தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம் வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

சொல் தேடல் -29

தமிழ் நாட்டில் ஒரு காலத்தில் பரந்து விரிந்து திகழ்ந்து இன்று குறுகிச் சுருங்கி இன்னும் ஆக்கிரமிப்பு நடக்குமோ என்ற அச்சத்தில் உயிரைப் பிடித்துக்கொண்டிருக்கும் ஏரி குளங்களைக் காணும்போது வியப்பு மேலிடுகிறது!

Updated On :10 அக்டோபர் 2015, 7:33 pm

தமிழ் நாட்டில் ஒரு காலத்தில் பரந்து விரிந்து திகழ்ந்து இன்று குறுகிச் சுருங்கி இன்னும் ஆக்கிரமிப்பு

நடக்குமோ என்ற அச்சத்தில் உயிரைப் பிடித்துக்கொண்டிருக்கும் ஏரி குளங்களைக் காணும்போது வியப்பு மேலிடுகிறது!

"தமிழ்த் தென்றல்' திரு.வி.க.வின் வாழ்க்கைக் குறிப்புகளைப் படித்தால் அக்காலத்தில் சென்னையைச் சுற்றிலும் எத்தனை ஏரிகள் இருந்தன என்பதை அறியலாம். அறுபதாண்டுகளுக்கு முன்பு ஏரியாக இருந்த இடத்தில்தான் இன்று வள்ளுவர் கோட்டம் பெருமிதத்தோடு எழுந்து நிற்கிறது. மயிலாப்பூர் ஏரி இருந்த இடந்தான் தியாகராய நகராக மாறியிருக்கிறது. ஏரி குளங்கள் அக்கால மன்னர்கள் மக்களின் நல்வாழ்வில் காட்டிய அக்கறையின் தேக்கங்கள்; உழைப்பில் உருவான உன்னதங்கள். அவற்றை வெட்டக் கற்பிளந்து நிலன் அகழ்ந்து காய்த்துப்போன கைகள் எத்தனையோ? எத்தனை நாள் எத்தனை பேர் உழைத்து உருவாக்கினரோ? உழைப்பாளிகள் வலியில்தான் நமக்கு இன்ப வாழ்வு வாய்த்திருக்கிறது. அவர்களுக்கு யானை போன்ற விலங்குகள் உதவியிருக்கலாம். மற்றப்படி எல்லாம் மனிதவுழைப்பே. இன்று இயந்திரங்களின் பயன்பாடு மனிதவுழைப்பைக் குறைத்து மிச்சப்படுத்தியுள்ளது. அத்தகைய இயந்திரங்களுள் ஒன்றே Bull dozer.

இந்த இயந்திரம் பெரும்பாலும் குவிந்துகிடக்கும் மண், மணல், குப்பை இவற்றைத் தள்ளுவதற்கும் அள்ளுவதற்கும் பயன்படுகிறது. தூர் வாருதல், சாலை அமைத்தல், சுரங்கந்தோண்டுதல் போன்ற கட்டுமானப் பணிகளில் இதன் பயன்பாடு மிகுதி. எதிரிகளின் குண்டுகளைத் தாங்கி முன்னேறும் வகையில் வடிவமைக்கப்பட்டுப் போர் முனையிலும் பயன்படுத்தப்படுகிறது. இதனை முதன் முதலில் James Cummings, Earl McLeod என்னும் இருவர் உருவாக்கினர் என்றும், அதன் மாதிரி வடிவம் அமெரிக்காவில் கன்ஸாஸ் மாநிலத்தில் மாரோவில் என்னுமிடத்தில் வைக்கப்பட்டிருக்கிறது என்றும் ஒரு குறிப்பு தெரிவிக்கிறது.

