தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம் வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

சொல் தேடல் -1

சில நேரங்களில் கற்பனை உண்மையைவிட நம்பத்தக்கதாகவும் சுவையானதாகவும் அமைந்து விடுவது உண்டு.

Updated On :28 மார்ச் 2015, 8:26 pm

சில நேரங்களில் கற்பனை உண்மையைவிட நம்பத்தக்கதாகவும் சுவையானதாகவும் அமைந்து விடுவது உண்டு. நெடுநாள்களுக்கு முன்பு நண்பர் ஒருவர் ஸ்டெப் இன் நீடு (Step in need) என்பதன் சுருக்கம்தான் "ஸ்டெப்னி' என்று விளக்கம் சொன்னார். அஃதாவது, தேவைப்படும்போது பயன்படுத்துவது என்றார். அவ்விளக்கம் பொருத்தமாகத் தோன்றியதால் நம்பிவிட்டேன். பின்னரே அஃது அவரது கற்பனை என்பது தெரிய வந்தது.

பெரும்பாலான ஆங்கில அகரமுதலிகளில் இச்சொல் இல்லை. இந்தியாவில் இச்சொல் பயன்பாட்டில் இருக்கிறது. ஆனால், பிரிட்டனில் யாரும் பயன்படுத்துவதில்லை. அமெரிக்க மக்கள் இதனை அறிவார்களா என்பதே ஐயம். அங்கெல்லாம், ஸ்பேர் என்னும் சொல்லையே பயன்படுத்துகிறார்கள்.

இந்த "ஸ்டெப்னி' என்னும் சொல்லின் வரலாறுதான் என்ன? பிரிட்டனில் "வேல்ஸ்' என்னும் பகுதியில் உள்ள ஒரு தெருவின் பெயரே அது. அத்தெருவில் ஓர் இயந்திர வினைஞர் "மெக்கானிக்' வாழ்ந்தார். அவரே முதன்முதலில் கூடுதல் சக்கரங்களை உருவாக்கி நெருக்கடி நேரும்போது பயன்படுத்திக்கொள்ள விற்பனை செய்துவந்தார். அச்சக்கரங்களை வாங்கிய மக்கள் அவை கிடைத்த அந்தத் தெருவின் பெயராலேயே அதனை, "ஸ்டெப்னி' என்று குறித்தார்கள். இப்படி இடத்தின் பெயர் அங்கு உருவாகும் பொருளுக்கு ஆகிவருவது இடவாகுபெயர் ஆகும். "குழிப்பாடி நேரிது' என்றால் அங்கு நெய்யப்பட்ட ஆடை நேரிது என்பது பொருள் என்று எடுத்துக்காட்டுத் தருவர் தமிழ் இலக்கணிகள்.

இன்று நாற்சக்கர, இருசக்கர வாகனங்களில் செல்லும்போது சக்கரங்கள் பொத்தல் விழுந்து காற்று இறங்கிவிடுவதோ, வெடித்துவிடுவதோ உண்டு. அப்போது பயன்படுத்துவதற்குத் துணையாக ஒரு சக்கரத்தை உடன்கொண்டு செல்வர். முற்காலத்தில் மாட்டுவண்டியே முதன்மை வாகனம். மரத்தாலான அதன் சக்கரங்கள் பெரும்பாலும் பழுதடைவதில்லை. வண்டியின் அச்சுதான் சுமைதாங்காமல் முறிந்துபோவதுண்டு.

திருவள்ளுவரும், "பீலிபெய் சாக்காடும் அச்சிறும்' என்று அச்சு முறிவதனையே குறித்துள்ளார். அப்படி அச்சு முறியும்பொழுது பயன்படுத்துவதற்காகக் கூடுதல் அச்சினை எடுத்துச் செல்லும் வழக்கம் உண்டு. தன் தந்தை அதியமான் நெடுமானஞ்சிக்கு உறுதுணையாக இருந்த பொகுட்டெழினியின் சிறப்பை ஒளவையார் உப்பு வணிகர்கள் வண்டியில் இக்கட்டான நேரத்தில் உதவுவதற்காக எடுத்துச் செல்லும் "சேம அச்சு' போன்று அமைந்துள்ளான் என்று (புறம், 102) போற்றியுள்ளார்.

பாதுகாப்புக் கருதி எடுத்துச்செல்லும் அச்சினைச் "சேம அச்சு' என்பது போல, பாதுகாப்புக் கருதி எடுத்துச்செல்லும் சக்கரத்தைச் "சேமச் சக்கரம்' என்று குறிக்கலாம். இப்புறப்பாட்டினையொட்டி, ப.பாண்டிய ராஜா, சு. தமிழ்ச்செல்வி, நா. கிருஷ்ணவேலு, எஸ். சுரேஷ், கோ. மன்றவாணன், சந்திரா மனோகரன், பி.கா.வீரவராசா ஆகியோர் சிந்தித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. அவர்கள் "சேமி உருளி' அல்லது "சேமச்சக்கரம்' என்னும் சொல்லைப் பரிந்துரைக்கிறார்கள். வ.ஜெயப்பிரகாசம், இராம.வேதநாயகம், அ.கருப்பையா, "வானவில்" மூர்த்தி, நா. நஞ்சுண்டன் ஆகியோர் முறையே மாற்றுருளை, மாற்றுப்பொருத்தி, ஆயத்த மாற்றி போன்ற சொற்களைத் தந்துள்ளனர்.

இளைப்பு வந்தபோது பயன்படுத்துவதற்காக வைத்திருப்பதை "எய்ப்பில் வைப்பு' என்று குறிப்பது உண்டு. மாணிக்கவாசகரும் இறைவனை, "காதலர்க்கு எய்ப்பினில் வைப்பு வாழ்க' (திருவண்டப்பகுதி, 105) என்கிறார். "வைத்த மாநிதி' என்பது இறைவன் திருப்பெயர்களுள் ஒன்று. ஊர்ப்புறங்களில் வட்டமான சக்கரத்தை "வட்டை' என்று குறிக்கும் வழக்கம் உண்டு. இவற்றையொட்டி, "வைப்பு வட்டை' என்று சுட்டலாம்.

சக்கரத்தின் செயலைக் காட்டுவது உருளை; வடிவத்தைக் காட்டுவது வட்டை. சேம உருளை, வைப்பு வட்டை என்னும் இவ்விரண்டில் முன்னது நல்ல இலக்கிய வழக்கு; பின்னது எல்லோருக்கும் எளிதில் விளங்குவது. ஆதலின் "ஸ்டெப்னி' என்பதைத் தமிழில் "சேம உருளை' அல்லது "வைப்பு வட்டை' என்று வழங்கலாம்.

Stepney - சேம உருளை / வைப்பு வட்டை

அடுத்த தேடலுக்கான சொல் டைஸ்டோப்பியா (Dystopia)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.