முன்னாளில் நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்குபவரை, விழா ஏற்பாட்டாளர் தலைமை ஏற்க முன்மொழியப் பிறிதொருவர் வழிமொழிவார். தலைமையுரை நிகழும். தொடர்ந்து தலைவரே பங்குபெறுவோர்களை அறிமுகப்படுத்த, அவர்கள் உரை நிகழ்த்துவார்கள். பிறகு தலைவரின் முடிவுரை நிகழும். விழா நடத்துபவர் நன்றியுரை கூறி முடிப்பார்.
இந்நாளில் நிகழ்ச்சிகளை இணைப்பவராக ஒருவர் இருக்கிறார். காலப்போக்கில் உண்டான மாற்றத்தின் அடையாளம் இவர். இவரே விழாவைத் தொடங்கி, அடுத்து நடைபெறுவனவற்றையெல்லாம் அறிவிக்கிறார். தலைவரை அறிமுகப்படுத்துகிறார். ஒவ்வொரு பேச்சாளருக்கும் முன்னர் அவரைப் பற்றிய குறிப்புகளையும், பின்னர் அவர் உரையின் தகுதிகளையும் பற்றிப் பேசுகிறார். சுருங்கச் சொன்னால் இவரே நிகழ்ச்சியை ஆளுகிறார். முன்தயாரிப்போடு அளவாக இணைப்புரை வழங்குவோரால் கலந்து கொள்ளுவோர்கள் சரியாக அறிமுகப்படுத்தப் படுகிறார்கள். இது விளையும் நன்மை. இணைப்புரையாளர் சிலர் பேச்சாற்றல் உடையவராய் இருப்பர். அவர்கள் தங்கள் ஆற்றலைக் காட்ட வேண்டும் என்னும் ஆர்வத்தில் அதிக நேரம் பேசிவிடுவதும் உண்டு. இதனால் நிகழ்ச்சி சலிப்பூட்டுவதாய் அமைந்து, பேச்சாளர்களுக்குப் போதிய நேரம் கிடைக்காமல் போய்விடும். இஃது அளவுக்கு அதிகமான முகப்பூச்சு முகத்தின் அழகை உயர்த்தாமல் கெடுப்பதுபோல் அமைந்துவிடுகிறது. இவர்கள் பணி மேடையில் இருப்போரையும் அவையில் இருப்போரையும் இணைப்பதாகும். இவர்களையே ஆங்கிலத்தில் Compere அல்லது Master of the ceremony என்பர்.
வானொலி அல்லது தொலைக்காட்சி நிலையங்களிலிருந்து செய்திகள் வாசிக்கப்படுகின்றன. செய்தி வாசிப்பவர் வெவ்வேறு பகுதிகளில் உள்ள நிருபர்களோடு தொடர்பு கொண்டு ஒரு நிகழ்வு பற்றி அவ்வப்பகுதிகளில் நிலவும் கருத்துகளைத் தெரிவிக்கும்படி செய்து, அந்நிகழ்வு பற்றிய முழுத் தகவல்களையும் வழங்குவார். இந்நிலையங்களில் பல்வேறு தலைப்புகளில் விவாதங்கள் நிகழ்கின்றன. அவற்றை நெறிப்படுத்துவார். அரசியல் தலைப்பாயின் பங்கேற்பவர்கள் தங்கள் தங்கள் பக்கத்துக் கருத்தே சரியென்று தயங்காமல் வாதிடுவார்கள். அவர்கள் வாதம் "பிடிவாத'மாகவும், "பக்கவாத'மாகவும் அமைந்துவிடும்.
அப்பொழுது நிகழ்ச்சியை மையப்புள்ளியிலிருந்து விலகாமல் காத்து ஒருங்கவிடும் பணியினைச் செய்வார். அவரே வினாக்கள் தொடுத்தும் ஐயங்களை எழுப்பியும் மெய்ம்மையை நோக்கி விவாதத்தை நகர்த்திச் செல்ல முயல்வார். இவ்வாறு நங்கூரம் கப்பலை விலகிச் செல்லாமல் நிலைநிறுத்துவது போல் விவாதம் மையக் கருத்திலிருந்து விலகாமல் தடுத்து நிறுத்துபவர்களை Anchor என்று குறிக்கிறார்கள்.
