குணமாலை தன் தோழியுடன் பல்லக்கு ஏறி வீதி வழியே சென்று கொண்டிருந்தபோது, அசனிவேகம் என்னும் பெயருள்ள யானை மதங்கொண்டு பாகர்க்கு அடங்காமல் வீதி வழியே ஓடி வந்தது. குணமாலையின் பல்லக்கைத் தூக்கிச் சென்றவர்கள் மதயானைக்கு அஞ்சி, சிவிகையைக் கீழே வைத்துவிட்டு உயிர் தப்பி ஓடிவிட்டார்கள். யானை குணமாலைக்கு அருகில் வந்துவிட்டது. தப்பி ஓட முடியாமல் அவள் அஞ்சி நடுங்கினாள். அப்போது தோழர்களோடு அவ்வழியே வந்த சீவகன், குணமாலையின் ஆபத்தைக் கண்டு, யானைப் போரில் பழகியவன் ஆதலின், திடுமென ஓடி, சிங்கம் போல் கர்ச்சித்து, யானையின் முன்பு பாய்ந்து, அதன் மதத்தை அடக்கினான். குணமாலை அச்சத்தால் மெய் நடுங்கி நின்றாள்.