அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியினால் புதுப்புதுக் கண்டுபிடிப்புகள் நிகழ்ந்து வருகின்றன. அப்பொருள்களுக்கு வழங்கும் ஆங்கிலச் சொற்களுக்கு நிகராகத் தமிழில் தக்க சொற்களை உடனுக்குடன் கண்டறிய வேண்டிய நிலை எழுந்துள்ளது. முன்பே வந்துள்ள பல ஆங்கிலச் சொற்களுக்குத் தக்க தமிழ்ச்சொற்கள் கண்டறிய வேண்டிய நிலையும் உள்ளது.
ஒரு பொருள் தோன்றுகிற நேரத்திலேயே அதற்குப் பெயர் வைப்பது அவசியம். இல்லை என்றால் அதற்கு ஆங்கிலத்தில் வழங்கும் பெயரே தமிழிலும் இடம்பெற்றுவிடும். சில நேரங்களில் ஒரு பொருளுக்குப் பல சொற்கள் ஆளப் பெறும்போது பலராலும் கையாளப்படும் சொல் வென்று நிற்கும். இன்று "செல்' என்னும் பேசும் கருவி மிகப் பலரிடம் இருக்கிறது. அதனைக் குறிக்கச் சில சொற்கள் வழங்குகின்றன. அதனைச் செல்பேசி, செல்லிடப் பேசி, அலைபேசி, கைப்பேசி என்று குறிக்கின்றனர். எனினும் அலைபேசி, கைப்பேசி என்னும் சொற்களே வழக்கத்தில் உள்ளன. அவ்விரண்டிலும் கைப்பேசியே முதலிடத்தில் இருக்கிறது.
சில பொழுது முன்பு வழங்கிய சொல்லினும் சிறந்த சொல் படைக்கப்பட்டு முன்னைய சொல் வழக்கிழத்தலும் உண்டு. சென்ற நூற்றாண்டில் மொழியாக்கப் பணியில் முனைந்து நின்ற பெருமை பாரதியாரைச் சாரும். அவருக்கு ஆங்கில இதழ்களில் வந்த செய்திகளை உடனுக்குடன் தம் இதழில் மொழிபெயர்த்துத்தர வேண்டிய தேவை இருந்தது. அவர் "ரைட் ஆப் ஓட்டிங்' Right of Voting என்பதைச் "சீட்டுப் போடும் சுதந்திரம்' என்று மொழிபெயர்த்தார். இன்று அச்சொல் வழக்கில் இல்லை; அந்த இடத்தை "வாக்குரிமை' என்னும் சொல் பிடித்துவிட்டது.
சொல்லாக்கம் என்பது ஒரு தவம். வசிட்டர் இராமனிடம் அரசாட்சியை "வாளின் மேல்வரு மாதவம்' என்கிறான். அரசாட்சியை, "வாளின் மேல்வரு மாதவம்' என்றால், சொல்லாக்கத்தைத் "தாளின் மேல்வரு தாங்கரு மாதவம்' எனலாம். சில பொழுது சில சொற்களுக்குத் தக்க சொல் உடன் கிட்டாத நிலையும் ஏற்படுவது உண்டு. இன்று (Member) "மெம்பர்' என்பதை "உறுப்பினர்' என்று எளிதில் குறிக்கிறோம். நாடாளுமன்ற உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர் என்னும் சொற்கள் பெருவழக்காக உள்ளன. ஆனால், இதனை மொழிபெயர்க்க பாரதியார் எவ்வளவு துன்பப்பட்டிருக்கிறார் என்பதனை அவரே பதிவு செய்துள்ளார்:
""மெம்பர் என்பதற்குச் சரியான தமிழ்ச்சொல் எனக்கு அகப்படவில்லை. ஆச்சரியத்திலும் ஆச்சர்யம் "அவயவி' சரியான வார்த்தையில்லை. "அங்கத்தான்' கட்டி வராது. "சபிகன்' சரியான பதந்தான். ஆனால், பொதுஐனங்களுக்குத் தெரியாது. யாரேனும் பண்டிதர்கள் நல்ல பதங்கள் கண்டுபிடித்துக் கொடுத்தால் புண்ணியமுண்டு. அரைமணி நேரம் யோசித்துப் பார்த்தேன். உறுப்பாளி! ஏதெல்லாமோ நினைத்தேன். ஒன்றும் மனதிற்குப் பொருந்தவில்லை. என்ன செய்வேன்! கடைசியாக "மெம்பர்' என்று எழுதிவிட்டேன். இன்னும் ஆர அமர யோசித்துச் சரியான பதங்கள் கண்டுபிடித்து மற்றொரு முறை சொல்லுகிறேன்.''
தமிழுக்கு மீண்டும் ஒரு பொற்காலம் தோன்றியுள்ளது. நாளிதழ்களில் நல்ல தமிழ்ச்சொற்கள் நடையாடுகின்றன. பேருந்து, உலங்கூர்தி, தானி போன்ற சொற்களைச் செய்திகளில் காணும்போது மனம் மகிழ்ச்சியால் நிறைகிறது. மக்களிடமும் தமிழ்ச் சொற்களை உருவாக்கும் முயற்சிக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது என்பது தினமணியின் முயற்சியைப் பாராட்டி 14-3-2015 இல் வெளியான செ.சத்தியசீலனின் கடிதத்தால் விளங்குகிறது. குறைந்த முயற்சியில் நிறைந்த பயன் காண விழைவதே மனித மனம். இலக்கிய வழக்குகள், மக்களின் பேச்சுவழக்குகள் இவற்றின் துணையோடு குறைந்த எழுத்துகளைக் கொண்ட எளிய சொற்களை உருவாக்குவதே பெரும்பயன் அளிக்கும். தனி முயற்சியினும் கூட்டு முயற்சியே நல்ல பயன் தரும்.
வைணவ உரைகள் வளமாக இருப்பதற்குக் காரணம் கூட்டு முயற்சியே. பிறர் சொன்ன கருத்துகளை அவ்வுரைகள் பொன்னேபோல் போற்றிக் கொண்டுள்ளதைக் காணலாம். ஒத்த எண்ணப்போக்கு உடையவர்கள் கூடினால் அருஞ்செயல்களை நிகழ்த்தலாம். வாசகர்களே, தமிழார்வலர்களே, வாருங்கள். சேர்ந்து சிந்திப்போம். அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தும் ஆங்கிலச் சொற்கள், கலைச்சொற்கள், அருஞ்சொற்கள் என்று எல்லாச் சொற்களிலும் சிலவற்றைத் தேர்ந்து தமிழாக்கம் செய்வோம். நல்ல நல்ல தமிழ்ச் சொற்களை உருவாக்கித் தமிழன்னையின் திருவடிகளில் வைத்து மகிழ்வோம்.
சொல் தேடலுக்கான முதல் சொல் (ஸ்டெப்னி) Stepney
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
மண்டாடி தமிழ்ப் புத்தாண்டு போஸ்டர்!

மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ரோஹித் சர்மா புதிய சாதனை!

ஆஷா போஸ்லே மறைவுக்கு இரங்கல் தெரிவித்த ஆஸி. கிரிக்கெட் வீரர்!

அதீத பேட்டரி திறன்... இன்ஃபினிக்ஸ் நோட் 60 ப்ரோ இந்தியாவில் அறிமுகம்!
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

