன்று இப்பேருந்துகளையே ஆம்னிபஸ் என்று குறிக்கின்றனர்.

ஆம்னி பஸ் என்னும் சொல் தொடக்கத்தில் பொதுவாகப் பேருந்தைக் குறிக்கும் ஒரு சொல்லாகவே இருந்திருக்கிறது. காலப்போக்கில் ஒரு குறிப்பிட்ட பேருந்தினைக் குறிக்கும் வகையில் மாறிவிட்டது. ஒத்த அன்புடைய ஆணுக்கும் பெண்ணுக்குமிடையே அமைந்த அன்பினைக் குறித்த "காமம்' என்னும் சொல் காலப்போக்கில் "பாலுணர்ச்சி'யைக் குறிப்பதாகக் குறுகிவிட்டது போன்றது இது. இதனையே சாய்கிரிதர், """"Omni Bus  என்னும் சொல் இலத்தீன் மொழியில் (for all) எல்லோருக்கும் எனப் பொருள்படுகிறது. இக்காலத்தில் அது பெரும்பாலும் தனியார் நிறுவனங்களால் இயக்கப்பெறும் நீள்தூர சொகுசு பேருந்துகளைக் குறிக்கும் சொல்லாய் வழங்கிவருவது வியப்பே'' என்று குறித்துள்ளார். கா.மு. சிதம்பரம், ""தனியார் (Private) விரைவு (Express)ஒப்பந்த (Contract) சுற்றுலா (Tourist) இருமுனை (Point to point)  மாற்று (Spare)சிறப்பு (Special) பேருந்துகளில் எதனுள்ளும் வகைப்படுத்த முடியாதது இப்பேருந்து'' என்று குறித்திருப்பது அழகான விளக்கம்.

சென்னைப் பல்கலைக்கழக அகரமுதலி ஆம்னி பஸ் என்பதற்குப் பேருந்துகலம், பெரிய பொறியூர்தி என்னும் பொருள்களைத் தந்துள்ளது.Car  - மகிழுந்து; Taxi - வாடகையுந்து;  Bus - பேருந்து; Mini Bus  - சிற்றுந்து; Van - - மூடுந்து; Lorry - சரக்குந்து; Jeep  - வல்லுந்து. இப்படிப் பிற ஊர்திகளுக்குப் பெயர்கள் அமைந்திருத்தலால் இச்சொல்லுக்கும் அதே போன்று உந்து என்று முடியும் ஒருசொல் அமைவதே பொருத்தமாகும்.

* க. பலராமன் - பயணியர் உந்து

* சாய் கிரிதர் - நீள்தூர சொகுசுப் பேருந்து

* வானவில் மூர்த்தி - பதிவுப்பேருந்து, பொதுப்பேருந்து

* கா.மு. சிதம்பரம் - குறியிடப்பேருந்து

* பி. சுப்பிரமணியன் - தனிப்பேருந்து

ஆகிய சொற்களைப் பரிந்துரைத்துள்ளனர். இவை, இதன் தனித்தன்மையைக் காட்டும் வகையில் அமையவில்லை. இச்சொல்லிற்கு நேரடித் தமிழாக்கம் செய்வது தெளிவு தருவதாக அமையாது. அதன் தனித்தன்மைகளைக் கருத்தில் கொண்டு சொல்லை உருவாக்குவதே தக்கது. என். ஆர் ஸத்யமூர்த்தி நிறைவுப்பேருந்து என்றும், கோ. மன்றவாணன் நிறைபேருந்து என்றும் குறித்துள்ளவை கருதற்குரியன. இவற்றையொட்டி நிறைபேருந்து என்று குறிக்கலாம். அல்லது கூடுதல் வசதிகள் கொண்டுள்ளதால் சீருந்து என்று குறிக்கலாம். பின்னது சுருக்கமாக இருக்கும்.

Omni Bus - நிறைபேருந்து (அ) சீருந்து

அடுத்த வாரத்திற்குரிய சொல்

Moniker  (மானிகர்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.