சங்க இலக்கியத்தில் நாட்டு மருத்துவம்

'நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்' என நோயில்லாத் தன்மையையே நம் முன்னோர் மிகப்பெரிய செல்வமாகக் கருதினர். 
சங்க இலக்கியத்தில் நாட்டு மருத்துவம்

'நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்' என நோயில்லாத் தன்மையையே நம் முன்னோர் மிகப்பெரிய செல்வமாகக் கருதினர். ஒரு நாட்டின் தட்ப வெப்ப நிலைகளால் ஏற்படும் நோய்களுக்கு அந்தந்த நாட்டில் கிடைக்கும் மூலிகைப் பொருள்களைக்கொண்டு பாமர மக்கள் தம் பட்டறிவால் செய்துவரும் மருத்துவ முறையை "நாட்டு மருத்துவம்' என்று கூறுவர். தொல்காப்பியர் செய்யுளியலில் பெரியோர்கள் வாழ்த்தும் முறை பற்றி ஒரு நூற்பா பாடியுள்ளார். அதற்கு "வாயுறை வாழ்த்து' என்று பெயர்.

""வாயுறை வாழ்த்தே வயங்க நாடின்
வேம்பும் கடுகும் போல வெஞ்சொல்''

""வாய் என்பது வாய்மொழி; உறை என்பது மருந்து. வாயுறை என்பது சொல் மருந்தென பண்புத்தொகையாம். இனி வாய்க்கண் தோன்றிய மருந்தென வேற்றுமைத் தொகையுமாம்'' எனப் பேராசிரியர் உரை எழுதியுள்ளார். ""ஒருவருக்குக் கருஞ்சொல் சொல்லாது பின்னாளில் நல்லது பயக்க வேண்டிய அதாவது, முன்னால் கசந்து பின்னால் உடலுக்கு உறுதி (நன்மை) பயக்கும் வேம்பும் கடுகும் போல'' என்று மேலும் உரை விளக்கம் அளித்துள்ளார். இலக்கியத்தில் நாட்டு மருத்துவம் பற்றிப் பரவலாகப் பல இடங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவற்றுள் சிலவற்றைக் காண்போம்.
விபீடணன் கும்பகர்ணனிடம் ""உடலில் தோன்றிய தொளுகழல் (கழலைக் கட்டி) புண்ணை அதன் விஷ நீர் உடலில் பரவாதபடி அறுத்து, அதிலுள்ள அசுத்தமான உதிரத்தை வெளியேற்றி, காரத்தைப் பொருந்த வைத்துச் சுட்டி, உலர்த்தி அதற்குரிய வேறொரு மருந்தினால் துயரம் நீங்கப் பெறுவார்கள்'' என்று கூறியதாகக் கம்பராமாயணம்
கூறுகிறது.
""உடலிடைத் தோன்றிற் றொற்றை
அறுத்ததின் உதிரம் மூற்றிச்
துடறுறச் சுட்டு வேறொர்
மருந்தினால் துயரம் தீர்வர்''
(கும்பகர்ணன் வதைப்படலம் 46)

காயம்பட்ட புண்ணுக்கு பஞ்சு வைத்துக் கட்டும் மருத்துவ வழக்கம் அக்காலத்தில் இருந்தது என்பதை, "பஞ்சியும் களையாப் புண்ணர்'(353, வரி.16) என்று புறநானூறு கூறுகிறது.
மருத்துவ குணம் கொண்ட நெல்லிக்காய் மகத்தான சிறப்பைப் பெற்றதாகும். மக்களிடையே சர்க்கரை நோய் பெருகிவிட்ட இக்காலச் சூழ்நிலையில் நெல்லிக்காய் அருமருந்தாகப் பயன்படுகிறது. அதற்கு வாழ்நாளைக் கூட்டும் மருத்துவக் குணம் அதிகம்.
வேட்டைக்குச் சென்ற அதியமான் பன்னிரெண்டு ஆண்டுக்கு ஒரு முறை காய்க்கும் நெல்லிக்கனியைப் பறித்துக்கொண்டு வந்து ஒüவையாருக்குக் கொடுத்தான். அதற்கு அவர் ""உன்னுடைய சாவைக்கூடக் கருதாமல் நீண்ட நாள் வாழ வேண்டும் என்று அதை எனக்குக் கொடுத்தாயே'' (புறம்-91:6-9) என்று அவனைப் புகழ்ந்து பாடுகிறார். மருத்துவனை "அறவோன்' என்று
நற்றிணை கூறுகிறது.

""அரும்பிணி உறுநர்க்கு வேட்டது கொடாஅது
மருந்தாய்ந்து கொடுத்த அறவோன்'' (நற்.126)

நோய்வாய்ப்பட்டவர்களுக்கு அவர் விரும்பியதெல்லாம் கொடுக்காமல் நோய்க்குத்தக்க மருந்தை ஆராய்ந்து பார்த்துக் கொடுப்பவனை "அறவோன்' என்று குறிப்பிடுகிறார். பழமொழி நானூறு என்ற நூலில், புழைக்கடைப் பச்சிலை பற்றி ஒரு பாடல் உள்ளது.

""அல்லல் ஒருவற்கு அடைந்தக்கால் மற்றவர்க்கு
நல்ல கிளைகள் எனப்படுவார் - நல்ல
வினைமரபின் மற்றதனை நீக்கு மதுவே
மனைமரம் ஆய மருந்து'' (பா.53)

ஒருவனுக்குத் துன்பம் வந்தபோது உற்றார் எனப்படுபவர்கள் அந்தத் துன்பத்தை நீக்க வேண்டும். அப்படிச் செயின், அவர்கள் வீட்டின்கண் உள்ள பச்சிலை மரம் போல்வர் என்பது பாடலின் கருத்து. அக்காலத்தில், வீட்டுக் கொல்லைப்புறத்தில் மூலிகைச் செடிகளை வைத்து வளர்த்தார்கள் என்பதை நன்கு அறியமுடிகிறது. இவ்வாறு வளர்ப்பது நோய்கண்ட காலத்து அவசர மருந்தாகப் பயன்படுகிறது.
பழந்தமிழர் மூலிகைகளைக் கொண்ட "ஆயுர்வேதம்' என்னும் மருத்துவ முறையை நன்கு அறிந்தினர் என்பதை இளங்கோவடிகள் (இந்திரவிழா ஊரெடுத்தகாதை, 43-44) கூறியுள்ளார். மருத்துவன் தாமோதனார், மருத்துவன் நல்லச்சுதனார் என்னும் பெயர்கள் சங்ககாலச் சமுதாயத்தில் புலவர்கள் பலரும் மருத்துவம் அறிந்திருந்தினர் என்பதை உணர்த்துகின்றன.
பதினெண்கீழ்க்கணக்கு நூல்களான திரிகடுகம், ஏலாதி, சிறுபஞ்சமூலம் ஆகிய மூன்றும் தம் பெயரிலேயே மருத்துவக் குறிப்புகளைக் கொண்டு, நாட்டு மருத்துவ நூல்களாகத் திகழ்கின்றன. இப்புலவர்கள் கூறியதை நாம் பின்பற்றினாலே நோயற்ற வாழ்வு வாழலாம்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com