ஆடிப்பாவை

சங்க இலக்கியங்களில் பொதுவாக மாந்தர் கூற்றானது ஒவ்வொருவருக்கும் மாறுபடும். இக்கூற்றுகளில் பரத்தையர் கூற்றுகளில் சில சுவையாகவும், சில புலம்பலாகவும், மற்றும் சில கேலியாகவும் அமைந்திருக்கும். எப்போதும் தலைவியைச் சீண்டுவது போலவே பரத்தையர்
ஆடிப்பாவை

சங்க இலக்கியங்களில் பொதுவாக மாந்தர் கூற்றானது ஒவ்வொருவருக்கும் மாறுபடும். இக்கூற்றுகளில் பரத்தையர் கூற்றுகளில் சில சுவையாகவும், சில புலம்பலாகவும், மற்றும் சில கேலியாகவும் அமைந்திருக்கும். எப்போதும் தலைவியைச் சீண்டுவது போலவே பரத்தையர் கூற்று அமைந்திருக்கும். அவ்வாறு குறுந்தொகையில் அமைந்த மருதத்திணை பாடல்கள் இரண்டினைக் காண்போம்.

 ஒளவையார் பாடிய பாடலில், தலைவி தன்னைப் புறங்கூறினாள் என்று கேட்ட பரத்தை அத்தலைவிக்கு "வேண்டியோர்' கேட்டுமாறு பின்வருமாறு கூறுகிறாள்.

""கூந்தல் ஆம்பல் முழுநெறி அடைச்சிப்

பெரும்புனல் வந்த விருந்திரை விரும்பி

யாம்அஃது அயர்கம் சேறும்; தான் அஃது

அஞ்சுவது உடையவள் ஆயின், வெம்போர்

நுகம்படக் கடக்கும் பல்வேல் எழினி

முனைஆன் பெருநிலை போலக்

கிளையொடு காக்க, தன் கொழுநன் மார்பே!''

(குறு.மருதம்-80)

"ஆம்பலினுடைய கூந்தலைப் போன்று மென்மையான நெறிப்பினைக் கொண்ட முழு நெறித்தழையினை உடுத்திய தலைவனுடன் புதுப்புனலாடச் சென்றேன். அவ்வாறு நான் தலைவனுடன் புதுப்புனலாடுவதற்குத் தலைவி அஞ்சினால், பகைவரைக் கொல்லும் பல வேற்படையும் உடைய எழினி என்னும் வள்ளலின் போர்முனையிடத்தே பசுக்கூட்டத்தைப் பகைவர் கவர்ந்து செல்ல, அவற்றை எழினி காத்தற்போலத் தலைவனைக் காக்கட்டும்' என்று அப்பரத்தை ஆணவமொழி கூறுகிறாள்.

ஆலங்குடி வங்கனாரின் பாடலில்,

""கழனி மாஅத்து விளைந்துஉகு தீப்பழம்

பழன வாளை கதூஉம் ஊரன்

எம்இல் பெருமொழி கூறித், தம்இல்

கையும் காலும் தூக்கத் தூக்கும்

ஆடிப் பாவை போல,

மேவன செய்யும்தன் புதல்வன் தாய்க்கே!''

(குறு.மரு.8)

எனப் பதிவு செய்துள்ளார். "வயல் வரப்பிலே உள்ள மாமரத்தின் பழங்கள் விளைந்து வீழ்கின்ற வேளையிலே பக்கத்து நீர்நிலையில் உள்ள வாளை மீனானது பற்றி உண்ணும் இடமாகிய ஊருக்குரியவன் தலைவன். அவன் இங்கே என்னை பெருமைபடுத்திக் கூறிவிட்டு, தம் வீட்டிலே, முன் நிற்பவர் தம் கையையும் காலையும் தூக்கத் தானும் அவ்வாறே தூக்குகின்ற கண்ணாடியில் தோன்றும் பாவையைப் போலத் தானும் ஆடுவான். தன் மகனுக்குத் தாயாக விளங்கும் தலைவிக்கு, அவள் விரும்பியவற்றை

எல்லாம் செய்து மகிழ்விப்பான்' என்று ஏளனமாகப் பேசிப் புலம்புவாள். சில சமயங்களில் தலைவியை எச்சரிக்கையும் செய்வாள் (மரு.பா.370). இவ்வாறு தலைவியைச் சீண்டிப் பார்க்கும் பரத்தையரும் அக்காலத்தில் இருந்துள்ளனர் என்பதைப்

புலவர்கள் பல பாடல்களில் பதிவு செய்துள்ளனர்.

-சி. மகேஸ்வரி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com