குடம் பிடித்தான் சட்டி கொள்!
நீண்ட நெடுங்காலமாக ஒரு பெண்மணிக்குக் குழந்தைப் பேறு இல்லை. அவள் பல தெய்வங்களை வணங்கினாள். பூஜை செய்தாள். பலன் ஒன்றும் இல்லை.


நீண்ட நெடுங்காலமாக ஒரு பெண்மணிக்குக் குழந்தைப் பேறு இல்லை. அவள் பல தெய்வங்களை வணங்கினாள். பூஜை செய்தாள். பலன் ஒன்றும் இல்லை. ஒருநாள் சித்தர் ஒருவர் கோயிலுக்கு வந்தார். அந்தப் பெண் அவரிடம் தன் குறையைச் சொன்னாள்.
""குடம் பிடித்தான், சட்டி கொள்!'' என்றார் சித்தர். சித்தர்கள் சூட்சுமமாகப் பேசுவார்கள். அப்பெண் படிப்பறிவில்லாதவள். "குடம் பிடித்தானையும், சட்டி கொள்வானை'யும் எங்கு போய்க்
காண்பாள்?
சித்தர் சொன்னதன் பொருள் அவளுக்கு விளங்கவில்லை. குழம்பித் தவித்தாள். மாம்பழக் கவிராயர் என்ற புலவர் அந்த ஊருக்கு வந்திருந்தார். அப்பெண் அவரிடம் சென்று, ""ஐயா, குடம் பிடித்தான், சட்டி கொள்'' என்று ஒரு சித்தர் சொன்னார். அதன் பொருள் என்ன?'' என்றாள்.
புலவர் கூறினார்: ""குடம் என்பதைக் "குக்குடம்' என்று பொருள் கொள்ள வேண்டும். குக்குடம் என்றால் "சேவல்' என்று பெயர். அந்தச் சேவலைக் கொடியில் வைத்திருப்பவன் சேவற்கொடியோன். அவன் யாரென்று உனக்குத் தெரியுமா, அம்மா?''
""தெரியும் ஐயா. அவர்தான் முருகக்கடவுள்''
""ஆம். சட்டி என்பது "கந்த சஷ்டி' என்று பொருள். அந்த முருகப்பெருமானை நினைத்து கந்த சஷ்டி விரதம் இருந்தால் உனக்குக் குழந்தைச் செல்வம் கிட்டும் என்பதையே அந்தச் சித்தர் சொல்லியிருக்கிறார். அப்படியே செய்து வா!'' என்றார் புலவர். அப்பெண் "அப்படியே செய்கிறேன்' என்று கூறி மகிழ்ச்சியுடன் விடைபெற்றுச் சென்றாள்.
பரிபாஷை என்பது பாஷைக்குள்ளாக இருக்கும் எத்தனையோ நயங்களில் இதுவும் ஒன்று! இப்படி "கந்த சஷ்டி' விரதம் பெருமைக்குரியதாகச் சொல்லப்படுகிறது. சஷ்டியில் ஏற்பட்டதே சூரசம்ஹாரம். சூரசம்ஹாரத்திற்கு முருகனின் கை "வேலாயுதமே' பெருமை சேர்த்தது என்பர்.
முருகன் கை வேலின் செயல்கள் பற்றி ஒரு புலவர் இப்படிப் பாடுகிறார்:
அன்பர் பயம் கெடுக்கும்; அத்தி கிரியைத் துளைக்கும்;
இன்ப வள்ளி கண்ணுக்கு எதிராகும்; மின் பரந்த
வாகு தோளில் ஏறி மீறி வாகுசாரி ஓடி ஆடி
வேக சூரன் மார்பிடந்த வேல்!
"முருகப்பெருமானின் கை வேலானது ஒளியுடைய வீரவாகுவின் தோள்களிலே அமர்ந்து, பின் அங்கிருந்து மேலே மேலே உயர்ந்து, அழகாக இடமாகவும், வலமாகவும் சென்று வாயு வேகம் கொண்ட சூரபன்மனின் மார்பைப் பிளந்த வேலானது அடியார்களின் மனத் துன்பத்தை ஒழிக்கும். அந்தக் கிரௌஞ்ச மலையைத் துளைத்துப் பிளக்கும். இன்பக்கொடியைப் போன்ற, முருகனுக்கு வேல் தந்த அன்னை பார்வதி தேவியின் முன் சென்று நிலைபெறும்' என்கிறார்.
அது மட்டுமா? ஆறுமுகம் என்றளவில் அச்சம் தவிர்க்கும் வேலின் வல்லமை பற்றி இன்னொரு புலவர் பாடுகிறார்.