இருவகையினரும் வெவ்வேறு நிகழ்ச்சிகளை இணைப்பவர்கள். ஆயினும் முதல் வகையின் (Compere ) ஓர் இடத்தில் நிகழும் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைக்கிறார்கள்; இரண்டாம் வகையினர் (Anchor) வெவ்வேறு இடங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளையும் நிருபர்களையும் இணைக்கிறார்கள். முதல் வகையினரினும் இரண்டாம் வகையினருக்கு நிகழ்வுகள் குறித்த முழுமையான தெளிவும் சூழ்நிலைக்கேற்பச் செயற்படும் நுண்ணறிவும் வேண்டும். இதிலும் ஒரு தீமை உண்டு. இத்தகைய திறனுடைய ஒருங்கிணைப்பாளர் சிலர் மற்றவர்களைப் பேசவிடாமல் தாங்களே பேசித் தீர்த்துவிடுகின்றனர். இது குழந்தையைக் கண்டிக்கச் செல்லமாக உயர்த்திய கை வேகமாக விழுந்து அழ வைப்பதைப் போன்றது. முதல் வகையினர் மேடையோடு தொடர்புடையவர்கள். அருகில் நடைபெறுவதைப் பற்றிப் பேசுபவர்கள். இரண்டாம் வகையினர் ஊடகங்களோடு தொடர்புடையவர்கள். தொலைவில் நடைபெறுவதைப் பற்றித் தெரிவிப்பவர்கள். இதுவே Compere க்கும் Anchorக்கும் இடையே உள்ள அடிப்படை வேறுபாடு.
Anchor என்பதை ச.மு. விமலானந்தன் "நிகழ்ச்சி நிரலாளர்' என்றும், வாரண்ட் பாலா "நிகழ்வைத் தாங்குநர்' என்றும், வெ.ஆனந்த கிருஷ்ணன் நிரலாளர், நிரலியாளர் என்றும் தமிழ்ப்படுத்தலாம் என்கின்றனர். மீ. காசுமான் தொலைபேசியில் அழைத்து "நிரல் நிலையர்' என்று குறிக்கலாம் என்றார். டி.வி. கிருஷ்ணசாமி "நிகழ்ச்சி அதிகாரி' என்றும், சந்திரா மனோகரன், ராஜசிம்மன், சி.இராமச்சந்திரன், நா.கிருஷ்ணவேலு, இரா.மோகனசுந்தரம் ஆகியோர் "தொகுப்பாளர்' என்றும், கோ. மன்றவாணன் "நிகழ்வொருங்கர்' என்றும் குறித்துள்ளனர். ப. இரா. இராசஅம்சன் மட்டும் ஊடகங்களோடு தொடர்புபடுத்தி "ஊடக நிரலர்' என்று சுட்டலாம் என்கிறார். இவற்றில் Compere என்பதை நிகழ்ச்சியாளர், தொகுப்பாளர் என்னும் சொற்களாலும்Anchor என்பதைத் தெளிவு
கருதி ஊடக நிரல் நிலையர் என்றோ, வறிதே நிரல் நிலையர் என்றோ குறிக்கலாம். ஏனெனில், அவ்வாங்கிலச் சொல்லுக்கு நிலைப்படுத்துபவர் என்பதே நேரடிப் பொருள். நிரல் என்பது ஒழுங்கு என்பதைக் குறிக்கும் நல்ல தமிழ்ச்சொல்.
Anchor - ஊடக நிரலர் அல்லது நிரல் நிலையர்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
மண்டாடி தமிழ்ப் புத்தாண்டு போஸ்டர்!

மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ரோஹித் சர்மா புதிய சாதனை!

ஆஷா போஸ்லே மறைவுக்கு இரங்கல் தெரிவித்த ஆஸி. கிரிக்கெட் வீரர்!

அதீத பேட்டரி திறன்... இன்ஃபினிக்ஸ் நோட் 60 ப்ரோ இந்தியாவில் அறிமுகம்!
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

