வல்லாரா? வல்லுநரா?
பழந்தமிழில் வல்லார், வல்லுநர் என்னும் சொற்கள் முறையே வல்லமை இல்லாதவரையும் வல்லமை உடையவரையும் குறிக்கப் பயன்பட்டன.


பழந்தமிழில் வல்லார், வல்லுநர் என்னும் சொற்கள் முறையே வல்லமை இல்லாதவரையும் வல்லமை உடையவரையும் குறிக்கப் பயன்பட்டன.
""வல்லா ராயினும் வல்லுநராயினும்'' (புறநா.57:1) எனும் இலக்கிய ஆட்சி இதற்குச் சான்று. இவ்விரு சொற்களுள், "வல்லார்' என்பது "மாட்டார்' என்னும் பொருள் தருவதற்கு இலக்கியச் சான்றுகள் நிறைய உண்டு.
""இல்லின் வாழ்க்கை வல்லாதோரே'' என்பது நற்றிணை (84:12). இதில், வல்லாதோர் - மாட்டாதவர் என்று பொருள். இவ்வாறே, ""வல்லா தீமோ'' எனும் ஐங்குறுநூற்றுக்கு (149:3) வல்லமையின்றி இருப்பாயாக என்று பொருள். மேலும், பதிற்றுப்பத்து (52:26) இன்னா நாற்பது (28) போன்ற நூல்களிலும் முறையே மாட்டாய், மாட்டாதான் என்னும் பொருள்களில் வல்லாய், வல்லாதான் என்னும் சொற்கள் இடம் பெற்றுள்ளன.
""வல்லினும் வல்லார் ஆயினும்'' என்னும் அகநானூற்றிலும் (152:19) "மாட்டார்' என்னும் பொருளே காணப்படுகிறது. எனினும், நற்றிணையில் ""பெறினும் வல்லேன்மன் தோழி யானே'' (275:9) என்னுமிடத்து, "வல்லேன்' என்பது வலிமையுடையேன் என்னும் பொருளிலும் வந்துள்ளது.
இங்ஙனம் உடன்பாட்டுப் பொருளில் வருவதற்குத் திருக்குறளிலும் சான்றுகள் உள்ளன.
""கருமம் சிதையாமல் கண்ணோட வல்லார்க்கு''
(578)
""இன்சொலால் ஈத்தளிக்க வல்லாற்கு'' (378)
""தக்கார் இனத்தனாய்த் தான் ஒழுக வல்லானை''
(446)
என வருவதைக் குறிப்பிடலாம். ""அருள்வல்லான் ஆக்கம்போல்'' என்று கலித்தொகையிலும் (38:16) இதே பொருள் காணப்படுகிறது. மேலும், திருமந்திரம்(1149) சீவகசிந்தாமணி (983) போன்றவற்றிலும் "வல்லான்' என்பதற்கு இதுவே பொருளாக உள்ளது. எனவே, முற்காலத்தில் ஒன்றில் வல்லமை உடையவரைக் குறிப்பதற்காக,
""வல்லுநர் வாழ்ந்தோர் என்ப'' (புறநா.29:34)
""யாங்கு வல்லுநர் கொல்லோ?'' (குறுந்.356:5)
""வன்கண் கொண்டு வலிந்து வல்லுநரே''
(குறுந்.395:3)
என்றவாறு வழக்கில் இருந்த "வல்லுநர்' என்பது மெல்ல மறைய, அதன் இடத்தை வல்லார் (ன்) வல்லோர் (ன்), வல்லவர் (ன்) போன்ற சொற்கள் பிடித்துக்கொண்டன.
ஆக, வல்லார், வல்லுநர் என்னும் சொற்களுக்குப் புறநானூற்றுப் புலவர் கருதியது போன்ற பொருள் வேற்றுமை இன்றைக்கு இல்லை. இரு சொற்களும் வலிமையுடையவன் என்னும் ஒரு பொருளையே உணர்த்துகின்றன. ஆயினும், வல்லுநர் என்பது மிகுதியும் வழக்கில் இல்லை. "வல்லான்(ர்)' என்பதே பெருவழக்கு.
""வல்லான் வகுத்ததே வாய்க்கால் எனும் பெரும்
வழக்குக்கு இழுக்கு முண்டோ?'' என்னும் தாயுமான சுவாமிகள் திருப்பாடலில் இச்சொல்லின் பொருள் அனைவர்க்கும் விளங்குமாறு அமைந்திருத்தல் காண்க.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...