ஆறுமுகம் என்றளவில் அச்சம் தவிர்க்குமே;
வேறு வினை வந்தால் விலக்குமே - கூறுபுகழ்
மாரிஒத்த சூரபன்மன் மார்பிளக்க வேதொடுத்த
வீரசக்தி யான் மிகுத்த வேல்!
எல்லோராலும் போற்றிக் கூறப்படும் புகழையுடைய இடியைப் போன்ற சூரபன்மனின் அகன்ற மார்பைப் பிளந்திடுமாறு வீசிய வீரம் மிக்க வேலானது, "ஆறுமுகம்' என்று சொன்னாலே நமது அச்சத்தை நீக்கும். நம் நலனுக்கு மாறான தீவினைகள் துன்பம் தர வந்தால் அவற்றையெல்லாம் விலக்கிவிடும்' என்கிறார்.
வாழ்வுக்கு வித்தான வேலின் திறத்தைப் பற்றி மற்றொரு புலவர், "இடிபோன்று "தடபட' என்ற ஒலியுண்டாகுமாறு கடலின் அலைமீது செலுத்த, கடலைக்கூட தூளாக ஆகும்படிச் செய்யும் வன்மையுடைய முருகப்பெருமானின் வேலானது தன்னை வழிபடும் அடியாரின் முன் செய்த தீவினையைப் போக்க வல்லது. உள்ளத்தில் அறிவொளியை உண்டாக்கி, நல்ல வாழ்க்கைக்கு அடிப்படையாக இருந்து அதனை வளரச் செய்யும் பெரும் பேற்றை அளிப்பது முருகனின் வேல்' என்கிறார்.
இப்படிப் புலவர் பெருமக்களால் போற்றப்படுகின்ற முருகப் பெருமானின் கை வேல், சூரபன்மனைச் சம்ஹாரம் செய்து பெருமை சேர்த்தது. இப்படி திருச்செந்தூர் பதியில் நடைபெறும் ஈடு இணை இல்லாத கந்த சஷ்டி விழாவில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கண்டுகளிக்கும்போது மழை பொழியலாமா?
"கூடாது' என்று மற்றொரு புலவர் பாடியுள்ளார். பக்தர்கள் மழை பொழிவதற்கு திருவருளை வேண்டுவது போன்று, அதே திருவருளை மழையை நிறுத்துவதற்கும் வேண்டுவது அவர்களது பக்தியின் ஈடுபாடாகும்.
முன்பெல்லாம் "கந்த சஷ்டி' அன்று வேல் வாங்கும்போது, அந்த ஊரில் மழை பொழிவது வழக்கம். ஆறுமுகக் கடவுளைக் காண்பதற்கு இடையூறாக இருக்கின்ற மழையை நிறுத்த வேண்டும். அதற்கும் அவனை வணங்குதலே வழியாகும். செந்தில் ஆண்டவன் திருவிழாவான கந்த சஷ்டி நடந்த சமயம் மழை பெய்தது. பக்தர்களின் குரலாக நின்றார் பக்தியுள்ள புலவர் ஒருவர். மழை நிற்க வேண்டி மனமுருகி இப்பாடலைப் பாடினார்.
வந்து மழை பொழியும் வானே, வெஞ்சூர் தடிந்த
கந்தர் திருவிழாக் காலத்தில் தொந்தரையாம்
நீர்த்துளியை யூற்றிவிடல் நேர்த்தியல;
- மாற்றிவிடு; நேரான
கீர்த்தி வரும் நாட்டில் இதைக்கேள்!
தக்க காலத்தில் தோன்றி மழையைப் பொழியும் மேகமே! கொடிய அசுரனான சூரபன்மனை வென்ற முருகப்பெருமானின் திவ்வியமான "கந்த சஷ்டி' விழா நடைபெறும் இக்காலத்தில் தொந்தரவு தரும் நீர்த்துளியை ஊற்றாதே! தாரை தாரையாகப் பொழியும் மழையை மாற்றிவிடு. வேறு எங்காவது போய் இதே மழை பொழியட்டும். இதனால் அருள் வடிவான கந்தப் பெருமானால் உனக்குக் கீர்த்தி உண்டாகும். உனக்குப் புகழை உண்டாக்கக்கூடிய என் பேச்சைக் கேள்!'' என்கிறார் புலவர்.
மேற்குறித்த பாடல்கள் எல்லாம் "தனிப்பாடல்' திரட்டு தொகுப்பில் உள்ளவை. இந்தப் பாடல்களையெல்லாம் இன்னார் பாடினார்கள் என்ற குறிப்பு இல்லை. இவற்றை "பல புலவர்கள் பாடிய பாடல்கள்' என்ற அளவிலேயே குறிப்பிட்டுள்ளார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...