இதனைக் குறிப்பதற்கு வாசகர்கள் பல அழகான தமிழ்ச் சொற்களை உருவாக்கியுள்ளனர். எஸ். சுரேஷ் ஆனைவண்டி என்று கற்பனை நயத்தோடு ஒரு சொல்லை எழுதியுள்ளார். கா.மு. சிதம்பரம் நாம நூறி என்னும் செஞ்சொல்லைக் கூறியுள்ளார். ஆனைத்தொழில் என்பது அருஞ்செயலைக் குறிக்கும். பெருமாள் வராகமாகத் தோன்றி எப்பொருளும் அசையாதவாறு பூமியை எடுத்துப் பெரிய ஆனைத்தொழில் செய்தான் என்கிறது ஈட்டுரை. ஆனால், ஆனைவண்டி என்றால் ஆனைபோல் பெரிய வண்டி என்றோ, ஆனையால் இழுக்கப்படும் வண்டி என்றோ பொருள்படும். இந்த இயந்திரம் பெரியது என்றாலும் அதனால் இதற்குச் சிறப்பு இல்லை. சரக்குந்தும் பேருந்தும் பெரியவைதானே?

பேம், நாம், உரும் என்னும் மூன்றும் அச்சப் பொருளைக் குறிக்கும் உரிச்சொல் என்கிறது தொல்காப்பியம். அச்சப்பொருளைத் தரும் நாம் என்பதிலிருந்து நாம என்னும் சொல்லையும், தகர்த்தல் என்னும் பொருளைத் தரும் நூறு(தல்) என்பதிலிருந்து நூறி என்னும் சொல்லையும் உருவாக்கி நாம நூறி என்னும் பெயரைக் குறிப்பிட்டுள்ளதற்குப் பாராட்டு. நாம நூறி என்பது அச்சமூட்டும் தகர்ப்பு இயந்திரம் என்று பொருள்படும். இச்சொல்லும் இவ்வியந்திரத்தின் பயன்பாட்டைச் சிறப்பாகக் குறிக்கவில்லை. இனி மற்றத் தமிழாக்கங்களைப் பார்க்கலாம்.

*   அன்பழகன் - மண்புரட்டி

*   ராஜசிம்மன் - சமன்செய் இயந்திரம்

*   சந்திரா மனோகரன் - மண் சமன்பொறி

*  சோ. முத்துமாணிக்கம் - தகர் வல்லுந்து

*   என்.ஆர். ஸத்யமூர்த்தி - நிரவல் பொறி, தடை தகரி

*   வ.மோ. கோட்டீஸ்வரன் - நிலச் சமனி

*  நாகராஜன் - மண் நிரவி

*   வெ. ஆனந்தகிருஷ்ணன் - நிலச்சமன் பொறி (சமனி)

*  சி. இராமச்சந்திரன் - மண் சமன் பொறி,

நிலச்சமன் எந்திரம்

*   ச. கிருஷ்ணசாமி - கனரகப் பொறி, கனரகத் தகர்ப்பான்

*  நா. கிருஷ்ணவேலு - கனரக ஊர்தி

மன்றவாணன் இவ்வியந்திரத்தின் ஒவ்வொரு செயலையும் கருத்திற்கொண்டு தகர்ப்பூர்தி, இடிப்பூர்தி, முட்டூர்தி, சமனி, தகரி என்னும் சொற்களைத் தந்துள்ளார். இவர்கள் குறித்துள்ளவற்றுள் நிரவல் பொறி, நிலச்சமனி, மண்நிரவி மூன்றும் ஏற்ற சொற்கள். சமப்படுத்தலில் மேட்டைக் கரைத்தல், பள்ளத்தை நிரப்புதல் என்னும் இரு தொழில்கள் அடங்கியுள்ளன. சமப்படுத்தலைப் பேச்சுவழக்கில் நிரவல் என்பர். ஆதலின் நிரவல்பொறியைச் சுருக்கி நிரவி எனலாம். அல்லது சமனி என்றும் குறிக்கலாம். உதவு என்னும் வினைப்பகுதியிலிருந்து உதவி என்னும் பெயர் வருவதுபோல நிரவு என்பதிலிருந்து நிரவி வருகிறது. சமன்படுத்துவது சமனி. சமன் என்பது இகர விகுதி பெற்றுச் சமனியாகிறது.

Bull dozer.. - நிரவி அல்லது சமனி

அடுத்த வாரத்திற்குரிய சொல் : Repartee

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.