உ.பி.யில் கனமழையால் 89 பேர் பலி! ரஷிய அதிபர் புதின் இரங்கல்!செய்தித்துறை இயக்குநராக அருண் தம்புராஜ் நியமனம்!கேரளத்தில் காங்கிரஸ் சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக வி.டி. சதீசன் தேர்வு!பருத்திக்கான இறக்குமதி வரியை ரத்து செய்யக்கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் கடிதம்!பதவி ஆசை பிடித்தவர்களின் இழிசெயலை முறியடிப்போம்: எடப்பாடி பழனிசாமி!கேரள மார்க்சிஸ்ட் கம்யூ. சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக பினராயி விஜயன் தேர்வு!
/

திருப்பாவையில் இயற்கைக் காட்சிகள்!

வேதமனைத்திற்கும் வித்தாகும் என்று போற்றப்பட்ட திருப்பாவை, பக்திச் சுவையோடு இயற்கை எழில்களையும், இலக்கியச் செறிவையும் கொண்ட திவ்யப் பிரபந்தமாகும்.

News image
Updated On :18 டிசம்பர் 2016, 2:15 am IST

வேதமனைத்திற்கும் வித்தாகும் என்று போற்றப்பட்ட திருப்பாவை, பக்திச் சுவையோடு இயற்கை எழில்களையும், இலக்கியச் செறிவையும் கொண்ட திவ்யப் பிரபந்தமாகும்.
திருப்பாவை பாடல்கள் அனைத்துமே பக்தியைப் பாடுவதாக அமைந்திருப்பினும், இயற்கைக் காட்சிகளை மறவாமல் அப்பாடல்களில் பதித்துள்ளார் ஆண்டாள் நாச்சியார். அவற்றில் சில காட்சிகளைக் காண்போம்.
ஆண்டாள், தன் சிறுவயதிலேயே, தான் வசிக்கும்
ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள நெல் விளையும் கழனிகளை நுண்ணிய உணர்வுடன் பார்க்கின்றாள்.
அவ்வயல்களில், நெற்பயிர்கள் உயர்ந்து, பருத்து வளர்ந்துள்ளன. அப்பயிர்களின் இடையில் கயல் மீன்கள் துள்ளுகின்றன. அருகில் குவளை மலர்களில் அழகிய வண்டுகள் உறங்குகின்றன. அங்குள்ள பசுக்கள், குடம் குடமாகப் பாலை சொறிகின்றன. இவ்விதம் குறையாமல் பால் கொடுக்கும் பசுக்களை வள்ளல் குணம் கொண்டதாகக் கருதுகிறாள். இதையே அழியாத செல்வமாகவும் காண்கின்றாள். இக்காட்சியை,

""ஓங்கு பெருஞ்செந்நெல் ஊடு கயலுகள
பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்ப
தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலை பற்றி
வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள்
நீங்காத செல்வம்''

என்று பாடிப் பரவசமளிக்கிறாள். கீழ்வானம் வெள்ளென இருக்கும் காலை நேரத்தில், வீட்டின் பின்புறத்தில் உள்ள தோட்டத்தில் ஒரு தடாகம் உள்ளது. அத்தடாகத்தில் உள்ள செழுங்கழுநீர் மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன. அதேசமயம் நெய்தல் பூக்கள் முகம் குவிக்கின்றன. அந்நேரத்தில், காவியுடை உடுத்தவர்களும், வெண்மையான பற்களை உடையவர்களுமான சந்நியாசிகள் கூட்டம் கூட்டமாகக் கோயிலுக்குச் செல்கிறார்கள். இக்காட்சியைக் கண்ணுற்ற ஆண்டாள்,

""உங்கள் புழக்கடை தோட்டத்து வாவியுள்
செங்கழுநீர் வாய்நெகிழ்ந்து ஆம்பல்வாய் கூம்பினகாண்
செங்கல் பொடிக்கூறை வெண்பல் தவத்தவர்
தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போதந்தார்''

எனப் பாடுகிறாள். மற்றுமொரு காட்சி, அதிகாலையில், கோழிகள் எல்லா இடங்களிலும் வந்து கூவுகின்றன. குருக்கந்திக் கொடி பந்தலின் மேல் குயில் கூட்டங்கள் பலமுறை கூவி அழைக்கின்றன. இக்காட்சியைக் கண்டும் கேட்டும் சுவைக்கிறாள் ஆண்டாள். இதûனைத் தனது திருப்பாட்டில் பொருத்தமாக சேர்த்துப் பாடுகிறாள்.

""கந்தம் கமழும் குழலி! கடைதிறவாய்
வந்தெங்கும் கோழி அழைத்தனகாண், மாதவிப்
பந்தல்மேல் பல்கால் குயிலினங்கள் கூவினகாண்''

இவ்விதம், பக்திப் பாசுரத்திலும் இயல்பாக நிகழும் இயற்கைக் காட்சிகளை எடுத்தியம்பும் ஆண்டாளின் இயற்கை அன்பு வெளிப்படுகின்றதன்றோ?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.