பரிபாடலில் பல குரலிசை!
எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று பரிபாடல். இந்நூலில், முருகன், திருமால், வையை பற்றிய இறையுணர்வுப் பாடல்கள் துலங்கக் காணலாம்.


எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று பரிபாடல். இந்நூலில், முருகன், திருமால், வையை பற்றிய இறையுணர்வுப் பாடல்கள் துலங்கக் காணலாம். இசை பொருந்திய பாடல்களை உடையவை பரிபாடல். "செவ்வேள்' பற்றிய பதினேழாம் பாடல் இலக்கியச் சுவை நிரம்பியது. இதைப் பாடியவர் நல்லழிசியார். இசை அமைத்தவர் நல்லச்சுதனார். இப்பாடல் "நோதிறம்' என்ற பண்ணில் அமைந்தது. நல்லழிசியார், திருப்பரங்குன்றத்தில் உறையும் செவ்வேளாகிய முருகப் பெருமானைத் தரிசிக்கப் போனார். அப்போது ஓர் அற்புதமான பாடல் பிறக்கிறது. அப்பாடல் வருமாறு:
""தேம்படு மலர் குழை பூந்துகில் வடி மணி
ஏந்து இவை சுமந்து சாந்தம் விரை இ
விடை அரை அசைத்த வேலன் கடிமரம்
பரவினர் உரை யொடு பண்ணிய இசையினர்
விரிமலர் மதுவின் மரம் நனை குன்றத்து
கோல் எரி கொளை நறை புகைக் கொடி ஒருங்கு எழ
மாலை மாலை அடி உறை, இயை நர்
மேலோர் உறையுளும் வேண்டுநர் யா அர்
ஒரு திறம் பாணர் யாழின் தீங் குரல் எழ
ஒரு திறம் யாணர் வண்டின் இமிர் இசை எழ
ஒரு திறம் கண் ஆர் குழலின் கரைபு எழ
ஒரு திறம் பண் ஆர் தும்பி பரந்து இசை ஊத
ஒரு திறம் மண் ஆர் முழவின் இசை எழ
ஒரு திறம் அண்ணல் நெடு வரை அருவி நீர் ததும்ப
ஒரு திறம் பாடல் நல் விறலியர் ஒல்குபு நுடங்க
ஒரு திறம் வாடை உளர்வயின் பூங்கொடி நுடங்க
ஒரு திறம் பாடினி முரலும் பாலை அம் குரலின்
நீடு கிளர் கிழமை நிறை குறை தோன்ற
ஒரு திறம் ஆடுசீர் மஞ்ஞை அரிக் குரல் தோன்ற
மாறு மாறு உற்றனபோல் மாறு எதிர்கோடல்
மாறு அட்டான் குன்றம் உடைத்து
பாடல் சான்று பல் புகழ் முற்றிய
கூடலோடு பரங்குன்றின்.....''
பகைவரான அவுணரை வென்ற முருகப் பெருமானின் திருப்பரங்குன்றம். அங்கு ஒரு பக்கத்தில் பாணரின் யாழின் இனிமையான இசை ஒலிக்கிறது. மற்றொரு பக்கத்தில் பூக்களாகிய வருவாயையுடைய வண்டுகளின் இனிய ரீங்கார இசை ஒலிக்கிறது. ஒருபுறம் கணவனுடைய புல்லாங்குழல் ஓசை ஒலித்துக் கொண்டிருக்கிறது. மற்றொரு பக்கம் வண்டினங்கள் பண்களைப் போல் பரவும் இசையை எழுப்பிக் கொண்டிருக்கின்றன. வேறொரு பக்கம் மண் பூசப்பட்ட முழவினது முழக்கம் ஒலிக்கிறது. மற்றொரு பக்கம் தலைமைத் தன்மையுடைய மலையுச்சியினின்றும் வீழும் அருவி நீரின் ஆரவார ஓசை கேட்கும். மற்றொரு பக்கம் பாடலில் வல்ல ஆடல் மகளிர் அசைந்து ஆடுவர். மற்றொரு பக்கம் பாணர் மகளிர் பாடும் பாலைப் பண்ணான அழகிய மிடற்றுப் பாடலின் நெடிய கிளர்ச்சியுடைய நாலூ தாக்குடைய குறையும் விளங்கும். வேறொரு பக்கம் சீருக்குப் பொருந்த ஆடும் அழகிய மயிலின் அகவல் குரல் எழும். இங்ஙனமாக ஒன்றற்கு ஒன்று வேறு வேறாகும் தன்மையுற்றவை போல் இப் பலகுரலிசை மாறுபாடுகளை திருப்பரங்குன்றம் பெற்றுள்ளது.
ஆங்கிலத்தில் "கோரஸ்' என்று சொல்லப்படும் பலகுரலிசையை இப்பாடல் மூலம் அனுபவிக்கலாம் அல்லவா!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...